Wednesday, February 11, 2009

குறுந்தகவல் மோசடிகள்! அரசாங்க நடவடிக்கை அவசியமாகிறது!பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

குறுந்தகவல்கள் மோசடிகள் குறித்து பயனீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதோடு நின்று விடாமல் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பையும் அரசாங்கப் கொண்டிருக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

அண்மையில் வியாபார தந்திர அடிப்படையில் அனுப்பட்ட ஒரு குறுந்தகவலினால் ஒரு பயனீட்டாளர் பாதிக்கப்பட்டிருந்தார். இப்போஸ் (EPPOS) எனப்படும் பயனீட்டாளர்கள் சொந்தமாக தங்கள் கட்டணங்களை (உதா மின்கட்டணம், தொலைபேசி கட்டணம்) செலுத்தும் இயந்திரத்தில் முதலீடு செய்ய கோரும் மோசடி தந்திரம் அது. பயனீட்டாளர்களின் வசதிக்காக இந்த இயந்திரங்கள் பேரங்காடிக் கடைகள், உணவகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இயந்திரத்தின் மீது முதலீடு செய்பவர்கள் மாதம் மவெ1000 வருமானமாக பெறலாம் என்று கூறிக்கொள்ளப்படுகிறது. முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் உறுதிக் கூறப்படுகிறது.

இந்த இயந்திரத்தின் விலை மவெ19,888 என்றும் அதனை கிரெடிட் அட்டை மூலமாகவும் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான முழுக்கட்டணத்தைச் செலுத்தியப் பிறகு, மாதாந்திர வருமானமும் கிடைப்பதில்லை, அந்த நிறுவனமும் அதன் பின்பு தொடர்பு கொள்வதில்லை.

இத்தகைய ஏமாற்று மோசடிகளை முறியடிப்பதற்கு அரசாங்கம் இருவிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

முதலில், பயனீட்டாளர்களுக்கு எப்படி இப்படி தேவையில்லாத குறுந்தகவல்கள் வருகின்றன என்பதை ஆராய வேண்டும். பெரும்பாலும் பயனீட்டாளர் தங்களைப் பற்றி கொடுக்கும் தனிப்பட்ட தகவல்களிலிருந்தே இவை எடுக்கப்படுகின்றன. (உதாரணத்திற்கு மனு பாரங்களிலிருந்து பெறப்படுகிறது) அதாவது இத்தகைய தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் இத்தகவல்களைத் தவறுதலாக பயன்படுத்துகின்றார்கள் அல்லது அத்தகவல்ககளைப் பாதுகாப்பற்ற முறையில் கையாளப்படும் போது அவை அடுத்தவர் கையில் கிடைப்பதற்கு ஏதுவாகி விடுகிறது.

ஒரு தனிநபர் பற்றிய சொந்த விவரங்கள் அவரது அனுமதி இல்லாமல் மற்றுவர்களுக்கு கொடுக்கப்படக்கூடாது.

இப்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், அதற்கு தக்க தண்டனை வழங்குவதற்கும் நமக்கு தனிநபர் பாதுகாப்பு சட்டம் தேவையாக இருக்கிறது.
இரண்டாவதாக, ஒப்பந்த விதிகளை மீறும் கிரேடிட் அட்டை நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பிரிட்டனின் பயனீட்டாளர் கிரேடிட் சட்டம் 1974 பிரிவு 75ன் கீழ் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பொருளின் ரொக்க விலை 100 பவுனிலிருந்து 30,000 பவுனுக்குள் இருந்தால் (மவெ527லிருந்து மவெ158,222குள்) அவருக்குரிய கடன் 25இ000 பவுனை (மவெ131இ852) தாண்டக்கூடாது. கார்டு உரிமையாளர்கள் தனது அட்டையைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பொருள் அல்லது பெறப்பட்ட சேவை பிரச்னைக்குரியதாக இருந்தால் கிரேடிட் அட்டை நிறுவனத்தில் அதற்குரிய கோரிக்கையை அவர்கள் பெறலாம்.

பயனீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், கிரேடிட் அட்டை நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தத்தை மீறி நடக்கும் போது அதற்குரிய முழு பொறுப்பை ஏற்கும் முறை இங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று இத்ரிஸ் கேட்டு கொண்டார்.
எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Tuesday, February 10, 2009

காக்கும் தெய்வம் காட்டிக் கொடுத்துவிட்டது!

சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன்.

இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

தமிழ் உணர்வாளர் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நீங்கலாக ஏனைய இரண்டு தீர்மானங்களின் முக்கிய பகுதி; கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத்தரவும் - அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும் - மக்களாட்சி முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும் ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பின் பெயரால் தமிழகத்தின் பட்டி-தொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பரப்புரை கருவிகளைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப்பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.

முதற்கட்டமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் தன்னாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் இந்தச் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை மக்கள் மன்றத்தில் விளக்கி ஆதரவு திரட்டி வலிமை சேர்த்திட தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பரப்புரை விளக்கப் பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் வருகிற 7 ஆம் நாள் சென்னையிலும் 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்துவதென்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் மூலம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சியை இழக்கத் தயாரில்லை என்பதையும் காங்கிரஸ் கட்சியோடான கூட்டணி தொடரும் என்பதையும் சொல்லிவிட்டார்.

மேலும் முதல்வர் கருணாநிதி தனக்கும் மத்திய அரசுக்கும் பகை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது, நாங்கள் வெளியேறி விடுவோம் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள். திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மார் தட்டியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி பழைய குருடி கதவைத் திறவடி என்ற பழமொழிக்கொப்ப 1984 இல் தொடங்கிய தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (வுயஅடை நுநடயஅ ளுரிpழசவநசள ழுசபயnளையவழைn (வுநுளுழு) போன்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.

1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கும் இப்போது தொடங்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது. தமிழீழ ஆதரவாளர் அமைப்பு தமிழீழத் தனியரசு அமைவதை ஆதரித்ததோடு இந்தியா, ஸ்ரீலங்காவில் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழீழம் என்ற சொற்பதம் தீண்டப்படாத சொல்லாகக் கருதப்பட்டு அது நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் 'தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் தன்னாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயற்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் இதை விளக்கி பொதுக்கூட்டம், பேரணி நடத்தும் என்பது தான் தீர்மானம்.

இதன் மூலம் தமி;ழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இறுதித் தீர்மானம் உட்பட 3 தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்ட போர் நிறுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் கைகழுவிவிட்டு விட்டார்.

போர் நிறுத்தம் பற்றிச் செயற்குழு தீர்மானத்திலே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சியும், முழுமையான அதிகார பகிர்வு கலந்த அரசியல் தீர்வும் உருவாக்க, செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தீர்மானம் கூறுகிறது.

தமிழீழ மக்கள் வாழும் வட- கிழக்குப் பகுதி தமிழீழம் என்பது மறைக்கப்பட்டுவிட்டது. இது தற்செயலான நீக்கம் அல்ல. இந்திய காங்கிரஸ் அரசின் கொள்கைக்கும் நிலைப்பாட்டுக்கும் இசையச் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தமிழீழ விடுதலைக்கு ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சகோதர யுத்தம் செய்த காரணத்தாலேயே ஆயுதப் போராட்டம் பலவீனம் அடைந்தது என்ற கருத்தை எழுதும் போதும் பேசும் போதும் முன்வைக்கிறார்.

'1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்களாலும், அவரது தளபதியாக விளங்கிய நாவலர் அமிர்தலிங்கம் அவர்களாலும் பிரகடனப்படுத்தப்பட்டதும், வலியுறுத்தப்பட்டதும், தாய்த் தமிழகம் போன்ற பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் ஒருமித்த ஆதரவைத் தேடிப் பெற்றதுமான 'தமிழ் ஈழம்" அமைப்பதற்கான குரல், வலிமை அடைந்து - அந்தக் குறிக்கோளின் வெற்றிக்காக பல போராளிக் குழுக்கள் அமைந்து, அத்தனை போராளிகளும் ஒன்றாக இருந்து சிங்கள அரசை எதிர்த்து சில காலம் - பின்னர் அவை தனித்தனியாகப் பிரிந்து சகோதர யுத்தங்கள் நடத்தி பலவீனப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இப்படி முதல்வர் சொல்வதில் இருந்து அவர் இறந்த காலத்திலியே இன்னமும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இவர் குறிப்பிடும் சகோதர யுத்தம் என்பது அவரது நட்புக்கும் அரவணைப்புக்கும் உரிய ரெலோவின் தலைவர் சபாரத்தினத்தைக் குறிக்கும். முதல்வர் எழுதிய பாலைவன ரோசாக்கள் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாத்திரத்துக்கு (சத்தியராஜ்) அந்தப் பெயரை கலைஞர் வைத்திருந்தார்.

அவர் குறிப்பிடும் சகோதர யுத்தத்துக்குக் காரணம் இந்திய உளவு நிறுவனமான றோ என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார். வி.புலிகளின் வளர்ச்சியை விரும்பாத றோ அதனை அழிக்க ரெலோ அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கியதன் காரணமாகவே சகோதர யுத்தம் வெடித்தது.

றோ மீதுள்ள நம்பிக்கையைச் சோதிக்கவே அதன் பணிப்பின் பேரிலேயே ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிலங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் இருவரையும் கொலை செய்தது. கொலை செய்து விட்டு பழியை வி. புலிகள் மீது சுமத்தியது.

'இலங்கை தமிழர் நலத்துக்காக 50 ஆண்டு காலமாகப் போராடி, சிறை சென்று, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்து, அதற்கும் மேலாக தமிழக ஆட்சியையே இரு முறை இழந்து வீண் பழிச் சொற்களைச் சுமந்து, இப்போது 5 ஆவது முறையாக பொறுப்பேற்று மக்களுக்கான சாதனை சரித்திரத்தையே படைத்து வருகிற ஆட்சியை சாய்த்து விட சதித்திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்" எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக ஆட்சியை இரண்டு முறை இழந்ததாக ஒரு பல்லவியை தமிழக முதல்வர் கருணாநிதி நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார். ஆனால் அது உண்மையல்ல. முதன்முறை ஊழல் குற்றச்சாட்டிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

1991 இல் திமுக ஆட்சியை கவிழ்த்து விட்டு தேர்தலைச் சந்திக்க விரும்பிய ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய காங்கிரஸ் பிரதமர் சந்திரசேகரருக்கு கொடுத்த நெருக்கடியால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் சந்திரசேகரருக்கு வழங்கிக் கொண்டிருந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்ட போது அவரது ஆட்சியும் கவிழ்ந்தது. இதுதான் நடந்த உண்மை.

இதே போல் 50 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் நலத்துக்காக திமுக போராடி வந்தது என்பதும் உண்மையல்ல.

முதல்வர் கருணாநிதியே கிமு, கிபி என்பது போல வி.புலிகளோடான திமுகவின் உறவை ராஜீPவ் காந்திக்கு முன் ராஜீPவ் காந்திக்குப் பின் எனப் பிரித்து 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வி.புலிகளுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது அவர்களுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். முதல்வர் கொடுத்துள்ள ஆண்டு வாரியான திமுகவின் சாதனைப் பட்டியலில் 1995 நவம்பர் மாதம் 30 ஆம் நாள் முழு அடைப்பு என்ற பதிவுக்குப் பின்னர் எந்தப் பதிவும் பதியப்படவில்லை. உண்மையும் அதுதான்.

திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றிக் கருத்துச் சொன்ன மருத்துவர் இராமதாஸ் நிவாரண நிதி திரட்டுகிறோம் என்று சொல்லி தொடக்க முதலே இலங்கைத் தமிழர் சிக்கலையே முதல்வர் கருணாநிதி திசை திருப்பி விட்டார் என்றும் போர் நிறுத்தம் தொடர்ர்பான கோரிக்கைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் 'திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏதோ ராஜபக்ச கட்சித் தீர்மானத்தைப் போல உள்ளது. அது திருப்தி தரவில்லை, ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தமிழ் இனம் இலங்கையில் அழிகிறது, மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்று கடந்த சனவரி மாதம் 23 ஆம் நாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு அவர் சொன்ன விளக்கத்தில் 'கேட்டுக் கேட்டுப் பலன் கிடைக்காததால் இந்த தீர்மானத்தை முன்மொழிவதாக" சொல்லி இருந்தார். உடனே இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அமைதியை நிலவச் செய்யவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டால் திமுகவின் அடுத்த நடவடிக்கையாக செயற்குழு அல்லது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்போம் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். தற்போது அவரது இறுதி வேண்டுகோள் ஒன்றுமே இல்லாமல் போனதால் திமுக.வின் செயற்குழு கூடி தீர்மானம் போட்டிக்கிறது. இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பதன் மூலம் இலங்கை தமிழர் சிக்கலில் திமுக அரை நூற்றாண்டிற்குப் பின்நோக்கி போயிருக்கிறது" என்று மருத்துவர் இராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்தத் தெய்வம் தங்களைக் காக்கும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்களோ அந்தத் தெய்வம் கை விட்டதும் அல்லாமல் காட்டியும் கொடுத்துவிட்டது. இவ்வளவு எளிதாக - எந்த வெட்கமோ துக்கமே இன்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை காற்றில் பறக்கவிட தமிழக முதல்வர் நினைத்தது எதைக் காட்டுகிறது?

அவர் தொடக்க முதல் உள்ளத் தூய்மையோடு தமிழீழ மக்கள் பற்றிய சிக்கலைக் கையில் எடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. முதல்வர் கால் சறுக்குவார், வாக்குத் தவறுவார் என்று சிலர் முன்கூட்டியே எதிர்கூறல் சொன்னார்கள். வைகோ தமிழக முதல்வர் நாடகம் ஆடுகிறார் இது வெறும் கண்துடைப்பு என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டார். அப்போது வைகோ மீது நாம் வருத்தப்பட்டோம். ஆனால் இப்போது அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது.

தனது கடைசிக் காலத்தில் ஏதோ தமிழீழத் தமிழர்களுக்கு உதவி செய்துவிட்டு நல்ல பெயரோடும் புகழோடும் கண்ணைமூடுவார் என்று நாம் எதிர்பார்த்தோம். அந்த எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது. இனி அவர் மீது படிந்து விட்ட வரலாற்றுக் கறையை உலகத்தில் உள்ள அத்தனை சோப் போட்டுக் கழுவினாலும் போக்க முடியாது.

சிறிலங்காவில் சிங்கள இனவாத ஆட்சித்தலைவர் தொடங்கி சாதாரண சிங்கள அரசியல்வாதி வரை முதல்வர் கருணாநிதிக்குச் பாமாலை பாடி புகழ்மாலை சூட்டுகிறார்கள். பசில் ராஜபக்ச தமிழ்நாட்டின் வாயை மூடச் செய்துவிட்டார் என எழுதுகிறார்கள். முதல்வர் கருணாநிதியின் வாலை ஒட்ட வெட்டிவிட்டதாக பௌத்த தேரர்கள் அறிக்கை விடுகிறார்கள். கருணாநிதியின் சரணாகதி சிங்கள இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்று சிங்கள - ஆங்கில ஊடகங்கள் கொக்கரிக்கிறன. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று சிங்கள - பௌத்த இனவெறியன் மகிந்த இராஜபக்ச இலங்கை வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுகிறான்.

இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பால் தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பினரும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் தானியங்கி ஓட்டுநர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் பல்வேறு சட்டவாதிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7,200 பேர் கைது செய்து சிறையில் டைக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேலை நிறுத்தம் சட்டத்துக்கு மாறானது - உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறானது - என முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. உச்ச நீதிமன்றமே தமிழர்கள் தங்கள் தமிழ் உணர்வைக் காட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது முதல்வர் கருணாநிதியின் முகத்தில் கரி பூசி விட்டது.

வேலை நிறுத்தம் வெற்றிபெற மாணவர்களே கடுமையாக உழைத்துள்ளார்கள். அறுபதுகளில் இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களே போர்க்கொடி தூக்கினார்கள். இப்போது மீண்டும் அவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். அதனைப் பார்த்து வெருண்டு போன தமிழக அரசு கல்லூரிகளை மூடிவிட்டது.

தமிழ் உணர்வாளர் முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் அலைமோதிய மக்கள் கூட்டம் அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சாவோலையில் 'என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்" எனக் கேட்டுக் கொண்டார். அவரது ஆசை நிறைவேறிவருகிறது.

தமிழக முதல்வர் தனது ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியை நம்பி இருககிறார். காங்கிரஸ் திமுகவை நம்பி இருக்கிறது. ஆனால் மக்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை புறந்தள்ளப் போகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புதிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.

-நக்கீரன்-

Friday, February 6, 2009

தைப்பூச திருநாள் வாழ்த்துகள்


இந்திய சமூகத்தினர் அனைவருக்கும் தமிழ் மருதத்தின் தைப்பூச திருநாள் வாழ்த்துகள்!

Thursday, February 5, 2009

ஒரு தேங்காய் போதும்! பொருளாதார வீழ்ச்சியையும் வேலை இழப்பையும்! கூடுதல் தேங்காய்கள் குப்பைக்குத்தான் போகின்றன!

ஒரு தேங்காய் உடையுங்கள்! இதுதான் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தைப்பூசத்திற்குத் தேங்காய் உடைக்கும் பக்தர்களுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்.

உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக தெய்வீக அம்சம் கொண்ட தைப்பூசத்தினத்தன்று விரயத்தையும் குறைத்துக்கொண்டு,சேமிப்பை அதிகரிக்க பக்தர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

விரயம் என்று சொல்லும்போது, உணவுப் பொருளான தேங்காயும், பாலும் அதிக அளவில் செலவிடப்படுவதை குறைக்க வேண்டும் என அதன் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.


ஒரு தேங்காய் உடைத்து நமது வேண்டுதலை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் நூறிலிருந்து ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டு யாருக்குமே பயனில்லாமல் குப்பை மேட்டுக்குச் செல்வதை நாம் கட்டாயமாக நிறுத்த வேண்டும்.

உணவுக்காக ஓடி அலையும் மக்கள் இருக்கும்போது நாம் அந்த உணவை யாருக்கும் பயன் தராமல் குப்பை மேட்டுக்கு அனுப்புவது சரியான செயல் அல்ல என சுப்பாராவ் சுட்டிக் காட்டினார்.

இப்பொழுதுள்ள பொருளாதார மற்றும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கருத்தில் கொண்டு விரயத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு தேங்காயின் விலை மவெ. 1.50 என விற்கப்படுகிறது. ஆயிரம் தேங்காய்களை வாங்கி உடைப்பதால் யாருக்கு என்ன பயன்? அதுவும் வேண்டிக்கொள்பவர் ஒரு தேங்காயை மட்டும்தான் உடைப்பார். வேண்டுதல் செய்யாதவர்களும் நடந்து செல்பவர்களும் ஏதோ தேங்காய் உடைக்கும் போட்டியில் கலந்துகொள்வது போல தேங்காய்களை உடைக்கின்றனர். அப்படி உடைக்கப்படும் தேங்காய்களில் ஏறக்குறைய 25 விழுக்காடு தேங்காய்கள் கெட்டுப்போனவையாக இருப்பதும் தெரிய வந்திருப்பதாக சுப்பாராவ் கூறினார்.

வாங்கும் தேங்காய்களிலும் ஏமாந்து, அவற்றை யாருக்குமே பயனில்லாமல் செலவழிப்பதை பக்தர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார்கள் என தாங்கள் நம்புவதாக சுப்பாராவ் கூறினார்.

தேங்காய் உடைப்பது அவரவர் உரிமையும், சுதந்திரமாக இருந்தாலும் அது கேளிக்கையாகவும் வரம்பு மீறியும் இருக்கக்கூடாது என்றார் அவர்.

ஒரு தேங்காய் உடைத்து நமது வேண்டுதலை நிவர்த்தி செய்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று கூலிம் தியான ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களும் கூறியிருக்கிறார்.

அதேப்போன்று குறிப்பிட்ட நிறுவனங்களின் பால் போத்தல், பேக்கட்டுக்களை வாங்கி பாலையும் அதிக அளவில் வீணடிக்கிறோம் என்றார் சுப்பாராவ். போதாததற்கு பால் உற்பத்தி நிறுவனங்கள் தைப்பூச நல்வாழ்த்துக்கள் எனக் கூறி இல்லாத ஒன்றை தோற்றுவித்திருக்கின்றார்கள். சமயத் திருநாள் ஒரு வர்த்தக நாளாக மாறிவருவது வேதனையை அளிக்கிறது.


ஆகவே ஆயிரக்கணக்கான தேங்காய்களுக்கும் பல லிட்டர் பாலுக்கும் செலவழிக்கும் பணத்தை, பொருளாதார நெருக்கடியால் நிதி நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டு வரும் அனாதை ஆசிரமங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள், அபலைப் பெண் நிலையங்கள், முதியோர் இல்லங்கள், தனித்து வாழும் தாய்மார் இல்லங்கள் போன்றவற்றில் தங்கியிருக்கும் நமது இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்ய முன் வர வேண்டும் என சுப்பாராவ் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இப்படிப்பட்ட இல்லங்களில் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இல்லங்களை நடத்துவோர் பணத்துக்காகப் பலரிடம் கையேந்தி நிற்கின்றார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும்.

மக்கள் சேவையே மகேசன் சேவை. இப்படிப்பட்ட ஆதரவற்றோர்களுக்கு நாம் செய்கின்ற சேவைதான் நாம் இறைவனுக்குச் செய்கின்ற சேவை.

ஆகவே தைப்பூசத்திற்குக் கூடுதலாக தேங்காய்களை உடைக்க எண்ணியிருக்கின்ற பக்தர்கள் இந்தக் கருத்தை மனத்தில் கொண்டு ஆதரவற்றிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் அவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தைத் தந்துகொண்டிருக்கிற இந்திய தொண்டூழிய அமைப்புக்களுக்கும் இந்தத் தைப்பூசத் தினத்தின்போது நிதி உதவி தர முன் வருமாறு பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக என்.வி.சுப்பாராவ் கூறினார்.

Tuesday, February 3, 2009

பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் தைப்பூச சமூக சேவைப் பந்தல்

படத்தைச் சுட்டி பதிவிறக்கம் செய்து பார்க்கவும். இச்சேவைக்கு தன்னார்வத் தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்! மேலும் தகவல்களுக்கு : திரு.சுரேஷ் 019-4586587, திரு.கலை 012-5637614, சரஸ்வதி 012-7162884, திரு.மாறன் 012-5557522, திரு.செல்வம் 016-4827974

நன்றி : ஓலைச்சுவடி

Monday, February 2, 2009

சிங்களச் சித்ரவதைகள் - கொலைகார வெள்ளை வேன்

இலங்கை தமிழர்கள் பல கொடுமைகளுக்கு உட்படுத்திய சிங்கள இராணுவத்தின் அராஜகங்களை விவரிக்கும் ஆய்வு கட்டுரை,ஆனந்த விகடன் இந்த முகப்பு படம் கொண்ட பிரிதியை வாங்கி படிக்கலாம். கிடைக்காதவர்களுக்கு இஙகே அக்கட்டுரையைப் பதிவுயேற்றம் செய்துள்ளேன்.

நன்றி: ஆனந்த விகடன் 21-1-2009


(1)

(2)

(3)

(4)

குகன்- நல்லவனா? கெட்டவனா?

Friday, January 30, 2009
குகன்- நல்லவனா? கெட்டவனா?
மறுக்காமல் படிக்கவும்.

நாட்டையும் நாட்டின் அரசியலையும் ஆட்டிப் படைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் எழும் காலகட்டத்தில் நமது ஊடகங்கள் ஓரிரு நாட்களுக்கு அதனை ஒரு பக்கமாக ஊதிப் பெரிதாக்குவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் மலேசிய ஊடகங்களின் வழக்கமான வியாபார நாடகம் என்றால் அது மிகையாகாது.

அதில், நம் தமிழ் அச்சு ஊடகங்கள் நம் சமுதாயத் தொடர்புடைய தகவல்களை அல்லது உண்மை நிலவரங்களை வெளியிடும் முனைப்பு பாராட்டுக்குரியது. என்றாலும், அடுத்த நாளே இந்த நாளிதழ்கள் ஆளும் கட்சியினரின்; ஆதிக்கவாதிகளின் ஒருதலைபட்ச செய்திகளை முன்னுக்குப் பின்னாக அச்சிட்டு, எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் போக்கு, மலேசியத் தமிழரிடையே தமிழ் நாளிதழ்களை வெறுக்கும் மனப்பான்மையை அதிகரித்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

நாளிதழ் உரிமையாளர்கள் இதற்கு காரணங்கள் பல கூறலாம். அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இவர்கள் முகாரி பாடுகின்றார்கள். ஆனால், இனம், மதம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காத ஏனைய செய்திகளையும் ஏன் இவர்கள் அச்சிட மறுக்கின்றனர் என்பதுதான் விளங்கவில்லை. மேடையில் அச்சமில்லை.. அச்சமில்லை என்று முழங்கிவிட்டு ஒரு சமுதாயத்திற்கு முதுகெலும்பாக, அறிவுக் கண்களாக விளங்க வேண்டிய சாதனத்தை சாக்கடையிலே மூழ்கடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள்; ஊடகங்கள் இன்னும் எச்சில் சோற்றுக்குத் தவம் கிடக்கின்றன.

ஒரு நிகழ்வையோ அல்லது யாரோ ஒருவர் கூறும் செய்திகளை முழுமையாகவோ அல்லது தணிக்கை செய்து அச்சிடுதல் மட்டும் ஒரு நாளிதழின் கடமையன்று. பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் நாளிதழின் நிலைபாட்டை, ஆலோசனைகளை வாசகர்களுக்கு முன்வைக்க வேண்டும். மலேசியாவைப் பொறுத்தவரை, ஒரு விடயம் குறித்த நாளிதழ்களின் பொறுப்பாசிரியர் குழுவின் நிலைப்பாடு முடிந்த மட்டில் தவிற்க்கப்படுகிறது. பல உண்மைச் சம்பவங்கள் ஓரங்கட்டப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களினால்தான் அச்சு ஊடக வாசகர்கள் மாற்று ஊடகங்களை நாடிச் செல்கின்றனர் எனும் மாபெரும் உண்மையை அவர்கள் இன்னும் உணராதிருப்பது வருத்தமளிக்கிறது.

சரி, குகனின் மரணத்திற்கும் நம் தமிழ் நாளிதழ்களை நான் சாடியதிற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கின்றீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

மகிழுந்து (கார்) திருட்டை காரணம் காட்டி குகன் கைது செய்யப்பட்டார் என்பது பொதுவாக மலேசியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. காவல் துறையினர் அறிவித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்திகளை தங்களுக்கே உரிய பாணியில் கக்கியிருந்தன. காவலில் வைக்கப்பட்ட குகன், இளைப்பு நோயால் மூச்சடைத்து இறந்துவிட்டதாக உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார் அலந்தார். (அறிவே இல்லாது அபாராமாகப் பேசி பின் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இவர் என்பது நாம் அறிந்ததுதானே)

குகனுக்கு எந்த நோயும் இல்லை; காவல் துறையும் சேட்டு அமீது அலப்பாரும் பொய்யுரைக்கின்றனர் என்று குகனின் தாயார் ஆவேசப்பட்டார்.

மறுநாள், தேசிய கலவாடல் துறைத் தலைவர் மூசாங் அசான் தனது பங்குக்கு மருத்துவ உலகமே வியக்கும் புதியத் தகவலை வெளியிட்டார். குகன் தாகம் என்று தண்ணீர் கேட்டாராம்; காவல் அதிகாரி தண்ணீர் கொடுத்தாராம்; தண்ணீரைக் குடித்த குகனின் நுரையீறலில் கொஞ்சம் நீர் கோர்த்துக் கொள்ள, மூச்சடைத்து மரணம் அடைந்தாராம் ( இனி நீர் அருந்தும் போது கவனமுடன் இருக்கவும். உங்களுக்கும் அடிக்கடி தண்ணீர் மாட்டிக்கொள்ளப் போகிறது- என்னக் கொடுமை சாமி இது).

இணையத்திலும் மின் மடல்களிலும் குகனின் உடலில் காணப்பட்ட காயங்கள் கொண்ட நிழற்படங்கள் காட்டுத் தீயாகப் பரவின. மக்கள் வெகுண்டெழுந்தனர். மாற்றுக் கட்சியினரும் இதை ஓர் இனப் பிரச்னை அல்ல, இது தேசிய பிரச்னை என்று முழங்கினர்.

திடீரென, தேசிய சட்ட ஒழுங்கீனத் தலைவர் கனி பெட்ட தையல் முதல் முறையாக நாயகன் வேடம் பூண்டார். குகனின் மரணம் ஒரு கொலை என்று வகைபடுத்தப்பட்டது.

காவல் துறை, அரசினரின் மறைமுக தடங்கல்களைத் தகர்த்து, குகனின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் (அரசுக்கு அடங்கிய இடம்) இரண்டாவது சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன் கிழமையன்று (28/01/2009) குகனின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 அளவில் பூச்சோங் 14-வது மைல் இந்தியர் இடுகாட்டில் முடிந்ததும் நீங்கள் அறிந்த ஒன்றே.

நானும் குகனின் இறுதி ஊர்வலத்தில் இணைந்து கொண்டேன். முற்பகல் 11.00 மணி அளவில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையைச் சென்றடைந்த போது ஏறக்குறைய 20 பேர் மட்டுமே இறுதி ஊர்வலதிற்காக காத்திருந்தனர். ஆனால், காவல் துறையினர், கலகத் தொடுப்பு துறையினர் (FRU), சாலை ஒழுங்கீன காவலர்கள் (Trafic) மற்றும் சீருடை தரிக்காத தருதலைகள் என 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன் மோப்பமிட்டுக் கொண்டிருந்தனர்.

காலை 11.30. திடீரென்று ஓர் அதிகாரி எங்கள் முன் தோன்றி, 10 வினாடிகளில் எங்களைக் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டார். நாங்கள் குகனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருப்பதாகக் கூறினோம். எங்கள் பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஆரஞ்சு சட்டையை அணிந்தவர்களை முதலில் பிடிக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. "இன்ராப்பைத்தானே தடை செய்திருக்கிறீர்கள் மக்கள் சக்தியை தடை செய்யவில்லையே" என்றோம். "மேலிடத்து உத்தரவு; ஆரஞ்சு சட்டை அணிந்திருபவர்களை கைது செய்வோம்" என்று ஆணவத்தோடு கத்தினான் ஒருவன். நால்வர் தடுத்து வைக்கப்பட்டனர். (வாசகர்களே உங்கள் சீன நண்பர்களிடம் சீனப் புத்தாண்டுக்கு ஆரஞ்சு பழத்தை வாங்கி உண்ண வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அவர்களும் கைது செய்யப்படலாம்)

சற்று நேரத்தில் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களைக் கண்டதும் ஏனையோரை பிடிக்கும் படலம் நிறுத்தப்பட்டது. நான் இம்முறையும் தப்பித்தேன்.

அண்ணன் தனேந்திரன் வந்து அனுமதி கேட்டபோது அதிகாரி ஒருவனால் தள்ளிவிடப்பட்டார்; பின்னர் அவரும் அவருக்கு உதவிய பெரியவர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் போது நம் தமிழ் செய்தி சேகரிப்பாளர்களோடு மற்ற மொழி செய்தி சேகரிப்பாளர்களும் அருகில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

பிற்பகல் 1.30 மணியளவில் குகனின் உடல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட போது 2000-கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். கலகப் படையினரின் பய உணர்வு உச்சிக்குச் சென்றது; விளைவு எங்கள் தலை உச்சியில் பெரிய பட்டாம் பூச்சி (அதாங்க எலிகப்டர்).

குகனின் சவம் சுபாங் செயாவை கடக்கும் போது 3000 மலேசியர்கள் (இனம், மதம் பாராது) திரண்டிருந்தனர். இடுகாட்டை அடைந்த போது அங்கும் 10 வண்டிகளில் கலகத் தொடுப்பு துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அப்போது வானம் சற்று அழுததால் எல்லா அதிகாரிகளும் வண்டிகளுக்குள்ளே 'அடக்கமானார்கள்'.

குகனின் உடல் மரியாதை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இனி எந்த மனிதனுக்கும் காவல் துறையினரின் அத்துமீறிய மிருகத்தனத்தால் மரணம் நிகழக்கூடாது என்பதை நாம் தான் உறுதி செய்யவேண்டும்.

குகனின் மரணம் பல ஐயங்களை எழுப்பியுள்ளது.

1. ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் கீழ் மாதக் கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். (நன்றி : ஓலைச்சுவடி)

2. குகன் சொகுசு மகிழுந்து கடத்தலில் ஈடுபட்டதால் விசாரனைக்காகத் தடுக்கப்பட்டதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். சில கிடங்குகள் அடையாளம் காணப்பட்டு மகிழுந்துகள் மீட்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கிடங்குகளின் உரிமையாளர்களோ அல்லது தொடர்புடையவர்களோ யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு வேளை, இதெல்லாம் பூமியிலிருந்து தானாக முளைத்த கிடங்குகளாக இருக்குமோ?

3. அப்படி காவல் துறையினரின் கூற்று உண்மையெனில் குகன் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றார் என்பது தெளிவாகின்றதல்லவா? பின் ஏன் குகனுக்கு மரணம்? காவல் துறை அல்லது ஆளும் கட்சியின் பெரும் புள்ளிகளைக் காப்பாற்றும் பொருட்டு குகன் பலியிடப்பட்டிருகலாம் என்ற எண்ணம் வலுக்கிறது.

4. திருடப்பட்டதாகக் கூறும் மகிழுந்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை காப்புறுதி முகவர்களோ-அதிகாரிகளோ, JPJ அதிகாரிகளோ யாரும் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

5. உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார், குற்றவாளிகளை நாயகர்களாக மாற்ற வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டத்தின் முன் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒருவர் குற்றவாளி அல்ல நிரபராதியே என்று இந்த மொட்டைத் தலையனுக்குத் தெரியாமல் போனது விந்தையாக இருக்கிறது. இவர் யாரைக் காப்பாற்ற முனைகிறார்?( ஓ.. உள்ளே இருந்தால்தானே வெளியில் ஏதும் முளைத்திட... ஏன் பாலைவனத்தில் புல் பூண்டுகள் முளைப்பதில்லை என்பதை இவர் தலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்)

ஒட்டு மொத்தமாக காவல் துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறவில்லை. சில மனித மிருகங்களின் கைப்பாவையாக மக்கள் காவலர்கள் மாறக்கூடாது என்பதே நமது எண்ணம்.

குகன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி தேவையில்லை. கெட்டவனாக இருந்தால் சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். காவல் துறையினர் சட்டத்துறையின் வேலையைப் பார்க்கத் தேவையில்லை. சட்டத் துறை மதிக்கப்பட வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் நாள் வரவேண்டும்; நாட்டாமை தீர்ப்புகள் ஒடுக்கப்பட வேண்டும். வெளிப்படையான, நேர்த்தியான விசாரணைகள் மட்டுமே அரசு, காவல் துறை மற்றும் சட்டத் துறையின் மேல் படிந்த கலங்கத்தைப் போக்கும்.

ஊடகங்கள் நுணிப்புல்லை மேய்வதை விடுத்து சற்று தைரியமாக உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும். இணையம், வலைப்பதிவர்களின் வருகையால் வாசகர்களை இழந்துவரும் அச்சு ஊடகத்தார், வாசகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பசித்தவனுக்கு உணவுதான் தேவை; துணி மணிகள் அல்ல. வாசகர்கள் ஒட்டு மொத்தமாக இந்த ஊடகங்களை புறக்கணிப்பதற்கு முன் விழித்துக் கொள்வார்களா அதன் உரிமையாளர்கள்?

Posted by குமரன் மாரிமுத்து