கைப்பேசிகள் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துக்களை அதிகரிப்பதால், கைப்பேசிகளில் அது தொடர்பான அபாய எச்சரிக்கைகள் பொறிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.
தொலைபேசியிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிர் வீச்சுக்களால் மூளைப் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் கைப்பேசி உற்பத்தியாளர்கள் லேபலில் இந்தத் தகவலைக் குறிப்பிட வேண்டும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கைபேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இன்னும் அதிகமான ஆபத்துக்களைக் கொண்டு வரும் என்பதையும் இந்த அபாய அறிவிப்பில் குறிப்பிட வேண்டும் என்றார் இத்ரிஸ்.
கடந்த சில தசாப்தங்களில் மின்கம்பி இல்லாத தொலைத்தொடர்பு முறை பெருத்த முன்னேற்றம் கண்டுள்ளது. கைப்பேசியிலிருந்து வரும் மின்காந்தக் கதிர் மூளைக்குப் பக்கத்திலேயே தொடர்ச்சியாக வெளியாக்கப்படுவதால்தான் இந்த மூளைப்புற்று அபாயம் ஏற்படுகின்றது.
கைப்பேசியை தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேற்பட்டு உபயோகித்து வருபவர்களுக்கு மூளைப்புற்று வரும் ஆபத்துக்கள் பன்மடங்கு பெருகுவதாக சுவீடனில் உள்ள ஓரேபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் லென்னார்ட் ஹார்டல் கூறுகிறார். கைப்பேசி உபயோகிப்பட்ட ஒவ்வொரு 100 மணி நேரத்திற்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 5 விழுக்காடு அதிகரிக்கிறது என்கிறார் இவர்.
தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்குக் கைப்பேசி உபயோகிப்பவர்களுக்கும், அளவுக்கு அதிகமான வருடங்களுக்கு உபயோகிப்பவர்களுக்கும்,அதிகமான மின்காந்த கதிர்களை வெளிப்படுத்தும் கைப்பேசிகளை உபயோகப்படுத்துபவர்களுக்கும், ஒரு பக்க காதிலேயே பேசுபவர்களுக்கும், வயது குறைந்தவர்களுக்கும் கைப்பேசிகளால் மூளைப் புற்று வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்றார் இத்ரிஸ்.
குழந்தைகளின் மூளையும் நரம்பு மண்டலமும் வளரும் பருவத்தில் இருக்கின்ற காரணத்தால் கைப்பேசி, வீ-பி போன்ற சாதனங்கள் அவர்களுக்கு இன்னும் அதிகமான அபாயங்களை அள்ளித்தரக்கூடியவை. குழந்தைகளுடைய தலை சிறியது. மண்டை ஓடும் இன்னும் உறுதி பெறாத நிலையிலிருக்கும். ஆகையால் மின்காந்தக் கதிர்கள் மிகவும் எளிதாக குழந்தைகளின் மண்டையைத் துளைத்துப் பாயும்.
கைப்பேசி,மரபணுக்களுக்கு (DNA) நிரந்த சேதத்தைக் கொண்டு வருவதாகவும் சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுவும் முக்கியமான காரணமாகும். செல்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் இடையூறுகள் ஏற்பட்டு செல்கள் அபரிமிதமாகப் பெருகத் தொடங்குகின்றன. இதே நிலை மூளையிலும் ஏற்படுகிறது. மூளையில் நஞ்சு சேர விடாமல் தடுப்பதற்கு உடம்பில் நோய் எதிர்ப்பு செயல்முறை இருக்கும். ஆனால் கைப்பேசி கதிர்வீச்சுக்கள் இதனைத் உடைத்தெறிகின்றன என்றார் இத்ரிஸ்.
புற்றுநோயைத் தவிர்த்து வேறு சில ஆரோக்கியக் கோளாறுகளையும் கைப்பேசி ஏற்படுத்துகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், நினைவாற்றல் பாதிப்பு, எலும்பு பலவீனம், ஆட்டிஸம், மின்காந்தக் கதிர்களால் ஏற்படும் அயர்வுஇ மன அழுத்தம், தவைவலி, மனக்கவலை, கவனச் சிதறல் மற்றும் தூக்கமின்மை எல்லாம் கைப்பேசியால் ஏற்படும்.
கைப்பேசிகளின் இந்த ஆபத்துக்களை பயனீட்டாளர்கள் இன்னும் முழுமையாக உணராமலேயே இருக்கின்றனர். ஆகையால் அராசங்கம் பயனீட்டாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கைப்பேசி புற்றுநோயை வரவழைக்கும் என்ற விபரத்தை கைப்பேசியில் பொறிக்க வேண்டும். 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை கைப்பேசி உபயோகிக்க அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கைப்பேசியிலிருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்களால் ஏற்படும் ஆபத்துக்க¨ளை மக்களுக்கு அறிவிக்க பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
பயனீட்டாளர்கள் முடிந்த வரையில் கைப்பேசி உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. இதனை ஆபத்து அவசரங்களுக்கு பயன்படுத்தும் கருவியாகவே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கைப்பேசி பயன்படுத்துபவர்கள் ஸ்பீக்கர் முறையை உபயோகித்து கைப்பேசி காதிலிருந்து 20 செமி தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரையில் வீட்டுத் தொலைபேசிகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்
No comments:
Post a Comment