Sunday, August 14, 2011

பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும்

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்.

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காகப் பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள்.

பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும் பொழுது 40 சென்னாகவும் அதே
நீரை விடுதிகளில் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது. பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீர் என்றும், வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்பதும் பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது.கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம், பொட்டேஸியம், துத்தநாகம் போன்றவை பாட்டில் நீரில் மிக மிக சொற்ப அளவில்தான் இருக்கின்றன. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். பாட்டில் பானத்தை வாங்கும்பொழுது அந்த நீருக்காக நீங்கள் கொடுக்கும் தொகை மொத்த
விலையில் 10% மட்டுமே. எஞ்சிய 90% பிளாஸ்டிக் பாட்டிலுக்காக நீங்கள் கொடுக்கும் தொகையாகும். ப ¡ ட் டி ல் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய், பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு
பாட்டில்களைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன.



இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும் 500 வருடங்களாவது பிடிக்கும். பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1, PET, PETE ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் நீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் இந்த நீர் பாட்டில்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30OC சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் நீர் பாட்டில்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரிலும் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும். PET ரக பாட்டிலில் உள்ள நச்சு இரசாயனங்களும் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பாட்டில்நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத் தன்மை உடையதாக ஆகிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும். பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை.

மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல.

அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில துளி எலுமிச்சையைக் கலந்து அருந்தினாலே புத்துணர்ச்சி கிட்டும்.

Thursday, August 11, 2011

பூர்வீகக் குடிகளின் மருத்துவ மகிமைகள்

பூர்வீகக் குடிகளின் நில உரிமையைத் தற்காக்கும் பொறுப்பிலிருந்து நாம் நழுவும் பட்சத்தில், அவர்களிடையே பொதிந்திருக்கும் மருத்துவ மூலிகைகள் தொடர்பான தகவல் பொக்கிஷங்கள் நம்மை விட்டு மறைந்துபோகும். எந்த ஒரு இனமாக இருக்கட்டும். பாரம்பரியமாக அவர்கள் உடல் நலத்தைப் பேண நம்பி இருந்தது மூலிகைகளைத்தான்.

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் 80% தங்களுடைய ஆரோக்கிய மேம்பாட்டுக்கு தாவரங்களையும் மூலிகைகளையும் நம்பியுள்ளனர். உலகத்தில் உள்ள சுமார் 150 மில்லியன் பூர்வீகக் குடிகளுக்கு இயற்கைதான் மருந்துக்கடை. மூலிகை தொடர்பான அவர்களுடைய அறிவும் அபாரமானவை. இயற்கையோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்ததால் அனுபவ அறிவால் வழிவழியாக வந்த அருமைச் சொத்து அவர்களுடையது.


உதாரணத்திற்கு அமேசோனைச் சேர்ந்த யனோமாமி என்ற பூர்வீகக் குடிகள் woody cat's claw vine என்ற மூலிகையை பேதியைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பைனி மரத்தின் copal tree) பட்டையை கண் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இக்குவாடோர் மற்றும் பெருவைச் சேர்ந்த சுவார் பூர்வீகக் குடிகள் வயிற்றுப் பிரச்சனைகளுக்காக நூற்றுக்கும் குறையாத மூலிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மட்சிகென்கா என்ற இன்னொரு பூர்வீகக் குடியினர் தங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தண்ணீர் குடத்தில் மூலிகைகளைப் போட்டு
வைக்கிறார்கள்.

பூமியின் ஆசனத்திலிருந்து வெளிப்படும் துர்வாடையும் நீராவியுமே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். பூர்விகக் குடியினர்களிடையே ஷாமன் (shamans) என்னும் ஒருவரே மருத்துவராக செயல்படுவார்.

உலக உயிர்களுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் இடையே தூதுவராக செயல்படுவார். மூலிகைகளின் குணப்படுத்தும் தன்மைகளை தன்வசமாக்கி வைத்தியத்திற்கு உபயோகிப்பர். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளோடு சிகிச்சை பெற வந்திருப்பவர்களுக்கு நோயின் மூலத்தைக் கண்டுபிடித்து அதற்கான ஆலோசனைகளையும் கேட்டறிந்து வைத்தியம்
செய்வர். மூலிகைகளின் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் நோயைக் கண்டுபிடிப்பர். "ஒய் கனாஹி" மரத்தின் துகள்களை நுகரும்பொழுது, சாபிரிப் என்ற வன தேவதைகள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். படிப்படியாக அவை தங்களை உங்களுக்கு வெளிக்காட்டும்" என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த டாவி கோப்பேனாவா என்ற ஷாமன்.

சில மூலிகைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவை கிராமத்தில் உள்ள எலிகளையும் பேய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தவை. மழை வருவதையும், வேட்டைக்குச் செல்பவர்கள் வெற்றியோடு திரும்புவதையும் அவை உறுதிப்படுத்துகின்றன என்று
லண்டனில் உள்ள மூலிகை ஆராய்ச்சியாளர் வில்லியன் மில்லிகேன் கூறுகிறார்.

சில ஷாமன்கள் மூலிகைகளின் பெயரை வேகமாகக் கூறுவதில்லை. காதில் மட்டும் கிசுகிசுக்கிறார்கள். அவை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளாம். வழிவழியாகக் கொண்டு வரப்படும் ஷாமன் பாரம்பரியங்கள் இவை.

பூர்வீகக் குடியினர்களின் மொழியும் இயற்கை வளம், பூகோளம், மருந்து, சீதோஷ்ண நிலை போன்றவை சார்ந்தே இருக்கின்றன. பொலிவியாவில் உள்ள கல்லவாயா என்ற மேட்டுநில விவசாயிகளின் மூலிகை அறிவு அபாரமானது. மூலிகை மற்றும் மருத்துவ குணங்கள் தொடர்பான இரகசிய மச்சாச் ஜூயாய் என்ற மொழி வைத்துள்ளனர். இது இன்கா அரசர்களின் மொழி என்று சிலர் நம்புகின்றனர். உலகில் 7,000 மொழிகளுக்கும் மேலாக இருந்தன.

இவற்றில் 4,000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. "ஒவ்வொரு மொழியும் கலாச்சாரமும் ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை வளர்ச்சியை பெருமைகளை கோடிட்டுக் காட்டுபவை ஆகும். ஆகையால் ஒரு மொழி அழியும்பொழுது, வாழ்க்கை முறை, பிரச்னைகளுக்கான தீர்வுகள் எல்லோமே சேர்த்து அழிகின்றன என்கிறார் மொழி ஆய்வாளர் டேனியல் எவரட்.

பூர்வீகக் குடிகளின் புண்ணியத்தால் நமக்கு நிறைய மூலிகைகளின் மருத்துவ குணங்கள் தெரிய வந்த பயன்பாட்டில் உள்ளன. தெற்கு அமெரிக்க இந்தியர்களால் நஞ்சாக பயன்படுத்தப்பட்ட சில மூலிகை வகைகள் இப்பொழுது மேலை நாட்டு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, குராரே (curare) என்ற மூலிகைச் செடி. இந்த மூலிகைகளை அம்புகளின் நுணியில் பொருத்தி மிருகங்களின் மீது பாய்ச்சி அவற்றைச் செயலிழக்கச் செய்வர்.

அதே மூலிகையை, நவீன மருத்துவத்தில் தசைகளை இலகுவாக்கும் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் திறந்த இருதய அறுவைச் சிகிச்சை சாத்தியமாகிறது. பூர்வீகக் குடியினரின் மருத்துவ அணுகுமுறையும் வியக்க வைக்கிறது. நோயற்ற வாழ்க்கை மட்டும் ஆரோக்கியம் என்று அவர்கள் நினைத்துவிடவில்லை.

மனோ நலத்தையும் ஆன்மீக நலத்தையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நலத்தைக் கணிக்கிறார்கள். மனிதன் ஒரு தனித்தீவு கிடையாது.

ஆரோக்கியமான மனித உறவுகள் மற்றும் இயற்கையோடு சுமூகமான தொடர்பும் முக்கியம். நவீன மருத்துவம் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. ஒவ்வொருவரையும் ஒரு தனி அமைப்பாகவே அது பார்க்கிறது. இப்பொழுது இந்த உண்மையை நாம் உணர ஆரம்பித்துவிட்டோம்.

பித்தப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களின் படுக்கைக்கு வெளியே இயற்கைக் காட்சிகள் இருக்குமாறு அமைப்பு இருந்தபொழுது அவர்களுக்கு மிகவும் குறைவான அளவு வலி நிவாரண மருந்துகளே தேவைப்பட்டன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

போர்னியோ காடுகளில் உள்ள பின்தாங்கோர் மரம் ஒரு விஷேசமான இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது. எச்.ஐ.வி. வைரஸ் பெருகுவதை இந்த இரசாயனம் கட்டுப்படுத்தும் என்பதால்
இப்பொழுது இந்த மரங்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பவளப்பாறைகளும் மருந்து மூலங்களாக இருக்கின்றன. புற்றுநோய், மூட்டு வலி, இருதய நோய் போன்றவற்றுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலை நாடுகள் காடுகளின் மருத்துவ மகத்துவத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தவுடன், காடுகளையும் பவளப்பாறைகளையும் சிறிது சிறிதாக சுரண்ட ஆரம்பித்துவிட்டன. இதனால் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளும் அருக ஆரம்பித்துவிட்டன. மூலிகைகளை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் 50,000க்கும் மேற்பட்ட மருத்துவ மூலிகைகள் அழியும் விளிம்பில் இருப்பதாக அனைத்துலக மூலிகை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது.

இப்படி அழியும் மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் முதலில் பூர்வீகக் குடியினரின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் எனக்குக் கட்டை விரலில் மரு உண்டாகும். ஒரு பிரபலமான கண் மருத்துவரான என் தாத்தா இதற்கு எப்படி மருத்துவம் பார்ப்பார் தெரியுமா? ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டுவார்.

பாதி ஆப்பிளைக் கொண்டு மருவைத் தடவுவார். இன்னொரு பாதியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சூரிய ஒளி படும் இடத்தில் புதைத்து வைப்பார். மரு μரிரு தினங்களிலேயே மறைந்து போகும். இயற்கையோடு இணைந்து எதற்கும் தீர்வு காண முயலும்பொழுது அது நமக்கு வேண்டிய தீர்வை அளிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மோர்பைனைவிட 200 மடங்கு அதிகமான சக்தி வாய்ந்த வலி நிவாரணியை இக்குவாடோர் தவளைகளிலிருந்து பெற முடியும் என்றால், நம்முடைய மலைக்காடுகளில் நமக்கு இதுவரை தெரியாத இன்னும் நிறைய அதிசயங்கள் பொதிந்து கிடக்கத்தான் செய்யும். பூர்வீகக் குடியினரின் மொழிகளில் எல்லாம் இந்தத் தகவல்கள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.

உங்களைக் கொல்ல கால் தேக்கரண்டி பூச்சிக்கொல்லியே போதுமானது - கார்போபியூரானை தடை செய்யுங்கள்!

விவசாய அமைச்சு உடனடியாக கார்போபியூரான் என்ற பூச்சிக்கொல்லியைத் தடை செய்ய வேண்டும். இந்த வருட ஆரம்பத்தில், கெடா, பெண்டாங்கைச் சேர்ந்த 5 விவசாயிகளின் 18 மாடுகள் கார்போபியூரான் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி செத்துப்போன காரணத்தால் அவர்கள் மவெ. 30,000.00 இழப்பை எதிர்நோக்கியுள்ளனர். கார்போபியூரான் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்ததால் இந்த மாடுகள் செத்துப்போயின.

சோளம் வளர்க்கும் விவசாயிகள் அவற்றை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கும் பொருட்டு சோளச்செடியின் முளைகளில் கார்போபியூரான் சிற்றுருண்டைகளை வைக்கின்றனர்.

இதேப்போன்று குமட்டி வளர்ப்பவர்களும் அவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்கும் பொருட்டு மண்ணில் கார்போபியூரானைப் இடுகின்றனர். கார்போபியூரான் அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த காரணத்தால் அதை கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் 2008ல் தடை செய்தது.

ஆகக் கடைசியாக அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகமும் கார்போபியூரான் உபயோகத்தைத் தடை செய்துள்ளது. கார்போபியூரானை பியூராடான் (Furadan) என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். உணவு சட்டம் 1985ன்படி கார்போபியூரான் அரிசி, சோளம், மிளகு (கருப்பு, வெள்ளை), மாங்காய், வாழைப்பழம், கரும்பு மற்றும் கத்திரிக்காய் பயிர் வளர்ப்பில் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் கார்போபியூரான்தான் அதிக அளவு நச்சுத்தன்மை கொண்டது. ஒருவரைக் கொல்வதற்கு வெறும் கால் தேக்கரண்டி கார்போபியூரான் போதுமானது.

இந்த நச்சு நரம்பு மண்டலத்தைத் தூண்டி, குமட்டல், தலை சுற்றல், குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அளவு அதிகமானால் சுவாசக் குழாய் செயலிழப்பை ஏற்படுத்தி இறப்புக்கும் இட்டுச் செல்லும். நரம்பு மண்டலம் மற்றும் இன உற்பத்தி உறுப்பில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். கார்போபியூரான் எச்சங்கள், சாப்பிடும் உணவிலும் குடிக்கும் நீரிலும் கலக்கும்பொழுது இந்தப் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகின்றன.

கார்போபியூரான் சுற்றுச்சூழல் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். 1967ல் கார்போபியூரான் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இலட்சக்கணக்கான பறவைகள்
மற்றும் வனவிலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த கார்போபியூரான் சிற்றுருண்டைகளைக் குருவிகள் தீனி என்று நினைத்து அவற்றைத் தின்று மடிகின்றன. செத்துப்போன
பறவைகளை இதர மிருகங்கள் தின்னும்பொழுது அவையும் சாகின்றன. இந்த கார்போபியூரான் மீன் இனத்தையும் நச்சுக்குள்ளாக்கி வருகிறது.

அமெரிக்காவில் வஞ்சன மீன் இனம் குறைந்து போனதற்கு இந்த கார்போபியூரான்தான் காரணம். கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சிங்கங்களைக் கொல்வதற்கு கார்போபியூரானைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. கார்போபியூரானின் நச்சுத்தன்மை காரணமாக மலேசியாவில் இந்த நச்சு பூச்சிக்கொல்லி தடை செய்யப்பட வேண்டும். கார்போபியூரானால் விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை இதன் மூலம் பெரும் அளவில் குறைக்க முடியும்.

உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்

மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி
என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம்
நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது
வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய
10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன.

உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப்
பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள்.

சிந்து, கங்கை,பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.

இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட
பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்
பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை
ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை
நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.

Wednesday, July 27, 2011

நச்சு இரசாயனங்கள் அற்ற இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்வோம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

நவீன விவசாய முறையில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும் பெருகிவிட்ட காரணத்தால் அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டும், நிறைய இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன விவசாய முறையில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களும் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் குறைந்துபோவதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் தென்படாத நிலையில், இந்தப் பிரச்னையிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு நீடித்த நிலையான விவசாய முறையை நாம் நாட வேண்டிய அவசியம் உண்டாகிவிட்டது. அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், நம்முடைய இயற்றை வளங்கள் அழிந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்துக்கே கேடாக இது முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பூச்சிக்கொல்லி என்பது ஒரு நஞ்சாகும். அது சுற்றுச்சூலுக்கு மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்திற்குப் பல விதமான கேடுகளை உண்டாக்குகிறது. பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், பயிர்களை உட்கொள்ளும் பட்சத்தில் நம்முடைய உடலுக்குள் சேமித்து வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் 20,000லிருந்து 40,000 பேர் வரைக்கும் பூச்சிக்கொல்லி நச்சத்தன்மையால் இறந்து போவதாக ஐக்கிய நாட்டு சபையின் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைக் குழு கூறுகிறது. பூச்சிக்கொல்லிகளில் உள்ள 426 சேர்வைகளில் 164 சேர்வைகள் புற்றுநோய், மரபணுக்கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் பிறப்புக் கோளாறுகள் போன்ற இன விருத்தி பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

நெற்பயிரை தாக்கும் நத்தைகளிலிருந்து வளத்தை பாதுகாப்பதற்கான பாரம்பரிய வழிமுறையை, இந்திய மருத்துவர் இராமு விளக்கமளிக்கிறார்.

பூச்சிக்கொல்லிகள், பயிர்களை நாசப்படுத்தும் பூச்சிகளைக் கொல்லுவதற்காகவே பயன்படுத்தப்பட்டாலும் இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே கொன்றுவிடுகின்றன. பயிர்களுக்குத் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளையும் சேர்த்தே கொன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நிறைய நடந்துள்ளன. மலேசியாவில் உள்ள ஆறுகளில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் நிறைய இருப்பதாகவும், இவற்றில் சில தசாப்தங்களுக்கு முன்பே தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள விளை நிலங்களில் 77% மேலான நிலங்கள் செம்பனை, ரப்பர், கொக்கொ, அன்னாசி, மிளகு போன்ற விளைச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியுள்ள நிலங்களில்தான் நெல், காய்கறிகள், பழங்கள் நடப்படுகின்றன.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில், விவசாயிகள் தங்களுடைய பயிர்களில் ஒரே பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு விதமான தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை கலந்து அவற்றின் வீரியத்தை அதிகரித்துப் பயிர்களுக்குத் தெளிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பயனீட்டாளர்களுக்கு நஞ்சில்லாத காய்கறிகள் போய்ச் சேர வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பல காலமாகப் போராடி வருகிறது. அந்த வகையில் பூச்சிக்கொல்லிகளின் துணை அல்லாமல் இயற்கையான முறையில் பயிர்களை விளைவிக்கும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும், இந்தியாவின் நீடித்த விவசாய மையத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜி.வி.ராமு அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை புரிந்தார். இவர் குழுவினரின் உழைப்பால் ஆந்திராவில் உள்ள ஓரிரு கிராமங்கள் அறவே பூச்சிக்கொல்லி இல்லாமல் விவசாயம் செய்கின்றன. இயற்கை முறை செலவுகளைக் குறைத்த அதே வேளையில் உற்பத்தியையும் பெருக்கியுள்ளது என்கிறார் டாக்டர் ராமு. பூச்சிக்கொல்லியற்ற வளர்ப்பு முறையை இப்பொழுது ஆந்திராவில் 1.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் மேற்கொள்கிறார்கள். இப்பொழுது இந்த பூச்சிக்கொல்லியற்ற முறையை இந்தியா முழுக்க 159 மாவட்டங்களில் மேற்கொள்கிறார்கள்.

டாக்டர் ராமு மலேசியாவில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கள், விவசாய இலாக்காக்களின் அதிகாரிகளோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டு பூச்சிக்கொல்லியற்ற மாற்று வழிகளைப் பற்றி எடுத்துரைத்தார். மலேசியாவில் செம்பனை, ரப்பர் மற்றும் நெல் வளர்ப்பில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட விவசாயிகள் பாதுகாப்பான மாற்று வழிகளைத் தெரிந்து வைத்திருக்கவில்லை.

பூச்சிக்கொல்லியற்ற இயற்கையான பயிர் பாதுகாப்பு முறைகளை மலேசிய விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும். பூச்சிகளின் வாழ்க்கை வட்டம், பயிர் நோய்கள், பூச்சி தாக்கும் காலம் போன்றவற்றைப் பற்றிய ஒரு முழுமையான அறிவை விவசாயிகள் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், எப்படி உள்நாட்டிலேயே கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு பூச்சி விரட்டிகளைத் தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

செம்பனை, ரப்பர் பயிர்கள் நிறைய கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. நெல்வயலிலும் நிறைய வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன. இப்படிச் செய்வதைத் தவிர்த்து இவற்றையெல்லாம் எருவாக மாற்றி இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

ஆக, மலேசியர்களின் நலன் காக்கும் பொருட்டு, பூச்சிக்கொல்லியற்ற இரசாயன உரங்கள் அற்ற இயற்கை விவசாய முறையினை விவசாயிகள் கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

Monday, June 20, 2011

பள்ளிக்கூடங்களில் சாதூரியமாக ஊடுருவுகின்றன மதுக் கம்பெனிகள் மாணவர்களை மதுவின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கல்வி ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைள் என்ற பெயரில் மது பான நிறுவனங்கள் மிகவும் சாதுரியமாக பள்ளிக்கூடங்களில் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்..

கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு உதவுவதாகக் கூறி நுழையும் மதுபான நிறுவனங்கள் மாணவர்களின் மனதில் தங்கள் மதுபான உற்பத்தியை மிகவும் இலகுவான முறையில் பதிய வைத்து விடுகின்றன என்றார் இத்ரிஸ்.

பள்ளிக்கூடங்களில் மிகவும் சாதூரியமான முறையில் நுழைந்து சிறார்களின் சிந்தனையை ஆக்கிரமிக்கும் யுக்திகளை கார்ஸ்பெக் மற்றும் கின்னஸ் மதுபான நிறுவனங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கின்றன.

கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் அகப்பக்கத்தை இணையத்தில் மேற்பார்வையிட்டபொழுது அதில் சிறார்கள் பச்சை வர்ண கார்ல்பெர்க் பையைப் பிடித்துக்கொண்டு புன்னகை பூத்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள். சென்ற வருட டிசம்பர் மாதத்தில் கார்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் மேற்கொண்ட சுற்றுலாவில் பிடிக்கப்பட்ட படமே இது. இந்த மாதிரியான நிகழ்வுகளின் மூலம் மது அருந்துவது ஏற்புடையது என்ற எண்ணம் மாணவர்களின் மனதில் அவர்களை அறியாமலேயே பதிந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

வடக்கில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தினந்தோறும் 40 பத்திரிகைகளை இலவசமாகவே வழங்குவதற்கு கார்ஸ்பெர்க் மலேசியா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் ஆங்கிலத் தரத்தை உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கையாம்.

மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக மதுபானக் கம்பெனிகள் கோரிக்கொள்வது கேலிக்குரியது. உண்மையில் பல குடும்பத் தலைவர்களை குடிகாரர்களாக்கி குடும்பங்கள் சின்னாப்பின்னமாவதற்குக் காரணம் இந்த மதுபானக் கம்பெனிகள் தயாரிக்கும் மதுதான்.

கல்வி கற்க உதவுவதாகக் கூறி தமிழ்ப்பள்ளிக்கூடங்களோடு கை கோர்த்து தங்களுடைய மது பிரண்டை இளையோர்களிடையே பிரபலப்படுத்தும் இன்னொரு மதுபான நிறுவனம் கின்னஸ் எங்கர் ஆகும்.

மலேசிய இந்தியர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி கின்னஸ் எங்கர் நிறுவனம் பள்ளிக்கூடங்களில் இலவச ஆங்கில வகுப்புக்களையும் நடத்தி வருகிறது.

எதிர்காலக் குடிகாரர்களை உருவாக்குவதற்கு இப்போதைய சிறார்களை நோக்கிக் குறி வைத்தால்தான் முடியும் என்பதை மதுபானக் கம்பெனிகள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளன. மது விளம்பரத்திற்கும் மது அருந்துபவர்களின் அதிகமான எண்ணிக்கைக்கும் இருக்கின்ற தொடர்பை மதுக்கம்பெனிகள் மறுத்தாலும் கூட உண்மை அதுதான். மது விளம்பரம் செய்யும்பொழுது ஒருவர் ஒரு மது பிரண்டிலிருந்து இன்னொரு மது பிரண்டிற்கு மாறுவாரே தவிர புதிதாக யாரையும் குடிக்கத் தூண்டுவதில்லை என்று இந்த மதுக் கம்பெனிகள் வலியுறுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.

மது உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தின் இளைய சமுதாயத்தைக் குறி வைத்து விளம்பரம் செய்கிறார்கள். 20களில் இருக்கும் இளைஞர்கள்தான் விரைவில் மதுவுக்கு அடிமையாகிறார்கள்.

ஆகையால் மதுக் கம்பெனிகள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்குவதற்காக பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் பொருட்டு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். மதுக் கம்பெனிகளை கல்வியாளர்களும், பள்ளிக்கூடங்களும், கல்வி அமைச்சும் ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கும் ஒரு நிலையில் மது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது அல்ல என்ற சிந்தனையும் மனப்போக்கும் கல்வி கற்கும் மாணவர்களிடையே அவர்களை அறியாமலேயே உருவாகிவிடும். பிறகு இதுவே மதுக் கம்பெனிகள் தங்களுடைய விற்பனையை அதிகரிக்கும் ஒரு உத்தியாகிவிடும் என்றார் இத்ரிஸ்.

சமுதாயத்தில் உள்ள எல்லா சிறார்களும் பதின்மர்களும் மதுவின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனக் கோட்பாடு கூறுகிறது. பள்ளிக்கூட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் மதுபான நிறுவனங்கள் இந்தக் கோட்பாடுகளை மீறுகின்றனவா என்று அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.

மது கொண்டு வரும் பாதிப்புக்கள் எண்ணிலடங்கா. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் பேர் மது ஏற்படுத்தும் நோய்களால் மரணமடைகின்றனர். நாட்டில் ஏற்படும் 30% சாலை விபத்துக்களுக்கு மது அருந்திவிட்டு காரோட்டுவதே காரணம் என்று சாலை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது. மது அருந்துவது ஒருவரை நிதானமிழக்கச் செய்து வன்முறைப் போக்கை உருவாக்குகிறது. இது வீட்டுக் கொடுமை, சிறார் சித்ரவதை மற்றும் பல விதமான குற்றச் செயல்களுக்கு வித்திட்டுவிடுகிறது. மது அருந்துபவர்களின் தொழில் திறனும், உற்பத்தித் திறனும் குறைந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

மதுக் கம்பெனிகள் பள்ளிக்கூடங்களில் எந்த ஒரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும். மது உற்பத்திகளுக்காக விதிக்கப்படும் வரிக்கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். மதுக் கம்பெனிகள் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதங்கள் விதித்து பிறகு அந்த அபராதத் தொகையை கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

மின்சார சைக்கிள்களுக்கு கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் தேவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டால் மட்டுமே, குறிப்பிட்ட சில வகையான மின்சார சைக்கிள்கள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மின்சார சைக்கிள்களுக்கு வெவ்வேறு நாடுகள், அந்தந்த நாட்டுக்கு ஏற்புடைய வகையில் சட்டங்களை வகுத்திருக்கின்றன. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகஅளவைக் கொண்ட மின்சார சைகக்கிள்கள் இருக்கின்றன. இவ்வளவு வேகத்தில் மின்சைக்கிளோட்டிகள் அமைதியாக பயணம் செய்யும் போது மற்ற மோட்டாரோட்டிகளால் அவர்கள் கவனிக்கப்படாமல் போய்விட நேரிடும். மேலும் நம்முடைய சாலைகளின் தன்மைக்கு அவை ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என இத்ரிஸ் கூறினார்.

ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஒப்ப மின்சக்தி வழி இயங்கும் சைக்கிளின் பெடல்கள், நம் நாட்டு சூழ்நிலைக்கு மிகவும் ஏதுவாக அமைந்திருப்பதால் அதன் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

40 கிலோ எடை கொண்டிருக்கும் ஒவ்வொரு மின்சைக்கிளும் 400 வாட் மின்சார மோட்டோரை கொண்டிருக்கிறது. ஓடும்போது அதன் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் வரை குறைய கூடியதாக இருக்கிறது. இப்படிபட்ட சைக்கிள்களுக்கு பதிவு, காப்புறுதி அல்லது ஓட்டநருக்கான லைசன்சும் தேவையில்லை என்றார் இத்ரிஸ்.

மின்சைக்கிள்களுக்கு பின்வரும் பாதுகாப்புகள் மிகவும் முக்கியமாகிறது.:
அ) வீடமைப்பு பகுதிகள் மற்றும் கெம்பஸ்களில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்
ஆ) பிரத்தியேக வழிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே பொது சாலைகளில் அவை அனுமதிக்கப்பட வேண்டும்
இ) சாக்கிள் ஓட்டனர் தலைக்கவசம், பளபளக்கும் பாதுகாப்பு மேலாடை அணிந்திருக்க வேண்டும்
ஈ) மின் சைக்கிள்களின் பிரேக் சரியாக இயங்கும் வகையிலும், பாதுகாப்பு தரத்தைக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வந்தால், குறுகிய தூர ஓட்டத்திற்கு இது மிகவும் வசதியான மலிவான வாகனமாக அமையும். மேலும் வண்டியை நிறுத்துவதற்கு குறைந்த இடமே தேவை. சுலபமாகவும் பார்க் செய்து விடலாம். பாதுகாப்பான மின் சைக்கிள் உபயோகிதத்துக்கு, சட்டத்தைத் திருத்தி தேவையான பாதுகாப்பு அம்சங்கள் புகுத்துவது மிகவும் அவசியம். அதோடு இதர பிரிவுகளைச் சேர்ந்த சைக்கிள்கள் நமது சாலைகளில் அனுமதிக்கக்கூடாது என பி.ப.சங்க தலைவர் இத்ரிஸ் கூறினார்.