Sunday, May 2, 2010

மாட்டுக் கொட்டகையை உடைக்கப்பட்டது 100 மாடுகள் அநாதை- 30,000 ரிங்கிட் சேதம் கம்போங் புவா பலாவில் முடிவில்லாத மனிதநேயமற்ற செயல்!

பினாங்கில் உள்ள கம்போங் புவா பலா என்ற கிராமத்தில் பிரச்னைக்கு மேல் பிரச்னை தொடர்கதையாக இருந்து வருகின்றது.

முன்பு அங்கே குடியிருந்தவர்கள் வீட்டுப் பிரச்னை மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த கிராமத்தில் நூற்றாண்டு காலமாக இருந்த இரண்டு மாட்டுக் கொட்டகைகளுக்கு பிரச்னை ஏற்பட்டிருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறியது.

கடந்த புதன்கிழமை காலை 11.00 மணிக்கு திரு கே.சிவானந்தம் என்பவருடைய மாட்டுக்கொட்டகை உடைக்கப்பட்டது. இதனால் அவருக்குச் சொந்தமான 100 மாடுகளும் 15 கன்றுக்குட்டிகளும் தங்குவதற்கு இடமில்லாமல் அநாதையாக, அகதிகளாக அக்கிராமத்தைச் சுற்றி வருகின்றன என்றார் பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

திடீரென தன்னுடைய மாட்டுக் கொட்டகைக்கு வந்த சிலர் எந்த வித கடிதத்தையும் காட்டாமல், முன்னறிவிப்பின்றி மாட்டுக் கொட்டகையை உடைத்துவிட்டனர் என சிவாநந்தம் கூறினார்.

தினமும் ஏறக்குறைய 200 ரிங்கிட்டிலிருந்து 300 வெள்ளி வரை பால் கறந்து விற்று வந்தேன். ஆனால் இப்பொழுது கடந்த இரண்டு நாட்களாக அதுவும் செய்ய முடியாமல் தடை பட்டுவிட்டது என கண்ணீர் மல்கக் கூறினார்.


இவருடைய சகோதரர் சுப்பிரமணியம் என்பவருக்கும் இதே கம்போங் புவா பாலா கிராமத்தில் மாட்டுக் கொட்டகை இருக்கின்றது. அவருடைய மாட்டுக்கொட்டகையும் இன்னும் சில தினங்களில் தாங்கள் உடைக்கவிருப்பதாக மேம்பாட்டாளர் கூறியதாக சுப்பிரமணியம் கூறினார்.

இந்த இருவரும் மாட்டுக் கொட்டகை வைத்திருப்பது அரசாங்க நிலத்தில். ஆக அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எவ்வாறு மேம்பாட்டாளர் மாட்டுக் கொட்டகையை உடைத்தார் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது என சுப்பாராவ் கூறினார்.

இது தொடர்பாக பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் ராமசாமியிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது தனக்கும் முதலமைச்சருக்கும் மாட்டுக் கொட்டகை உடைபடும் பிரச்னை பற்றி தெரியாது என்றும் மாநில அரசாங்கம் மாட்டுக் கொட்டகை உடைப்பதற்கு அனுமதி தரவில்லை என்றும் தன்னிடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.


ஆக, யாருடைய உத்தரவின் பேரில் மேம்பாட்டாளர் சிவானந்தமுடைய மாட்டுக் கொட்டகையை உடைத்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. சிவானந்தத்திற்கு சொந்தமான 100 மாடுகள் தங்குவதற்கு இடம் அவசியமாகத் தேவைப்படுகின்றது. இருக்கின்ற கன்றுக்குட்டிகள் நிழலில் தங்க வைக்கப்படாமல் இருந்தால் நிச்சயம் அவை இறந்துவிடும். இதற்கு மாநில அரசாங்கம் உடனடியாக உதவி செய்ய வேண்டும் என சிவானந்தமும் சுப்பிரமணியமும் கேட்டுக்கொள்கின்றனர்.


இந்த இருவரும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை அமைத்துக்கொள்வதற்கு ஏற்ற ஓர் இடத்தை மாநில அரசாங்கம் செய்து தர வேண்டும் பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது.

ஏற்கெனவே அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தாங்கள் தேர்வு செய்த வீடுகளுக்குச் சென்று விட்டனர். ஆனால் வாயில்லா ஜீவன்களான மாடுகளுக்கு ஏற்ற ஓர் இடத்தை அடையாளங்காண முடியாமல் அவற்றை அநாதையாக விட்டிருப்பது வருந்ததத்தக்க ஒரு செயல் என சுப்பாராவ் கூறினார்.

No comments:

Post a Comment