Thursday, December 3, 2009

உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!

சென்னை மயிலாப்பூருக்கு அருகில் வாழ்பவன் நான். தினசரி அந்தப் பகுதியை குறைந்தபட்சம் இரண்டு முறை கடக்கும் வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்து மதத்தில் பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் ஆத்திகமே கதியென்று கிடக்கிறவர்களுக்கு, சுற்றியிருக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு உணர்வையே இந்தத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. திருவிழா காலங்களை நம்பியே மட்பாண்டம் செய்யும் குயவர்கள், பொம்மை விற்பவர்கள், சின்னச்சின்ன பொருட்களை விற்கும் எளிய மனிதர்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைத் தவிர, இந்தத் திருவிழாக்களில் மிகப் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. இதுவும் எவ்வளவு நாள் நீடித்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. விரைவில் இவற்றுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது மட்டும் நி்ச்சயம்.


காரணம், ஒரு காலத்தில் பண்ருட்டியில் இருந்து மண் பொம்மைகள், சேலத்தில் இருந்து கல்சட்டிகள், ராமநாதபுரத்தில் இருந்து பனையோலை முறங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி தொலைவில் இருந்து வருவதெல்லாம் நின்றுவிட்டது. அதைவிட இன்னும் சோகம், இந்தத் திருவிழாவின்போது, பனையோலை முறத்தைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் முறத்தை நான் பார்த்தேன்.

மயிலையில் ஆண்டுதோறும் மிகப் பெரிதாக நடக்கும் விழா பிரம்மோத்சவம்-63 நாயன்மார்கள் விழா. திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்து, அதாவது ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடைபெறுகிறதாம். 1909ல் 50,000 பங்கேற்றிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் பாடலான "பீப்பிள்ஸ் பார்க் வழிநடைச் சிந்து" என்ற புத்தகத்தில் இந்தத் திருவிழா காலத்தில் நடத்தப்படும் "கிளாஸ்காரன் தண்ணீர் பந்தல்" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அப்போதிருந்து திருவிழாவில் தண்ணீர் பந்தல் நடப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது.

இந்த விழாக்களின்போது போக்குவரத்து மாற்றப்படும். ஏற்கெனவே குறுகலாக உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றங்கள், ஜனநெருக்கடி அதிகரிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. பிரம்மோத்சவம் விழாவின் போது, மயிலாப்பூர் பஸ் டெபோ அல்லது மயிலை குளம் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக ஆர்.கே. மடம் சாலையில் உயரஉயரமான பந்தல்கால்களை நட்டு பந்தல் அமைக்கப்படும். அந்தப் பந்தல்கள் யாருக்கு நிழல் தரும் என்று தெரியவில்லை. ஆனால் உற்சவம் வரும் சாமி அந்த இடங்களில் நின்று செல்லும் என்று நினைக்கிறேன். இவை போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் சாலையின் நடுவில்தான் இந்தப் பந்தல்களை அமைப்பார்கள்.

ஏப்ரல் முதல் வாரம் அறுபத்து மூவர் திருவிழா நடந்த நேரத்தில் பகலில் போக்குவரத்து சுற்றிவிடப்பட்டது. அதிக மக்கள் கோயிலை நோக்கி வருவார்கள் என்பதால், அந்தப் பகுதியில் வாகனங்களைத் தடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரவில் அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கண்ட காட்சி எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

லஸ் கார்னர் துவங்கி, மந்தைவெளி அஞ்சல் நிலையம் வரை, குளத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகளிலும் ஏதோ பெரிய போரி்ல் அனைவரும் குத்துப்பட்டு சாய்ந்து கிடந்தது போல, எங்கும் நீக்கமற நிறைந்து காணப்பட்டன பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், சில பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள். இவற்றோடு பாதி தின்றுவிட்டு பிடிக்காமலும், அவசரத்திலும் கீழே போட்ட உணவுப் பண்டங்கள், சோறு, இனிப்பு எல்லாம் கலந்து மயக்கத்தை வரவழைக்கும் நாற்றத்தை சந்தோஷமாகப் பரப்பிக் கொண்டிருந்தன. எல்லா குப்பையையும் ஜனக்கூட்டம் தன் சக்தியைச் செலவழித்து மிதிந்து போயிருந்தது. அதனால் எல்லாம் நசுங்கி கெட்டுப் போகத் துவங்கியிருந்த நிலையில்தான் அந்த நாற்றம் எழுந்தது. குப்பைக்குள் மாணிக்கம் தேடு்ம் சிலரைப் போல், தளராத மனதுடன் குப்பையள்ளும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அந்த இரவிலும் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர். அநேகமாக அடுத்த நாள் காலை வரை அவர்கள் குப்பையை அள்ளியிருக்க வேண்டும். அவ்வளவு குப்பை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியை கடந்து சென்றபோதும்கூட, சூட்டில் நிறைய பிளாஸ்டிக் பைகள் தார்ச்சாலையோடு ஒட்டிக் கிடந்தன. நாற்றமும் நீங்கயிருக்கவில்லை.

வருபவர் என்ன சாதி, மதம் என்றெல்லாம் கேட்காமல் அன்னதானம் கொடுப்பது நல்ல பண்புதான். ஆனால் அந்த தானம் உலகை, இயற்கையை சூறையாடுவதாக இருக்கலாமா? பங்குனித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடும். இவர்கள் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சரிதான். அதேநேரம், இத்தனை பெரிய கூட்டமும் நோய் தொற்றிக் கொள்ளாமல், சுகாதாரமாக இருக்க வேண்டாமா? அடியார்களுக்கு உணவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ள விரும்புபவர்கள், அதோடு குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமில்லையா? இல்லையென்றால் இந்த ஜென்மத்திலேயே அவர்களுக்கு மட்டுமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம்.

பிளாஸ்டிக் கோப்பைகள் புழக்கத்துக்கு வருதற்கு முன் இப்படிப்பட்ட பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிளாஸ்டிக்கின் விலைதான் அதன் பரவலான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் என்பது எந்த வகையிலும் நிலையான ஒரு தீர்வல்ல. வளங்களை சூறையாடுவது. அன்னதானம் வழங்க வேண்டும், அதிகமாகச் செலவும் ஆகக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தொன்னைகளும், பாக்குமட்டை தட்டுகளும் இருக்கின்றன. அதேநேரம், அவற்றை பயன்படுத்திய பின்னரும் முறைப்படி அகற்றுவது அவசியம்.

அன்னதானம் வழங்குகிறவர்கள் குப்பையை முறைப்படி அகற்ற குப்பைப் பெட்டிகள் வைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் மாநகராட்சி திருவிழா நேரங்களிலாவது இதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். அவசரத்துக்கு ஒதுங்குவதற்காக கோயிலின் வாசல் அருகிலேயே மொபைல் டாய்லெட் வைக்கிறார்கள். அது பத்து நாட்களுக்கு அங்கே நின்று நாறிக் கொண்டிருக்கும். ஆனால் கீழே போடும் குப்பையை அகற்ற ஏற்பாடு கிடையாது.

நாம் எந்த வகையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாகரிக நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளிக்கிழமையானால் கவிச்சி சாப்பிடாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். புரட்டாசி மாசம், ஐப்பசி மாசம் கறி சாப்பிடாதவர்கள் இருக்கிறார்கள். கோயிலுக்கு குளிக்காமல் போகக் கூடாது என்கிறார்கள். செருப்பை கழற்றி வைத்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையலாம் என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் அறிவிக்கப்படாத ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றுவோர், ஏன் அன்னதானம் வழங்கப்படும்போது, சாப்பிட்டுவிட்டு அதே இடத்திலேயே பிளாஸ்டிக் தட்டையும் கோப்பையையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்? சாமி சார்ந்த நடவடிக்கைகளில் சுத்தத்தை கடைப்பிடிப்பவர்கள், கோயிலுக்கு வெளியிலும் அதை கடைப்பிடிப்பதை எந்த அம்சம் தடுக்கிறது?

தன் வீட்டில் யாராவது குப்பையை இறைத்து வைத்துக் கொள்ள விரும்புவோமா? வெளியில் மட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் இறைப்பது ஏன்? தன் வீடு குப்பையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், சாலை, பார்க், பீச், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு குப்பையை போடுகிறோம். ரயில் பயணங்களில் அடுத்தவர் முகத்தில் தண்ணீரும், உணவுப் பருக்கைகளும் தெறி்ப்பது மாதிரி கழுவுவதில், குப்பையை தூக்கியெறிவதில் கைதேர்ந்தவர்கள் நாம். சுற்றுலா தலமானாலும், ரயில் பயணம் என்றாலும் பொது இடத்துக்குப் போகும்போது குப்பையை சரியான இடத்தில் போடுவதுதான் முறை. இந்த எளிய பழக்கத்தை என்றைக்கு நாம் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் நாகரிக சமூகம் என்று அழைத்துக் கொள்கிற தகுதி நமக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment