Monday, August 9, 2010

சாலையில் சாவைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கை 62,323 சட்ட அமலாக்கம் முறையாக நடைபெற வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்


அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது 2001ல் படையெடுத்ததிலிருந்து இன்று வரை சுமார் 28,778 பேர் போரில் பலியாகியுள்ளனர். அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் 62,323 பேர் சாலை விபத்தில் இறந்து போயுள்ளனர். சாலை விபத்துக்களில் மோசமான காயங்களுக்கு உள்ளானவர்கள் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்பொழுது போரினால் பாதிக்கப்படும் நாட்டை விட நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் சாலை விபத்துக்களில் ஒட்டு மொத்த குடும்பமே மரணம் என்ற பெயரில் அப்படியே துடைத்தொழிக்கப்படுகிறது. இப்படி நடந்தாலும் கூட சாலை விபத்துக்களைப் பற்றி நாம் ஒன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

2000ல் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 250,429 ஆக இருந்தது. சென்ற வருடத்தில் இது 397,268 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரி 18 பேர் சாலை விபத்துக்களினால் உயிர் இழக்கின்றனர். உலகிலேயே சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று இத்ரிஸ் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் 9,081 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 4,540 பேர் நிரந்தர செயலிழப்புக்கு உள்ளாகின்றனர். சென்ற வருடம் மட்டும் சாலை விபத்துக்களினால் மவெ. 7.8 பில்லியன் செலவானது. ஆகையால் கூடிய வரையில் விபத்துக்களை தடுப்பது ஒரு நல்ல முதலீடாகும் என்றார் இத்ரிஸ்.

சாலையில் ஓடும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குறி. மிகவும் பிரபலமான விலை உயர்ந்த தோயோட்ட மற்றும் ஹோண்டா ரக கார்களில் கோளாறுகள் இருந்ததால் உலக சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வாகனத்தை அதி வேகமாகச் செலுத்துவது, வாகனத்தை திறமையாகச் செலுத்துவது, வாகன நெரிசல், சாலை மோசமான நிலையில் இருத்தல், சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருத்தல் போன்றவை சாலை விபத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்று இத்ரிஸ் கூறினார். பாதசாரிகளுக்கு பிரத்யேகமாக உள்ள வழிகளைப் பயன்படுத்தாமல் வாகனங்கள் ஓடும் சாலைகளையே கடக்கின்றனர். ஓய்வு இல்லாமல் சாலையில் வாகனங்களைச் செலுத்துதல், மோசமான சீதோஷ்ண நிலை போன்றவை அயர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.

குடிபோதையில் வாகனமோட்டியதால் விபத்துக்குள்ளாகி 2,698 பேர் இறந்து போயுள்ளனர். வாகனமோட்டும்பொழுது சாப்பிடுவதாலும், கைபேசியில் குறுந்தகவல் அனுப்புவதாலும் 1,318 பேர் சாலை விபத்து ஏற்பட்டு இறந்து போயுள்ளனர். 16லிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களுடைய பெற்றோரின் வாகனங்களை அவர்கள் அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால் ஏற்படும் விபத்து மொத்த விபத்துக்களில் 41% ஆகும்.

லைசென்ஸ் மற்றும் அமுலாக்கத்தில் நிகழும் ஊழலும் விபத்துக்களுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கின்றன. வாகனமோட்டும் பயிற்சி பெறாமலும், சாலை விதிமுறைகளைக் கற்காமலும், வர்த்தக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அதற்குரிய தகுதி இல்லாமலே மருத்துவச் சான்றிதழ் வழங்குவதும் விபத்துக்களுக்கு இன்னொரு காரணமாக இருக்கிறது.

அமுலாக்க அதிகாரிகளும் வாகனமோட்டும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதில் பாரபட்சத்தைக் காட்டுகிறார்கள். இருக்கை பெல்ட் போடாத அரசாங்க அதிகாரிகளைக் கண்டு கொள்ளவதில்லை ஆனால் மற்றவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் கோலாலம்பூர் வாசிகள் புகார் கூறியுள்ளனர் என்றார் இத்ரிஸ்.

எல்லாவற்றிற்கும் மேலாக சட்ட அமுலாக்கத்தில் உள்ள ஓட்டைகளே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கும் பட்சத்தில், வாகனோமோட்டுனர்கள் தவறிழைக்கத் தயங்குவார்கள் என்றார் இத்ரிஸ்.

விபத்து தொடர்பாக போலீஸ் பதிவில் உள்ள விபரங்களை வைத்துப் பார்க்கும்பொழுது, வேகமாக வாகனத்தைச் செலுத்துவது, மற்ற வாகனங்களை முந்திச் செல்லுதல் ஆகியவற்றுக்கு அடுத்து, சாலையில் உள்ள குழிகளே சாலையில் ஏற்படும் மரணங்களுக்குக் காரணமாக அமைகின்றன என்றார் இத்ரிஸ்.

நிறைய சாலைகளை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தோண்டிக் விட்டு அவற்றை மறுபடியும் புணர் நிலைக்குக் கொண்டு வருவதில்லை. கனரக வாகனங்களும் தங்கள் பங்குக்கு சாலைகளை சேதப்படுத்திவிடுகின்றன. இப்படிச் சாலைகளில் பழுது ஏற்படுத்தி மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இத்ரிஸ்.

வாகனமோட்டுனர்கள் சாலை விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், வாகனங்களும் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதற்கான சாலைகளும் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதனை உறுதி செய்ய சட்டத்தில் முறையான மாற்றங்களைக் கொண்டு அவற்றை உடனடியாக அமலாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment