Sunday, January 17, 2010
தைப்பூச விழாவின்போது நுரைப்பப் பாத்திரங்களுக்கு தடை விதியுங்கள் உணவு வீணாக்கப்படுவதை நிறுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் சுப்பாராவ் வேண்டுகோள்!
இம்மாதம் 30ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச சமய விழாவின்பொழுது ஏறக்குறைய 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதும் உள்ள முருகன் ஆலயத்தில் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவிருக்கும் நேரத்தில், இந்த பக்தர்களுக்காக திறந்த மனத்துடன் இலவச உணவு வழங்கவிருக்கும் தொண்டு நிறுவனங்கள் தயவு கூர்ந்து போலிஸ்திரின் எனப்படுகின்ற நுரைப்பப் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதே நேரத்தில் கூடுதல் உணவை சமைத்து குப்பைத்தொட்டியில் கொட்டும் பழக்கத்தையும் நிறுத்தும்படியும் பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.
உலக அளவில் பருவ நிலை மாற்றத்தைப் பற்றிப் பேசப்பட்டு வருகின்ற இக்காலக்கட்டத்தில், தைப்பூச பக்தர்களும் காற்றில் மாசு கலப்பதைத் தடுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அவர் கேட்டுகொண்டார்.
தைப்பூசத்தின்போது, வருகின்ற பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் நல்லுள்ளம் கொண்ட தொண்டூழிய அமைப்புக்கள், உணவுகளையும் பானங்களையும் வழங்குவது ஒரு வழக்கமான செயல்பாடாகும்.
அது போன்ற உணவுகள் வழங்கப்படும்போது பெரும்பாலும் நுரைப்பப் பாத்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நுரைப்பப் பாத்திரங்கள் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பல கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் இந்த நுரைப்பப் பாத்திரங்கள் குப்பைக் கூளங்களாக உருவெடுக்கின்றன. நுரைப்பக் குப்பைகள் மண்ணோடு மண்ணாக மக்கி அழிந்து போவதற்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் பிடிக்கும் என்றார் சுப்பாராவ்.
நுரைப்பப் பாத்திரங்கள் புற்றுநோயை வரவழைக்கும் ஸ்டைரின் என்ற இரசாயனத்தை வெளிப்படுத்துகின்றன. எண் “6” அல்லது “PS” என்று பாத்திரத்தின் அடிப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது நுரைப்பமாகும்.
நுரைப்பம் புதியதாக இருக்கும் பட்சத்தில் அதனுள் உணவை நிரப்பும்பொழுது அதிலுள்ள இரசாயனங்கள் உணவுக்கு இடம் பெயர்கின்றன. நுரைப்பப் பாத்திரம் பழையதாக இருந்தாலும் ஆபத்துதான். வெப்பம் காரணமாக அதிலிருந்து இரசாயனங்கள் கசிகின்றன.
இப்படி நுரைப்பப் பாத்திரத்தில் உணவு உட்கொள்ளும்பொழுது அதில் உள்ள இரசாயனங்கள் படிப்படியாக உணவின் மூலமாக நம் உடலுக்குள் சென்று நமக்கு ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன என்றார் சுப்பாராவ்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு, பிரிவு 2B ஸ்டைரினை புற்றுநோயை வரவழைக்கும் வஸ்துவாக வரையறுத்துள்ளது. ஸ்டைரின் உடலில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தும். இன விருத்தி உறுப்புக்களுக்கும் ஸ்டைரின் சேதத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த அளவு ஸ்டைரினுக்கு ஒருவர் இலக்கானாலும் கூட உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் கணிசமான அளவுக்குக் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பணியிடத்தில் ஸ்டைரின் வாயுக்களை தினந்தோறும் சுவாசித்து வரும் பெண்கள் மாதவிடாய்க் கோளாறுகளினால் அவதிப்படுவதாக ஆய்வுகள் காட்டுவதாகவும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவில் சாலை விபத்துக்கு அடுத்து அதிமான மக்கள் இறந்துபோவது புற்றுநோயால்தான். ஒவ்வொரு வருடமும் சுமார் 40,000 பேருக்குப் புற்றுநோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் 4 மலேசியர்களில் ஒருவருக்கு தன் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படுவதாகத் தேசிய புற்றுநோய் பதிவகம் கணித்துள்ளது. ஆகையால் மலேசியர்கள் நுரைப்பப் பாத்திரத்தை உபயோகிப்பதைக் குறைத்துக் கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் ஏற்படும் பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்ளலாம் என்றார் சுப்பாராவ்.
அதே நேரத்தில், அதிக அளவு உணவு விரயத்தை நிறுத்தும்படியும் சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார். பெரும்பாலான தண்ணீர் பந்தல் பொறுப்பாளர்கள், ஒரே மாதிரியான உணவுகளை சமைப்பதால் பலர் அதனை பெற்றுக்கொண்டு தூக்கி எறிந்துவிடுகின்றனர் அல்லது பெற்றுகொள்ள மறுத்துவிடுகின்றனர். இது மிகப் பெரிய உணவு விரயத்தை ஏற்படுத்தி விடுகிறது என்றார் சுப்பாராவ்.
சமயம், உணவை மதிக்கச் சொல்கிறது. தூக்கி எறியச் சொல்லவோ அல்லது மிச்சப்படுத்தவோ சொல்லித்தரவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
தைப்பூசம் உன்னதமான ஒரு சமய விழாவாக இருக்கின்ற காரணத்தால், பக்தர்கள் அன்றைய நாளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே உகந்தது. ஆகையால் தைப்பூசத் திருநாளன்று நுரைப்பம் உபயோகிப்பதை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான பாத்திரங்களிவ் உணவுகளையும் பானங்களையும் வழங்குவதற்கான மாற்று வழிகளை அனைத்து தரப்பினரும் கலந்தாலோசிக்க வேண்டும். பக்தர்கள் தங்கள் சொந்த பாத்திரங்களைக் கொண்டு வருவது கூட நன்மை பயக்கும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment