Monday, August 9, 2010
37 வருட போராட்டத்திற்குப் பிறகு ரோடாமைன் பி இன்னும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது!
எப்பொழுதோ தடை செய்யப்பட்ட ரோடாமைன் என்ற வர்ணம் இன்னும் உணவுப் பொருட்களில் வலம் வருவதைப் பார்க்கும்பொழுது சுகாதார அமைச்சு உணவு சட்டத்தை இன்னும் முறையாக அமல்படுத்தவில்லை என்றே தெரிகிறது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
பெலாச்சானில் ரோடாமைன் பி சேர்க்கப்பட்டிருப்பதாக 1973ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டுபிடித்து அறிவித்தது. அதற்குப் பிறகு 1983, 1993, 1995, 1999, 2000, 2001, 2002, 2007 மற்றும் 2008 வருடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் ரோடாமைன் பி பெலாச்சானோடு சேர்த்து இன்னும் நிறைய உணவுப் பொருட்களில் இருப்பது தெரிய வந்தது.
ஒவ்வொரு முறையும் உணவில் ரோடாமைன் பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சோதனைகள் காட்டியபொழுது, சுகாதார அமைச்சுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவெல்லாம் பயனளித்ததாகத் தெரியவில்லை. இரு தசாப்தங்கள் கடந்தும் உணவில் ரோடாமைன் பி இன்னும் பயன்படுத்தப்படு வருகின்றது என்றார் இத்ரிஸ்.
புற்றுநோயை வரவழைக்கும் ரோடாமைன் பி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதை உணவுக்கு வர்ணம் கொடுக்க அறவே பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களுக்கும் துணிக்கு வர்ணம் கொடுக்கவுமே இந்த வர்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.
உணவு சட்டம் 1985 படி, ரோடாமைன் பியை உணவில் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்துபவர்களுக்கு மவெ. 5,000 அபராதம் அல்லது 2 வருடத்திற்கு மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார் இத்ரிஸ்.
உணவு மற்றும் போதைப்பொருள் சட்டம் 1952ன் கீழ் ரோடாமைன் பி உணவில் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அப்படியானால் இந்த வர்ணத்தை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கான தடை ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் ஆகிவிட்டன.
ஆகக் கடைசியாக ஏப்ரல் 2010ல் பி.ப.சங்கம் மேற்கொண்ட சோதனையில், கோலாலம்பூரில் வாங்கப்பட்ட 2 பிளாச்சான் மாதிரிகளிலும் நொறுக்குத் தீனியிலும் ரோடாமைன் பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சோதனைகள் காட்டியுள்ளன. ரோடாமைன் பியை உணவில் உபயோகிக்கத் தடை ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் ஆகியும் இன்னும் உணவுப் பொருட்களில் ரோடாமைன் பி இருப்பது அதிர்ச்சியைத் தருவதாக இத்ரிஸ் கூறினார்.
ரோடாமைன் பியை உணவில் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்திலேயே இந்நிலை நிலவுகிறது. மலேசியாவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. உணவில் அதிகமாகச் சேர்க்கப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.
ரோடாமைன் பி வர்ணம் கொண்டு வரும் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உணவு சட்டம் 1985 முழுமையாக அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இரசாயன வர்ணங்களை உணவில் பயன்படுத்தும் நோக்கத்திற்காக விற்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும். வர்ணம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை பயனீட்டாளர்கள் வாங்காமல் இருக்கும் பொருட்டு பயனீட்டாளர்களுக்கான கல்வித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். சந்தைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை அவ்வப்பொழுது சோதைனைக்கு அனுப்பி அவற்றில் ஆபத்தான வர்ணங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
சட்டத்திற்கு எதிராக உணவில் வர்ணங்களை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் அபகரிக்கப்பட வேண்டும். வர்ணங்கள் சேர்க்கப்பட்ட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுப் பொருட்கள் ஆபத்தானவை என்ற காரணத்தால் அவற்றைப் பயனீட்டாளர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment