Thursday, November 26, 2009

உணவு விரயம் செய்வோருக்கு தண்டனை வழங்க வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

மலேசியர்கள் எவ்வளவு கழிவுகளை உற்பத்தி செய்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 42 பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களை நிரப்பும் அளவுக்கு நாம் கழிவுகளை உற்பத்தி செய்கின்றோம்!

2005ல் மலேசியர்கள் 7.34 மில்லியன் டன் திட கழிவுகளை உற்பத்தி செய்திருக்கின்றார்கள். இந்த திடக் கழிவு 2020ல் நாள் ஒன்றுக்கு 30,000 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடப்பொருள் கழிவுகளில்இ 45% உணவு கழிவுகளாகும். (ஆதாரம்: வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு)


இந்த புள்ளி விவரம் ஒன்றும் நம்மை ஆச்சிரியப்படுத்தும் விஷயம் இல்லை. உணவுக் கடைகளிலும்,ரெஸ்டாரண்டுகளிலும், காப்பி கடைகளிலும், வீடுகளிலும் கூட சாப்பிடாமல் மீந்து போகும் உணவுகளைக் சர்வ சாதாரணமாக குப்பை தொட்டிகளில் கொட்டுவதை நாம் கண்கூடாக காணலாம். பிறந்தநாள், திருமண வைபவங்களிலும் சாப்பிட்டு முடிக்கப்படாத உணவுகள் குப்பை தொட்டிகளில்தான் தஞ்சம் புகுகின்றன.

சமூகம் வசதியாகி கொண்டு வரும் போது கூடவே உணவு விரய கலாச்சாரமும் சேர்ந்தே வருகிறது. சிங்கப்பூரில் 2008ல் 558,900 டன் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2002ல் இருந்த அளவைவிட 6.2 மடங்கு அதிகமாகும். ஜப்பானியர்கள் தங்கள் உணவுகளில் நான்கில் ஒரு பங்கை வீசி எறிகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 4.1 மில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். அமெரிக்காவில் வருடத்தில் 30 விழுக்காடு உணவு அதாவது 38.3 பில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு வருடமும் 6 பில்லியன் வெள்ளிக்கு சமமான உணவுகளை வீசுகின்றனர். இது ஆஸ்திரேலிய முழுவதிலும் உள்ள மக்களுக்கு 3 வாரங்களுக்கு உணவு கொடுப்பதற்கு போதுமானதாக இருக்கும்.

நாம் ஏன் உணவுகளை விரயம் செய்யக்கூடாது:

உணவுகளை விரயம் செய்வது அதர்மமான ஒரு செயலாகும். உலகில் பலர் உணவு இல்லாத காரணத்தினாலும், பசியினாலும், பட்டினியாலும் செத்து மடிகின்றார்கள். ஐக்கிய நாட்டு உணவு நிறுவனத்தின் கூற்றுப்படி உலகெங்கிலும் 920 மில்லியன் மக்கள் பசியினால் மரிக்கின்றார்கள்.

அமெரிக்காவில் சாப்பிடாமல் வீணாக்கப்படும் உணவுகள் ஒரு நாளைக்கு 4 மில்லியன் மக்களுக்கு உணவாக கொடுக்கப்படலாம்.

நீங்கள் சாப்பிடாத உணவுக்கு காசு கொடுப்பாது அநியாயமான ஒரு செயலாகும்.

நீங்கள் சாப்பிடாத உணவுகளை வாங்குவதுஇ உணவுக்கு போலியான ஒரு தேவையை ஏற்படுத்தி விடும். வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிடாமல் வீசப்படும் உணவினால் அந்த உணவு தேவை அதிகரிப்பதோடு அதன் விலையும் ஏற்றமடைகிறது. இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அல்லலுறுகின்றன.

உணவு உற்பத்திக்காக நிறைய தண்ணீரும், எரிசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும் கேடாக அமைகிறது.

குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படும் மக்கும் குப்பைகள் உற்பத்தி செய்யும் மெத்தீன் வாயு சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வாயுவாகும்.

உணவு விரயத்துக்கு எதிராக நாம் ஒரு பிரச்சாரம் நடத்தியாக வேண்டும். (பிரிட்டன் உணவை விரும்பு, விரயத்தை வெறு என்ற பிரச்சாரத்தை 2007ல் நடத்தியது) இந்த இயக்கம் உணவுகளை முறையாக திட்டமிடுதல், மீந்த உணவுகளை மிச்சப்படுத்துதல், தேவையான உணவுகளுக்கு மட்டுமே ஆர்டர் செய்வது, கையுடன் ஒரு பையைக் கொண்டு சென்று மிச்ச உணவுகளை வீட்டு நாய்களுக்கு கொண்டு வருவது போன்றவற்றை செய்யலாம். விழக்காலங்கள், பிறந்தநாள், திருமணங்களின் போது விரயத்தைத் தடுப்பதற்கு பயனீட்டாளர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் உணவு விரயத்தைத் தடுக்கும் எளிமையான நடவடிக்கைகளாகும்.

கழிவுகளை மக்க வைத்து உரமாக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். இல்லை என்றால் இந்த வீட்டுக் கழிவுகளும் கூட குப்பை தொட்டியில் போய் சேரும்.

அரசாங்கங்களும், நிறுவனங்களும் தங்கள் நிகழ்ச்சிகளில் கண்மூடித்தனமாக உணவுகளை பரிமாறக்கூடாது. உணவு விடுதிகள் தட்டுக்களில் மீதம் வைக்கும் உணவுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். உணவு விடுதிகள், ரொட்டி கடைகள், பேராங்காடிகள் விற்கமுடியாது ஆனால் சாப்பிடும் நிலையில் உள்ள உணவுகளை அனாதை இல்லாங்கள் போன்ற இடங்களுக்கு அனுப்பலாம். பெரிய அளவில் உணவு விரயம் செய்யும் ஓட்டல்கள், சொகுசு உணவு விடுதிகள், தொழிற்சாலை சிற்றுண்டிச்சாலைகளைத் தண்டிக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் 5 நட்சத்திர ஓட்டல்களாக இருந்தாலும் கூட அடுத்தவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.

மற்றவர்கள் பசித்திருக்கும் போது உணவுகளைக் கீழே கொட்டுவது ஒரு இழிவான செயல், பணத்திற்குக் கேடு, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துகிறது. நாம் வீசி எறியும் உணவுகள் இன்னொருவரின் பசியை ஆற்றும். ஒருவரின் தட்டுக்கு செல்ல வேண்டிய உணவை வீசி எறிவதற்கு நமக்கு உரிமை கிடையாது. உணவுக்கு மரியாதை கொடுக்கும் கலாச்சாரத்திற்கு உரியவர்கள் நாம். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம் உணவு விரயத்தை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

உணவு விரயத்துக்கு எதிரான போரை இப்பொழுதே தொடங்குவோம்.

எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்இ ஜேபி.
தலைவர்

No comments:

Post a Comment