மே மாதம் ஒன்றாம் தேதி காட்டையும் மேட்டையும் செல்வம் தரும் தங்க பூமியாக உயர்த்திக் காட்டிய தொழிலாளர் தினம்.
வெயில், மழை, மின்னல், இருள், பகல் என்று பாராமல் பல முதலாளிகளை தொழில் அதிபர்களாக உருவாக்கியவர்கள் தொழிலாளிகள்.
ரப்பர் தோட்டத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, செம்பனைத் தோட்டத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, கட்டுமானத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, உடல் உழைப்புத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி இவர்கள் அனைவரும் தொழிலாளி என்ற வர்க்கத்தில் வாழ்ந்து கொண்டு வருபவர்கள்.
ஏதாவது ஒரு தொழிலாளர் வர்க்கம் வேலை நிறுத்தம் செய்தாலும் அது நாட்டின் நிதி பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திவிடக்கூடும். ஆகவேதான் உலகத்தில் உள்ள அரசாங்கங்களும் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களை மதித்து வருகின்றது. பாராட்டியும் வருகின்றது.
நமது மலேசிய நாட்டில் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியவர்கள் என பாராட்டப்படுகின்றவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்.
நமது நாடு விவசாய நாடு என்பதை உருவாக்கித் தந்தவர்கள் இந்தத் தோட்டத் தொழிலாளர்கள். ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையிலிருந்த தோட்டத் தொழிலாளர் வர்க்கம் இப்பொழுது குறைந்துகொண்டே போனாலும் அரசாங்கம் இன்னும் தோட்டத் தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
ஆனால் மற்றெல்லா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது, உழைப்புக்கு ஏற்ற போதிய வருமானத்தை கொண்டு செல்லும்பொழுது தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் வீட்டுக்குச் செல்கின்ற வழியில் கடனை அடைத்துவிட்டு போகிற பழக்கம் இன்னும் தொடர்கிறது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கிடைத்தாலும் அது இன்றைய சூழ்நிலைக்கு பூர்த்தியானதாகத் தெரியவில்லை.
மாபாவில் அங்கத்தினர் இல்லாத தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் கூடிய பட்சம் எடுக்கின்ற சம்பளம் 500 வெள்ளிதான். மாபாவில் அங்கத்துவம் பெற்றுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 800 ரிங்கிட் வருமானமாம் பெறுகிறார்கள்.
கூடுதல் மரம் வெட்டினால் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் கூடுதல் மரம் வெட்ட கிடைக்குமா என்பது சந்தேகம்தான்?
அதிக ஊதியம் பெறுகின்ற நகர்ப்புற பயனீட்டாளர்களே இந்த விலை உயர்வினால் பலதரப்பட்ட பிரச்னைகளை எதிர்நோக்கும்போது, மிகக் குறைந்த ஊதியம் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்பதை நாம் மிக எளிதாக பட்டியலிட்டுக் காட்ட முடியும்.
ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் மிகக் குறைவான சத்துணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுகின்ற தொழிலாளர் வர்க்கம் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற விலை ஏற்றம் மற்றும் பண நெருக்கடியால் மேலும் பல இன்னல்களை எதிர்நோக்க நேரிடலாம்.
தோட்டத் தொழில் ஒரு எளிமையான தொழிலோ அல்லது பாதுகாப்பான தொழிலோ அல்ல. கடுமையான உழைப்பு, கவனம், பொறுப்பு, பாதுகாப்பு அனைத்தும் இந்த தொழிலுக்கு தேவைப்படுகின்றது.
ரப்பர் தொழிலைப் போல், செம்பனை தொழிற்துறையில் இன்னும் அதிகமான அக்கறையும் பாதுகாப்பும் தேவைப்படுகின்றது. செம்பனைத் தொழில் மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான தொழிலாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
ரப்பர் தொழிற்துறைப்போல் 8 மணி நேர வேலை செய்து வீட்டுக்குத் திரும்ப முடியாது.
இன்னும் எத்தனையோ தோட்டங்களில் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. குளிக்க அறை இல்லை. கழிவறைகள் கிடையாது. கழிவறைகள் இருந்தாலும் கதவுகள் கிடையாது. கதவுகள் இருந்தாலும் தாழ்ப்பாள் கிடையாது. இவையனைத்தும் இருந்தாலும் கழிவறைகளை சுத்தம் செய்ய தண்ணீர் கிடைக்காது.
இன்னும் எத்தனையோ தோட்டங்களில் தொழிலாளர்களும் அவர்களுடைய குழந்தைகளும் படிப்பதற்காக நூல் நிலையம் இல்லை. மக்கள் ஒன்று சேர்வதற்கு சந்திப்பு மையம் இல்லை.
கல்வி கற்ற எந்த சமூகமும் எல்லாத் துறையிலும் முன்னேற்றம் காணும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் மகிழ்ச்சிகரமானதாகவும் பிரச்னை இல்லாததாகவும் மற்றும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வாய்ப்புக்களை அக்கறையுடையவர்கள் செய்து தர வேண்டும்.
இனியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கனவுலக வாக்குறுதிகளை வழங்காமல் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய வசதிகளை வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment