Tuesday, December 29, 2009

அதிகமான இந்தியர்கள் திவால் ஆகின்றார்கள் உத்தரவாதம் வழங்கியவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் எச்சரிக்கின்றார் - என்.வி. சுப்பாராவ்

கடந்த சில ஆண்டு காலமாக இந்தியர்கள் பலர் திவால் ஆவதும் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதும் அதிகரித்து வருவது கவலையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

திவால் ஆகிறவர்களில் பலர் 30 வயதுக்கு உப்பட்டவர்களாகவும் சிலர் பெண்களாகவும் இருப்பது வேதனையைத் தருவதாக இருக்கின்றது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

திவாலைத் தவிர்த்து பலரின் சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படும் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகின்றது என்றும் சுப்பாராவ் கூறினார்.

இந்தியர்கள் சம்பந்தப்பட்ட திவால் மற்றும் ஏலம் தொடர்பான அறிக்கைகள் ஆங்கில பத்திரிகைகளில் பரவலாக வெளியிடப்பட்டு வருகிறது.

அப்படி வெளியிடப்படும் அறிக்கைகளிலிருந்து பார்ப்போமானால் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் உண்மை தெரிகிறது என்றார் அவர்.

கடன் வாங்கியவர்கள் ஒரு புறமிருக்க அக்கடனுக்காக உத்தரவாதம் வழங்கியவர்களும் இந்தப் பட்டியலில் சிக்கிக்கொள்கின்றனர்.

முறையான திட்டமிடாதது, நிர்வாகத் திறன் இன்மை, அளவுக்கு அதிகமான செலவு, குறைவான நாட்களிலேயே கூடுதலான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை போன்ற காரணங்களால் இவர்கள் திவால் ஆகக்கூடியவர்களாக அமைந்துவிடுகின்றனர் என்றார் சுப்பாராவ்.

திவால் சட்டப்படி மொத்த கடன் மவெ. 30இ000க்கு மேற்பட்டு இருக்க வேண்டும். வாங்கிய கடனை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் செலுத்த முடியாதவர்களே திவாலாக ஆக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையே வாங்கிய வீட்டிற்கு மாதா மாதம் தவணைப் பணத்தை செலுத்த முடியாததால் ஏலம் விடப்படும் சம்பவங்களும் தொடர்கதையாக தொடர்ந்துகொண்டிருப்பதையும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.

மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் வீடுகளை கடனுக்கு வாங்கி, சில மாதங்களுக்குப் பிறகு பணத்தைச் செலுத்த முடியாத பட்சத்தில் இவ்வீடுகளை ஏலத்திற்குச் சென்றுவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

ஏலம் விடப்படும் அறிக்கைகள் தினசரி பத்திரிகைகளில் தினந்தோறும் பிரசுரிக்கப்பட்டு வருவதாக சுப்பாராவ் கூறினார்.

கடன் வாங்குபவர்கள், இளம் வயதினராக இருப்பதும், அவர்களே திவால்காரர்களாக ஆக்கப்படுவதும், பிறகு அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதும் வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்திற்கு சிறந்தது அல்ல என்றார் சுப்பாராவ்.

தொழில் துறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு முறையான நிர்வாகத் திறன் சொல்லித்தரப்படாததே இதற்குக் காரணம்.

வங்கியில் கடன் பெற நினைப்பவர்களும், அவர்களுக்கு உத்தரவாதம் வழங்க இருப்பவர்களும், முறையான திட்டத்தை வகுக்க மிகச் சிறந்த ஆலோசனைகளைப் பெற வேண்டும் என என்.வி. சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

No comments:

Post a Comment