Sunday, July 4, 2010

பள்ளி மாணவர்கள் உழவர்களாகத் திகழ வேண்டும் காய்கறிகளின் விலை குறையும் ஆரோக்கியம் உயரும் : சுப்பாராவ் வேண்டுகோள்

பள்ளி மாணவர்கள் தொழில் நுட்பம், கணினி, தொழில்திறன், அறிவியல் போன்ற புறப்பாட நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், விவசாயத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

விவசாய நடவடிக்கை என்றாலே கைகளை அசுத்தப்படுத்தும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு, விவசாயம்தான் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், வாழ வைக்கும், என்ற உண்மையை ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும் என பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

அதிலும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் உண்மை நிலவரங்களை எடுத்துரைப்பது மிக அவசியமாகும் என்றார் அவர். உலகளாவிய நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறட்சி, நீரில் வாழும் உயிரினங்களின் பாதிப்பு, நிலங்கள் மலடாவது, வெள்ளம் போன்றவை ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

மக்கள் இயற்கையை எவ்வளவு சேதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதிகமாகவே சேதப்படுத்துகின்றார்கள் என்றார் சுப்பாராவ்.

விவசாயிகள் இரசாயனம் கலந்த உரங்களை தங்களது பயிர்களுக்கு தெளித்து பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை அழிக்கும் அதே நேரத்தில் நன்மை செய்யும் பூச்சிகளையும் பறவைகளையும் கூட அழித்துவிடுகின்றார்கள்.

நிலத்தில் இரசாயன உப்புகளை கொட்டி கொட்டி, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைக் கொன்று அதன் ஆற்றலை, செழிப்பை, தன்மையை அழித்து மண்ணை மலடாக்கி வருகின்றனர்.


பினாங்கு தஞ்சோங் பூங்கா இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 44 மாணவர்களும் 4 ஆசிரியர்களும், பி.ப.சங்க பணிமனையில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிலரங்கின் போது சுப்பாராவ் இந்தத் தகவல்களைக் கூறினார்.

டாக்டர் அருணாசல பாண்டியா அவர்களை தலைமைஆசிரியராகக் கொண்ட இந்த இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி மேலும் அறிந்து தெரிந்துகொள்வதற்காக, பி.ப.சங்கத்தில் இருக்கும் மண்புழு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயம் தொடர்பான செயல் விளக்கங்கள் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டது.

இப்பொழுது உள்ள விவசாயிகள் செயற்கை இரசாயன உரத்தை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிடாவிடில், எதிர்காலத்தில் மக்கள் பலதரப்பட்ட நோய்களுக்கு ஆளாவார்கள். இந்த அழிவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் தலைமுறையினர் இயற்கையை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றார் சுப்பாராவ்.


குறிப்பாக பள்ளி மாணவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறிய சுப்பாராவ் உழவுத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடத் தொடங்கினால்தான் இவ்வுலகை ஓரளவாவது காப்பாற்ற முடியும் என்றார்.

மண்ணைத் தொடுவது, மண்புழுக்களை வளர்ப்பது, இயற்கை விவசாயத்திற்குத் தொடர்புடைய மாட்டுச் சாணம், கோமியம் மற்றும் இயற்கை தொடர்புடைய பொருட்களை தேர்வு செய்து தயார் செய்வது போன்றவற்றில் இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.
இவற்றை அசிங்கம் மற்றும் அழுக்கு என்கின்றனர் இவர்கள். ஆனால் இவற்றால் நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தி கூறிய சுப்பாராவ், இரசாயனத்தால் ஏற்படும் பாதிப்புக்களை விவரமாக எடுத்துச் சொன்னார்.


கலந்து கொண்ட மாணவர்களுக்கு, பி.ப.சங்க பணிமனையில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மண்புழுக்களின் பயன்கள் எடுத்துச் சொல்லப்பட்டன. அந்த மண்புழுக்களுக்கு எம்மாதிரியான உணவு தரப்பட வேண்டும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டது. மண்புழுக்கள் தரும் எருவையும் மாணவர்கள் தொட்டுப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

அதன் பின் மீன் கரைசல், எலுமிச்சை முட்டை கரைசல், பூச்சி விரட்டி, மண்புழு நீர் ஆகிய இயற்கை பூச்சிவிரட்டிகள் மற்றும் பயிர் ஊக்கிகள் தொடர்பான விளக்கங்கள் சொல்லித் தரப்பட்டன.

இறுதியாக கற்றுக்கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் 2 வெண்டை விதைகள் கொடுக்கப்பட்டு அவற்றை நடும் முறை விளக்கப்பட்டது. வந்திருந்த மாணவர்கள் ஒரு சிறிய பையில் வெண்டை விதையை விதைத்து அதனை தங்களது இல்லம் கொண்டு சென்றனர்.

காய்கறிகளின் விலைகள் மலைபோல் உயர்ந்துகொண்டே போகின்றன. ஆரோக்கியமான காய்கறிகள் கிடைப்பதில்லை. காய்கறிகளை சொந்தமாக நட வேண்டுமென்றால் நிலம் இல்லை. இதற்காக கவலைப்படாமல், பழைய வாளி, தொட்டி, டயர் போன்றவற்றில் இரண்டு அல்லது மூன்று விதைகளை நட்டு செடி வளர்க்கலாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment