குடும்ப சமூக மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் சினிமாப் படங்களை விட மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்து வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றோமோ அதற்கு எதிராகவே, சின்னத்திரைகளில் காட்சிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன என்றார் பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.
சன் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு இங்கே மறு ஒலிபரப்பாக தினமும் திரையிடப்படும் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் குடும்ப சீரழிவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் ஒவ்வொன்றாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
ஆகக் கடைசியாக காற்றாடியில் சேலையைத் தொங்கவிட்டு கறுத்தில் இறுக்கி எப்படித் தற்கொலை செய்துகொள்வது என்ற காட்சி அண்மையில் செல்லமே மெகா தொடரில் காட்டப்பட்டது. இந்தக் காட்சி பலரின் கோபத்தைத் தூண்டியுள்ளதாக சுப்பாராவ் கூறினார்.
ஆரம்பத்தில் திரைப்படங்களில்தான் தற்கொலைக் காட்சிகள் அதிக அளவு காட்டப்பட்டு வந்தன. ஆனால் இப்பொழுது மெகா தொடர்களில் இதுபோன்ற காட்சிகள் வரத்தொடங்கிவிட்டன என்றார் சுப்பாராவ்.
நமது நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
எப்படித் தற்கொலை செய்து கொள்வது என்பதை இந்த நாடகங்களே சொல்லித் தருகின்றன. தமிழ் மெகா தொடர்களைப் பார்த்தே தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்துகொள்வதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இந்த நிலை மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் ஏற்படக்கூடாது.
செல்லமே போன்ற நாடகங்கள் மிக முக்கிய நேரத்தில் காட்டப்படுவதால் அனைவராலும் பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட தற்கொலைக் காட்சிகள் பார்ப்பவர்களின் மன நிலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் தங்களுடைய சொந்த பிரச்னைகளுக்கு தவறான முடிவுகளை எடுக்கவும் தூண்டிவிடலாம் என்றார் சுப்பாராவ்.
கணவன் மற்றும் மகன், மகளுக்கு எதிரிலேயே அம்மா உயர்ரக மது குடிக்கும் காட்சி, உணவில் விஷத்தைக் கலப்பது, ஆண் பெண்ணை அறைவது, பெண் ஆணை அறைவது, காப்பியில் தூக்க மாத்திரையைப் போட்டுவிட்டு உறவு கொள்வது, பழிக்குப் பழி வாங்குவதற்காக சொந்த தந்தையே தன் மகளை வழி தவறிச் செல்ல உதவுவது போன்ற மனதை நோகடிக்கும், தலைக்குனிவை ஏற்படுத்தும் காட்சிகள் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் தொடர்ந்து கொண்டே போகின்றன.
இப்படிப்பட்ட தொடர்களை ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பார்ப்பதில்லை. பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் சில சமயங்களில் பாட்டிமார்களும் இத்தொடர்களில் கண் விழித்து பொழுதைக் கழித்துவிடுகிறார்கள்.
மிக மோசமான காட்சிகள் காட்டப்படும்போது அது அவர்களின் மனதில் தங்கிவிடுகிறது. ஏதோ பொழுது போக்கிற்காக பார்க்கக்கூடிய நாடகங்கள் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் உண்மை நிலை தெரிய வருகிறது என்றார் சுப்பாராவ்.
மற்ற சமூகத்தோடு எல்லா துறைகளிலும் போட்டி போட்டுக்கொண்டும் உரிமைகளுக்காக போராடிக்கொண்டும் இருக்கிற சமூகத்துக்கு செல்லமே போன்ற தொடர் நாடகங்கள் இன்னும் அதிகமாக கேடுகளையே கொண்டு வரும்.
இதுபோன்ற சமூக நலனுக்கு பாதகங்களை விளைவிக்கும் நாடகங்களை ஒளிபரப்புவதை விடுத்து, உருப்படியான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒலிபரப்ப வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
தொலைபேசி : 012-5374899
No comments:
Post a Comment