Sunday, July 4, 2010

அசுத்தமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பினாங்கில் மிகவும் அசுத்தமாகவும் அருவருக்கத் தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்தி மேம்படுத்தும் நடவடிக்கையில் பினாங்கு நகராண்மைக் கழகம் இறங்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

பினாங்கில் உள்ள சவ்ராஸ்தா, சென்ட்ரல், பாயான் பாரு, ஆயர் ஈத்தாம், பூலாவ் தீக்கூஸ், ஜெலுத்தோங், ரைபல் ரேன்ச், தாமான் துன் சார்டோன், பாடாங் தேம்பாக், பட்டர்வெர்த்தில் உள்ள ஜெட்டி லாமா ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்விலிலிருந்து இங்கு சுத்தம் மிகவும் அரிதாகவே கடைபிடிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது என்றார் இத்ரிஸ்.


தரைகள் அசுத்தமாகவும் வழுக்கும் நிலையிலும், ஓட்டைகள் நிறைந்தும் இருந்தன. குப்பைகள் ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. கூரையில் ஒட்டடை ஆங்காங்கு தொங்கிக் கொண்டிருந்தது. எலிகளும் இதர ஜந்துக்களும் திரிந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக அருகில் உள்ள சாக்கடைகளில் குப்பைகளும் மண்ணுமாக நிறைந்து கிடந்த இடங்களில் ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அழுக்கான தரைகளிலேயே காய்கறிகளையும் இறைச்சிகளையும் கிடத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு சந்தையில் விற்பனைக்கு உள்ள தேங்காய்கள் அடைபட்டிருந்த சாக்கடையில் வைக்கப்பட்டிருந்தன என்றார் இத்ரிஸ்.

வழுக்கும் தரைகளும் சந்தைக்கு வருபவர்களுக்கு சில வேளைகளில் ஆபத்தாகவே முடிகிறது. குறிப்பாக சந்தைக்கு வரும் முதியோர்களுக்கு இது பெருத்த ஆபத்தாக முடிகிறது.


சந்தைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், குப்பைக் கூளங்களும் எஞ்சிய கெட்டுப்போன அழுகிய பொருட்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் உள்ளூர் அரசாங்க சட்டம் 1976ன் கூறுகிறது. ஆனால் தற்போதைய சந்தை நிலையைப் பார்க்கும்பொழுது இதனை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை என்றார் இத்ரிஸ்.


ஆகையால் கீழ்கண்ட விதிமுறைகளை சந்தை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பரிந்துரை செய்கிறது. சந்தைகள் அன்றாடம் சுத்தம் செய்யப்பட வேண்டும். காய்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் தண்ணீர் நிரப்பப் பயன்படுத்தப்படும் கலன்கள் தினந்தோறும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் தாங்கிகள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட வேண்டும். சுகாதார அதிகாரிகள் அவ்வப்பொழுது சந்தைகளில் விற்கப்படும் இறைச்சிகளை சோதனையிட்டு அவற்றில் பாக்டீரியா இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நகராண்மைக் கழகம் சந்தை தூய்மையாக இருப்பதை அவ்வப்பொழுது சோதித்துக்கொண்டு இருப்பதும் நன்மை பயக்கும் என்றார் இத்ரிஸ்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கு சந்தைகளில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் மற்ற இடங்களில் உள்ள சந்தையின் சூழ்நிலையையும் ஓரளவுக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆகையால் அந்தந்த மாநிலங்களில் உள்ள நகராண்மைக் கழகங்களும் சந்தை தூய்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும். செயலில் இறங்கத் தவறிய நகராண்மைக் கழகங்கள் மீது வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

No comments:

Post a Comment