Monday, November 15, 2010

நீரிழிவு நோய் - அமைதியான உயிர்கொல்லி!

இன்று உலக நீரிழிவு தினம். சர்வதேச நீரிழிவு சம்மேளனமும் உலக சுகாதார நிறுவனமும் 1991ம் ஆண்டு நவம்பர் 14 தேதியை நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தியதிலிருந்து, உலக அளவில் நீரிழிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று சுகாதார அமைச்சும் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை நடத்தி வருகின்றது. இருப்பினும் மலேசியாவில் இந்நோய் குறிப்பாக 2ம் ரக நீரிழிவு, தொற்றுநோய் போல எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.


ஆசியாவிலேயே நீரிழிவு நோயாளிகளில், மலேசியா 4வது இடத்தில் இருப்பதாக சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறுகிறது. 2007ல் எட்டு இலட்சமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2010ல் 3.4 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டுகளில், தென் கிழக்காசிய நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் மிக அதிகமாக இருப்பார்கள் என்றும் அச்சம்மேளனம் கணித்திருக்கிறது என்றார் அவர்.

தேசிய சுகாதாரம் மற்றும் நோய்கள் பற்றி மிக அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை திடுக்கிடும் வகைனில் அதிகரித்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. 1996-ல் 8.3 விழுக்காடாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, 2006ல் 14.9 விழுக்காடாக அதிகரித்தது. பத்தே வருடத்தில் 30 வயதுக்கும் அதிகமான மலேசியர்களிடையே 80% வரை இந்நோய் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.

இதே ஆய்வில் 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில், 1996ல் 4.4 விழுக்காடாக இருந்த உடல் பருமன், 2006ல் 14.0 விழுக்காடாக உயர்ந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இது பத்தே வருடத்தில் 200 விழுக்காடு உயர்வாகும்.

ஆசியாவிலேயே அதிக உடல் பருமனும் கூடுதல் எடை கொண்டவர்களும் மலேசியாவில் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கான மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் உடல் பருமன் அல்லது கூடுதல் எடையோடு இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை 10 வருடங்களுக்கு முன் 24.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது. இப்பொழுது 10 மலேசியர்களில் (பெரியவர்கள்) எழுவர் மோசமான பிணிக்கு உளாகியிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.

அதிகமான சீனி உட்கொள்ளும் பழக்கமே மலேசியர்களிடையே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இத்ரிஸ் கூறினார். நாள் ஒன்றுக்கு 26 தேக்கரண்டி சீனியை உட்கொள்வதோடு, சீனி அதிகமாக உபயோகிப்பவர்கள் பட்டியலில் நாம் எட்டாவது இடத்தை வகிக்கின்றோம்.

நீரிழிவு உயிர்க்கொல்லி நோயாக கருதப்படுவதற்கு காரணம் அது உடலில் முக்கிய உறுப்புக்களான இருதயம், சீறுநீரகம், நரம்புகள், கண்கள் போன்றவற்றைப் பாதிக்கிறது. நீரிழிவு நோய் முறையாக கட்டுபட்டுத்தப்படவில்லை என்றால், அது பல்வேறு சிக்கல்களை உடலில் ஏற்படுத்தும். முக்கிய உடல் உற்றுப்புக்களைத் தாக்கும் அதே வேளை, கால்களையும் அது குறி வைக்கிறது. 40%லிருந்து 70% கால் துண்டிப்பு சம்பவங்களுக்கு நீரிழிவே காரணமாக இருக்கிறது.

உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில்:
* 10 வினாடிகளில் இருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது
* 10 வினாடிகளில் ஒருவர் நீரிழிவு நோயினால் இறக்கிறார்.
* 30 வினாடிகளில் ஒருவர் கை அல்லது காலை நீரிழிவு நோய்க்கு பலி கொடுக்கிறார்

நீரிழிவு நோயின் முற்றிய நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்படுவது மலேசியாவில் மிகப் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சுமார் 13,000 நீரிழிவு நோயாளிகள் டயலிசிஸ் செய்து கொள்கிறவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 2,500 பேர் நீரிழிவு நோயின் இறுதி கட்டத்தை அடைகின்றார்கள் என்றார் இத்ரிஸ்.

நீரிழிவு நோயாளிகளில் ஐவரில் நான்கு பேர் இருதய நோயால் இறக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் அறுவர் பக்கவாதத்திற்கு பலியாகிறார்கள்.

இருவருக்கு நீரிழிவு நோய் என்று அறியப்படும் பொழுது ஒருவர் தனக்கு இந்நோய் இருப்பது தெரியாமலேயே இருக்கிறார். வயதானவர்களுக்கு அல்லது மத்திய வயதை ஒத்தவர்களுக்கு ஏற்படும் என்று மட்டுமே கருதப்பட்ட 2ம் ரக நீரிழிவு இப்பொழுது 10 வயது குழந்தைக்கும் ஏற்படுகிறது.

இளைஞர்களிடையே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கமும், வாழ்க்கை முறையும் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 18க்கும் 29 வயதுக்கும் இடைபட்டவர்களிடையே 2ம் ரக நீரிழிவு ஏற்படுவது அதிகமாக இருக்கிறது என்று இத்ரிஸ் மேலும் கூறினார்.

குழந்தைகள் உண்ணும் “நாகட், பர்கர், பொறித்த கோழி, பொறியல், கேஸ் பானங்கள் அவர்களை உடல் பருமனானவர்களாக மாற்றுகிறது. நீண்ட நேரத்துக்கு அமர்ந்து நிலையில் வீட்டுப்பாடம் செய்வது, தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுக்களை விளையாடுவது” அவர்களிடையே உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

அதிக புருக்டோஸ் உள்ள சோள சீரப்பில் இருக்கும் மலிவான சீனி பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களிலும், பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது இன்சுலினுக்கு எதிராக செயல்பட்டு 2ம் ரக நீரிழிவு நோய்க்கு வித்திடுகிறது. ஜேம், சாக்லட், பேக் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பேக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பானங்கள், சத்து பானங்கள், பசியாறல் சீரியல்கள், சாஸ் வகைகள், சூப் வகைகளில் இந்த சீரப் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு பொதுமக்களின் சுகாதாரத்தைக் குறிவைக்கும் ஒரு மோசமான நோய். உலக அளவில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். மக்கட்தொகை எண்ணிக்கை அதிகரிப்பு, நகரமயமாக்குதல், உடல் பருமன் அதிகரிப்பு, குறைவான உடல் உழைப்பு போன்றவை முக்கிய காரணமாகிறது.

மலேசியாவில் நீரிழிவின் அதிகரிப்பு எதிர்பார்த்த அளவைவிட மிக அதிகமாக இருக்கிறது. இந்த நோய்க்கான செலவினங்கள் அதிகரிப்பதோடு, அது நோயாளிகளின் கைகால்கள், கண் பார்வை போன்றவற்றைப் பலி கொள்கிறது.

தொற்றுநோய் போன்று அதிகரித்து வரும் இந்நோயைத் தடுப்பதற்கு அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டு கொள்கிறது:

* உணவுகளில் சோள சீரப் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும்

* உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பில் சீனி பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு வகை செய்ய வேண்டும்.

* தங்கள் தயாரிப்பில் எவ்வளவு சீனி இருக்கிறது என்பதை லேபல்களில் குறிப்பிடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

* குழந்தைகள் தொலைகாட்சி பார்க்கும் சமயங்களில் அதிக சீனி சேர்த்த உணவுகளின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்.

* பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலையிலும், பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இந்த உணவுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

* மருத்துவமனை, விமான நிலையம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் தின்பண்டங்களை விற்கும் தானியங்கி இயந்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். அதற்குப் பதில் குடிநீர் தானியங்கி இயந்திரங்களைப் பொருத்த வேண்டும்.

* நீரிழிவு நோயின் ஆபத்துக்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரிய அளவிலான பிரச்சாரங்கள் தீவிரமாக்கப்பட வேண்டும்.

* பயனீட்டாளர்கள் உடல் உழைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் விரிவான பிரச்சாரங்கள் மெற்கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

Tuesday, November 2, 2010

எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது! எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு! எச்சரிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்!

கடந்த 10 ஆண்டுகளில், மலேசியா எலிகளின் பெருக்கத்தில் ஆச்சிரியப்படக் கூடிய வளர்ச்சியை கண்டுள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், மோசமான ஆரோக்கிய பழக்கங்களும், கழிவு முறைகளுமே என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்.
நகர்புறத்தின் அதிக வளரச்சி, மற்றும் மக்கள் குடியிருக்கும் இடத்தில் முறையாக செயல்படாத திட்டங்களுமே இதற்கு மற்றொரு காரணமும் என்றார் இத்ரிஸ்.

இந்த உலகத்தில், தோன்றிய இயற்கை பிராணியாக ஏற்றுக்கொண்டாலும் மனித உயிருக்கு இந்த எலிகள் இன்று மிகவும் மிரட்டலாக இருக்கின்றது. “லெப்டோஸ்பிரோஸிஸ் எனப்படும் எலிகளின் எச்சத்தால் ஏற்படும் நோய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.
எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களும் மரணங்களும் அதிக அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2009ல் எலிகளின் மூலமாக 62 மரணங்களும், 1418 நோய்களும் ஏற்பபட்டதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்துள்ளது. மலேசியாவில் எலி தொடர்பான மற்றொரு நோய் தொடர்பான தகவல்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை என்றார் இத்ரிஸ்.

தீபகற்ப மலேசியாவில் எவ்வளவுதான் எலிகள் இருக்கின்றன? கோலாலம்பூரில் மட்டும் ஏறக்குறைய 44 லட்சம் எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பினாங்கு நகராண்மை கழகம், கடந்த 2009ம் ஆண்டில் 14,639 எலிகளை பிடித்து கொன்றுள்ளதாக அறிவித்துள்ளது என்றார் இத்ரிஸ்.

உண்மையில் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்றார் இத்ரிஸ். ஊதாரணத்திற்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வில், 600 லட்சம் எலிகள் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு ஒரு எலி என்ற விகிதத்தில்.
மலேசியாவில் எலிகளை ஒழிப்பதற்காக, சில இலாக்காக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எலிகளின் வசிப்பிடங்கள் அதிகரித்துகொண்டே போவதற்கு முக்கிய காரணம், சுத்தமின்மை, உணவுகளை தூக்கி எறிவது மற்றும் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதுதான் என்றார் இத்ரிஸ்.

சரியான முறையில் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கும் என எச்சரித்தார் இத்ரிஸ்.

எலிகள் ஒரு ஆண்டில் நான்கிலிருந்து ஏழு முறை குட்டியிடும். ஒவ்வொரு முறையும் 6லிருந்து 12 குட்டிகளை அது ஈன்றெடுக்கும்.

ஒரு பெண் எலி ஒரு ஆண்டில் 4 முறை குட்டியிட்டால், ஏறக்குறைய ஒரு ஆண்டில் 582லிருந்து 954 எலிகள் சுற்றித்திரியும் என்றார் இத்ரிஸ்.

ஆகவே அதிகித்துவரும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நன்றாக சுத்தத்தை கடைப்பிடிக்கும் உயர்ந்த அடுக்குமாடிகள் மற்றும் உணவங்களில் எலிகள் குடியிருக்கும் போது, சந்தைகள், உணவுச் சந்தைகள் மற்றும் பிற உணவு அங்காடி இடங்களில் எலிகளின் சாம்பிராஜயிம் இருக்காது என்பதில் என்ன உறுதி என்றார் இத்ரிஸ்.

மலேசியாவில் இரண்டுவிதமான எலிகள் இருக்கின்றன. குடியிருப்பு, வாணிபம் மற்றும் தொழிற்துறை பகுதிகளில் இருப்பவை, வீட்டு எலியான ராட்டுஸ் மற்றும் நோர்வே எலியான ராட்டுஸ் நோர்வெகிகுஸ்.

மனித ஆராக்கியத்திற்கு எலிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. பலதரப்பட்ட நோய்களையும் இது ஏற்படுத்துவதாக இத்ரிஸ் கூறினார்.

எலிகளின் சிறுநீர் தாக்கத்ததால் பலருக்கு லெப்டோஸ்பிரோஸிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அப்படி இந்நோய் குணப்படுத்தப்படாவிடில், அந்நோய் சிறுநீரக பாதிப்பு, மூளை மற்றும் ஈரல் பாதிப்பும் ஏற்படலாம்.

எலிகள் நோய்களையும் தருகிறது, உணவுகளை அசுத்தப்படுத்துவதோடு, மின்சார கம்பிகளை கடிக்கின்றன, மேலும் பயிர்களையும் நாசப்படுத்துகின்றன.

எலிகளை கட்டுப்படுத்துவதற்கு பூனைகளை வளர்ப்பது நல்லதுதான். ஆனால், சிறப்பான தூய்மையான சூழலுக்கு, பொது மக்களும், உணவுகளை கையாளுபவர்களும் தங்களது பொருப்பற்றப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் இத்ரிஸ்.
உணவு விற்கப்படும் எல்லா கடைகளிலும் மற்றும் உணவு கிடப்பில் வைக்கப்பட்டிpருக்கும் வர்த்தக இடங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

உணவுகளை தூக்கியெறியும் இடங்களில் எலிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும். ஆகையால் உணவுகளை கண்மூடித்தனமாக தூக்கி எறிவதைவிடுத்து, சுத்தத்திலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் நமது நன்மைக்காக இந்த எலிகளின் தொல்லை பிரச்சனையை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக்கொள்ளவதாக எஸ்எம். முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.


எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Thursday, October 7, 2010

மருத்துவ விளம்பரங்கள் தேவையில்லை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பொது மருத்துவமனைகள், கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவை தங்களுடைய துறையைப் பிரபலப்படுத்த விளம்பரம் செய்வது தேவையில்லாதது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மருத்துவ சுற்றுலா வளர்ந்து வரும் ஒரு துறையாக இருப்பதால் மருந்து (விளம்பரம் மற்றும் விற்பனை) சட்டம் 1956ல் உள்ள விதிமுறைகளைக் தளர்த்துகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோ தியோங் லாய் அறிவிக்கை விடுத்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இல்லை என்று இத்ரிஸ் கூறினார்.

சென்ற வருடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மட்டும் 336,000 சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் 20 விழுக்காட்டைக் கூட்டுவதற்கு எண்ணம் கொண்டிருப்பதாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் இத்ரிஸ்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் “மருத்துவத் துறை” என்ற ஒன்று இப்பொழுது இல்லை. அது வெறும் “மருத்துவ தொழிற்துறை”யாகவே இயங்கி வருகிறது. ஒரு பெரிய கும்பல் மருத்துவமனைகள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் எல்லாவற்றின் உற்பத்தியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, அரசாங்கத்தை அவர்களுக்குச் சாதகமாக இயக்கி வருகிறது. தகவல் சாதனங்களின் மூலமாக தங்களுடைய துறையை மிகவும் அபரிமிதமாக விளம்பரம் செய்து இலாப நோக்கோடு செயல்படுகின்றனர்.

விளம்பரங்கள் மருத்துவத் துறையையும் மருந்து கம்பெனிகளையும் பலப்படுத்துகின்றன. ஒரு மருந்து விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தப்படும்பொழுது, மருத்துவரை அந்தக் குறிப்பிட்ட மருந்தைப் பரிந்துரைக்குமாறு நோயாளிகள் கேட்டுக்கொள்வர் அல்லது அந்த மருந்தை பரிந்துரை செய்யும் மருத்துவரை நாடிச் செல்வர் என்றார் இத்ரிஸ்.

ஒருவர் அதிக நோய்வாய்ப்படும்பொழுதுதான் இந்த மருத்துவ விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். யாராவது தன்னுடைய நோய்க்கு உடனடி நிவாரணம் கொடுப்பார்களா என்று ஏங்கும் பட்சத்தில் மருத்துவ விளம்பரங்கள் அவருடைய கவனத்தை ஈர்க்கும். பெரும்பாலோர் தங்களுடைய வைட்டமின்கள், டானிக், ஜீரணமின்மை, வலி நிவாரணத்திற்கு மருந்துக் கடைகளின் உதவியையே நாடுகின்றனர். ஏனெனில் இவையெல்லாம் விளம்பரம் செய்யப்படுகின்றன. மருத்துவர்களை நாடிச் சென்று அவர்களைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் மருந்துவத் துறையை விளம்பரம் செய்யும்பொழுது அதற்கான செலவுகளையெல்லாம் நோயாளிகளின் மீது சுமத்தி ஈடுகட்டும் ஒரு நிலை உருவாகும் என்றார் இத்ரிஸ்.

மருத்துவத் துறை ஒரு புனிதமான துறையாகும். அதனை இலாப நோக்கோடு தீவிரமாக விளம்பரப்படுத்தும்பொழுது முறைகேடுகள் ஏற்பட்டு நோயாளிகளின் நலனுக்கு பாதகத்தை உருவாக்கும் நிலை ஏற்படலாம். மருத்துவத்துறையை ஒரு வியாபாரமாக பார்க்கலாகாது. என்றார் இத்ரிஸ்.

மருத்துவச் சுற்றுலாத்துறையைப் பிரபலப்படுத்த நினைக்கும் சுகாதா அமைச்சின் நோக்கத்திற்கு அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது நம் நாட்டின் மருத்துவத்துறையில் இருக்கும் கோளாறுகளை இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்வதே இந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் தலையாய கடமையாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Monday, September 13, 2010

தற்கொலை காட்சிகள் தொடர வேண்டுமா? நடிகை ராதிகாவின் செல்லமே தொடர் குடும்ப நல்லுணர்வு சீரழிக்கின்றது பி.ப.சங்கம் குற்றச்சாட்டு!

குடும்ப சமூக மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் சினிமாப் படங்களை விட மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்து வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றோமோ அதற்கு எதிராகவே, சின்னத்திரைகளில் காட்சிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன என்றார் பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

சன் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு இங்கே மறு ஒலிபரப்பாக தினமும் திரையிடப்படும் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் குடும்ப சீரழிவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் ஒவ்வொன்றாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஆகக் கடைசியாக காற்றாடியில் சேலையைத் தொங்கவிட்டு கறுத்தில் இறுக்கி எப்படித் தற்கொலை செய்துகொள்வது என்ற காட்சி அண்மையில் செல்லமே மெகா தொடரில் காட்டப்பட்டது. இந்தக் காட்சி பலரின் கோபத்தைத் தூண்டியுள்ளதாக சுப்பாராவ் கூறினார்.

ஆரம்பத்தில் திரைப்படங்களில்தான் தற்கொலைக் காட்சிகள் அதிக அளவு காட்டப்பட்டு வந்தன. ஆனால் இப்பொழுது மெகா தொடர்களில் இதுபோன்ற காட்சிகள் வரத்தொடங்கிவிட்டன என்றார் சுப்பாராவ்.

நமது நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

எப்படித் தற்கொலை செய்து கொள்வது என்பதை இந்த நாடகங்களே சொல்லித் தருகின்றன. தமிழ் மெகா தொடர்களைப் பார்த்தே தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்துகொள்வதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இந்த நிலை மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் ஏற்படக்கூடாது.


செல்லமே போன்ற நாடகங்கள் மிக முக்கிய நேரத்தில் காட்டப்படுவதால் அனைவராலும் பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட தற்கொலைக் காட்சிகள் பார்ப்பவர்களின் மன நிலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் தங்களுடைய சொந்த பிரச்னைகளுக்கு தவறான முடிவுகளை எடுக்கவும் தூண்டிவிடலாம் என்றார் சுப்பாராவ்.

கணவன் மற்றும் மகன், மகளுக்கு எதிரிலேயே அம்மா உயர்ரக மது குடிக்கும் காட்சி, உணவில் விஷத்தைக் கலப்பது, ஆண் பெண்ணை அறைவது, பெண் ஆணை அறைவது, காப்பியில் தூக்க மாத்திரையைப் போட்டுவிட்டு உறவு கொள்வது, பழிக்குப் பழி வாங்குவதற்காக சொந்த தந்தையே தன் மகளை வழி தவறிச் செல்ல உதவுவது போன்ற மனதை நோகடிக்கும், தலைக்குனிவை ஏற்படுத்தும் காட்சிகள் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் தொடர்ந்து கொண்டே போகின்றன.


இப்படிப்பட்ட தொடர்களை ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பார்ப்பதில்லை. பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் சில சமயங்களில் பாட்டிமார்களும் இத்தொடர்களில் கண் விழித்து பொழுதைக் கழித்துவிடுகிறார்கள்.

மிக மோசமான காட்சிகள் காட்டப்படும்போது அது அவர்களின் மனதில் தங்கிவிடுகிறது. ஏதோ பொழுது போக்கிற்காக பார்க்கக்கூடிய நாடகங்கள் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் உண்மை நிலை தெரிய வருகிறது என்றார் சுப்பாராவ்.

மற்ற சமூகத்தோடு எல்லா துறைகளிலும் போட்டி போட்டுக்கொண்டும் உரிமைகளுக்காக போராடிக்கொண்டும் இருக்கிற சமூகத்துக்கு செல்லமே போன்ற தொடர் நாடகங்கள் இன்னும் அதிகமாக கேடுகளையே கொண்டு வரும்.

இதுபோன்ற சமூக நலனுக்கு பாதகங்களை விளைவிக்கும் நாடகங்களை ஒளிபரப்புவதை விடுத்து, உருப்படியான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒலிபரப்ப வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.



என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
தொலைபேசி : 012-5374899