Thursday, October 7, 2010

மருத்துவ விளம்பரங்கள் தேவையில்லை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பொது மருத்துவமனைகள், கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவை தங்களுடைய துறையைப் பிரபலப்படுத்த விளம்பரம் செய்வது தேவையில்லாதது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மருத்துவ சுற்றுலா வளர்ந்து வரும் ஒரு துறையாக இருப்பதால் மருந்து (விளம்பரம் மற்றும் விற்பனை) சட்டம் 1956ல் உள்ள விதிமுறைகளைக் தளர்த்துகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோ தியோங் லாய் அறிவிக்கை விடுத்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இல்லை என்று இத்ரிஸ் கூறினார்.

சென்ற வருடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மட்டும் 336,000 சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் 20 விழுக்காட்டைக் கூட்டுவதற்கு எண்ணம் கொண்டிருப்பதாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் இத்ரிஸ்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் “மருத்துவத் துறை” என்ற ஒன்று இப்பொழுது இல்லை. அது வெறும் “மருத்துவ தொழிற்துறை”யாகவே இயங்கி வருகிறது. ஒரு பெரிய கும்பல் மருத்துவமனைகள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் எல்லாவற்றின் உற்பத்தியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, அரசாங்கத்தை அவர்களுக்குச் சாதகமாக இயக்கி வருகிறது. தகவல் சாதனங்களின் மூலமாக தங்களுடைய துறையை மிகவும் அபரிமிதமாக விளம்பரம் செய்து இலாப நோக்கோடு செயல்படுகின்றனர்.

விளம்பரங்கள் மருத்துவத் துறையையும் மருந்து கம்பெனிகளையும் பலப்படுத்துகின்றன. ஒரு மருந்து விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தப்படும்பொழுது, மருத்துவரை அந்தக் குறிப்பிட்ட மருந்தைப் பரிந்துரைக்குமாறு நோயாளிகள் கேட்டுக்கொள்வர் அல்லது அந்த மருந்தை பரிந்துரை செய்யும் மருத்துவரை நாடிச் செல்வர் என்றார் இத்ரிஸ்.

ஒருவர் அதிக நோய்வாய்ப்படும்பொழுதுதான் இந்த மருத்துவ விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். யாராவது தன்னுடைய நோய்க்கு உடனடி நிவாரணம் கொடுப்பார்களா என்று ஏங்கும் பட்சத்தில் மருத்துவ விளம்பரங்கள் அவருடைய கவனத்தை ஈர்க்கும். பெரும்பாலோர் தங்களுடைய வைட்டமின்கள், டானிக், ஜீரணமின்மை, வலி நிவாரணத்திற்கு மருந்துக் கடைகளின் உதவியையே நாடுகின்றனர். ஏனெனில் இவையெல்லாம் விளம்பரம் செய்யப்படுகின்றன. மருத்துவர்களை நாடிச் சென்று அவர்களைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் மருந்துவத் துறையை விளம்பரம் செய்யும்பொழுது அதற்கான செலவுகளையெல்லாம் நோயாளிகளின் மீது சுமத்தி ஈடுகட்டும் ஒரு நிலை உருவாகும் என்றார் இத்ரிஸ்.

மருத்துவத் துறை ஒரு புனிதமான துறையாகும். அதனை இலாப நோக்கோடு தீவிரமாக விளம்பரப்படுத்தும்பொழுது முறைகேடுகள் ஏற்பட்டு நோயாளிகளின் நலனுக்கு பாதகத்தை உருவாக்கும் நிலை ஏற்படலாம். மருத்துவத்துறையை ஒரு வியாபாரமாக பார்க்கலாகாது. என்றார் இத்ரிஸ்.

மருத்துவச் சுற்றுலாத்துறையைப் பிரபலப்படுத்த நினைக்கும் சுகாதா அமைச்சின் நோக்கத்திற்கு அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது நம் நாட்டின் மருத்துவத்துறையில் இருக்கும் கோளாறுகளை இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்வதே இந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் தலையாய கடமையாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment