Thursday, January 7, 2010

சீனிக்கான உதவித் தொகையை மீட்டுக்கொள்ளுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

சீனிக்குக் கொடுக்கும் உதவித் தொகையை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும். சீனி என்ற பெயர் கொண்ட மெதுவாகக் கொல்லும் நஞ்சை மக்கள் மலிவான விலையில் வாங்கி உண்பதற்கு ஏதுவாக இந்த உதவித் தொகை கொடுக்கப்படுகிறது. நாட்டு மக்களை நோயாளிகளாக்கும் இப்படிப்பட்ட ஓர் உதவித் தொகை அவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

இப்போதையை சீனியின் விலையில் மேலும் 20 காசு என ஏற்றம் காணும் பட்சத்தில், அரசாங்கம் 2010 வருடத்தில் மவெ. 1 பில்லியன் உதவித் தொகை வழங்க வேண்டியிருக்கிறது. இது ஒரு கிலோகிராம் சீனிக்கு 80 காசு கழிவு என்பதை அடிப்படையாகக் கொண்டது.

மலேசியர்கள் ஒரு நாளைக்கு 26 தேக்கரண்டி சீனி உட்கொள்கிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமான சீனியை உட்கொள்ளும் பழக்கம் 1.2 மில்லியன் மலேசியர்களை நீரிழிவு நோயாளிகளாக ஆக்கியுள்ளது. இவர்களில் 98 விழுக்காட்டினருக்கு அளவு அதிகமாக சீனி உட்கொள்ளுதலோடு தொடர்புடைய இரண்டாம் வகை நீரிழிவு கண்டுள்ளது.

சீனியை சந்தை விலைக்கே விற்க வேண்டியதே சரியானதாகும். வெள்ளை சீனி உணவின் அடிப்படை தேவையே கிடையாது. அதனுடைய உட்கொள்ளும் பட்சத்தில் அளவுக்கு அதிகமான ஆரோக்கியக் கேடுகள் தேடி வரும் என்றார் இத்ரிஸ்.

சீனிக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகையை மீட்டுக்கொள்ளும் பட்சத்தில், சீனியின் விலை 80 காசு அதிகரிக்கும். ஆனால் சீனி சேர்க்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலையில் பெருத்த மாற்றத்தை விளைவிக்காது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி தேநீர் மற்றும் மைலோவுக்கு ஆகும் உண்மையான செலவு 45 காசு மட்டுமே. ஆனால் அவை இப்பொழுது முறையே மவெ.1.00க்கும் மவெ. 1.20க்கும் விற்கப்படுகின்றன.

சீனிக்கு கொடுக்கப்படும் உதவித் தொகை குளிர்பான மற்றும் சீனி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கே இலாபத்தை அள்ளிக்கொடுக்கிறது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாட்டு மக்கள் மலேசிய மக்களை விட குறைவான வருமானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சீனியை இன்னும் அதிகமான விலைக்குதான் வாங்குகிறார்கள்.

சீனிக்கு வழங்கப்படும் உதவித் தொகை மவெ. 1 பில்லியனை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஏழ்மை நிலையைப் போக்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் இத்ரிஸ்.

ஆரோக்கியத்திற்கு சொல்லொணா கேடுகளை விளைவிக்கும் சீனிக்கு உதவித் தொகை வழங்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இந்தத் தொகையை இதர ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதே நன்மை பயக்கும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment