Thursday, July 1, 2010

ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருத்த கேட்டை உண்டாக்கும் தடை செய்யப்பட்ட என்டோசல்பான் எளிதாகக் கிடைக்கிறது

என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லியை பயனீட்டாளர்கள் தொடர்ந்து உபயோகிப்பதை பூச்சிக்கொல்லி வாரியம் இன்னும் துடைத்தொழிக்காமல் இருப்பது வேதனையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

என்டோசல்பான் மிகவும் மோசமான நச்சுப்பொருளாகும். என்டோசல்பான் உயிரினங்களின் ஹோர்மோன் சுரப்புகளின் இயக்கத்தில் மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துவதால், பூச்சிக்கொல்லி சட்டம் 1974ன் கீழ் அதன் உபயோகம் தடை செய்யப்பட்டது என்று இத்ரிஸ் கூறினார்.

பூச்சிக்கொல்லி வாரியம் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் என்டோசல்பான் பயன்பாட்டுக்கான பதிவு 15.8.2005ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தது. இந்த நஞ்சை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் பூச்சிக்கொல்லி சட்டம் 1974 பிரிவு 53Aன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பபடாத பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது குற்றம் என்றும் அப்படி வைத்திருப்பவர்களுக்கு மவெ. 10,000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மை காரணமாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்ற காரணத்தாலும், ஸ்டோக்ஹோல்ம் ஒப்பந்தத்தின் கீழ் என்டோசல்பானை உலகம் முழுக்க தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.


ஆனால் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் கெடாவில் உள்ள கெர்பான், சங்லாங், பென்டாங் மற்றும் சீக் போன்ற இடங்களில் தடை செய்யப்பட்ட இந்த நஞ்சு மிகவும் எளிதாகக் கிடைக்கிறது.

விவசாய இரசாயனங்களை விற்பனை செய்யும் கடைகளில் இருந்து இந்த நஞ்சை எளிதில் வாங்கிவிடலாம். என்டோசல்பானை பார்வையில் படுமாறு கடைகளில் வைத்திருப்பதில்லை. கேட்டால் மட்டும் எடுத்துக்கொடுக்கிறார்கள். ஒரு லிட்டர் பூச்சிக்கொல்லி மவெ.32.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்டோசல்பான் நிரப்பப்பட்ட போத்தலில் லேபல் எதுவும் கிடையாது.

நெல் மற்றும் நாற்றுக்களை தின்னும் நத்தைகளைச் (siput gondang emas) சாகடிக்க என்டோசல்பானை பயன்படுத்தப்படுவதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லி 10லிருந்து 15 நிமிடங்களுக்குள் நத்தைகளை சாகடித்துவிடும். மற்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் நத்தைகளைச் சாகடிக்க குறைந்தது 2 வாரங்களாவது பிடிக்கும்.

இந்த வட்டாரங்களில் உள்ள நெல் விவசாயிகளும் தாங்கள் என்டோசல்பான் பயன்படுத்துவதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள். இதனை “சீன விஷம்” (Racun Cina) என்ற பெயரிலேயே இவர்கள் அழைக்கிறார்கள். என்டோசல்பான் பாட்டிலில் சீன எழுத்துக்களில் எழுதியிருப்பதால் இந்தப் பெயர்.

என்டோசல்பானைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. மூட்டு பலவீனத்தால் அவதிப்படுகின்றனர். இந்த நஞ்சு நத்தைகளை உடனடியாகக் கொல்லும் அதே சமயத்தில் விவசாயிகளும் பக்க விளைவுகளால் அவதிப்படுகின்றனர் என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் இப்போதைக்கு சந்தையில் உள்ள மிகவும் மோசமான நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியாகும். உடலில் உள்ள ஏஸ்ட்ரோஜன் ஹோர்மோன்களின் இயக்கத்தில் ஊறு விளைவித்து, மனித மற்றும் பிராணிகளின் இன உற்பத்தி உறுப்பில் பல விதமான சேதங்களை ஏற்படுத்துகிறது. வலிப்பு, மனநல பிரச்னைகள், பக்கவாதம், மூளை வீக்கம், மூளைத்திறன் பாதிப்பு போன்றவற்றையும் இன்டோசல்பான் ஏற்படுத்துவதாக நிறைய ஆய்வுகள் உறுதி செய்கின்றன என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்டோசல்பான் வனவிலங்குகளிடையே, குறிப்பாக வண்டுகளிடையே அதிக நச்சுத்தன்மையை உண்டாக்கும் என்றும் அமெரிக்காவின் தேசிய வனவிலங்கு சங்கம் கூறுகிறது. பறவைகள், வாத்து இனங்கள், காடை போன்றவற்றுக்கும் என்டோசல்பான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீரில் வாழும் உயிரினங்களுக்கும் என்டோசல்பான் பெருத்த கேடுகளைச் செய்கிறது. என்டோசல்பானால் நிறைய மீன்கள் சாகின்றன.

என்டோசல்பான் கொண்டு வரும் சொல்லொணா கேடுகளைக் கருத்தில் கொண்டு அதன் உபயோகத்தை கடுமையான சட்டவிதிகளின் மூலம் தடை செய்ய வேண்டும். என்டோசல்பான் கொண்டு வரும் மோசமான பாதிப்புக்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும். நத்தைகளை அழிக்க பாதுகாப்பான வழிமுறைகளை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு வாத்துக்களை வளர்க்கலாம். வாத்துக்கள் நத்தைகளை உண்பதால் நத்தை பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

என்டோசல்பான் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதனைத் தடை செய்துவிட்டோம் என்று காகிதத்தில் மட்டும் பதிவு செய்துவிட்டு, என்டோசல்பான் விற்கப்படுவதையும், விவசாயிகள் அதனை வாங்கிப் பயன்படுத்தி மனித குலத்தையும், பிராணிகளையும், சுற்றுச்சூழலையும் நஞ்சுக்குள்ளாக்குவதும் தொடர்ந்து கொண்டிருந்தால் அந்தத் தடையினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment