Wednesday, April 21, 2010

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? திடீர் மீ வகைகளைத் தவிர்த்துவிடுங்கள்


திடீர் மீ வகைகள் ஆரோக்கியத்திற்கு பெருத்த கேடுகளை விளைவிக்கின்ற காரணத்தால் அவற்றை பயனீட்டாளர்கள் வாங்கி உண்ண வேண்டாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றிற்கு திடீர் மீ வகைகள் காரணமாக இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வுகள் காட்டுகின்றன.

2004ல் நாம் 870 மில்லியன் பேக்கட் திடீர் மீக்களை உண்டு வந்திருக்கிறோம். 2008ல் இந்த எண்ணிக்கை 1210 மில்லியனாக உயர்ந்துள்ளது. 4 வருடங்களில் திடீர் மீக்கள் உண்ணும் அளவு 40 விழிக்காடு உயர்வு கண்டுள்ளது என்றார் இத்ரிஸ்.

திடீர் மீ தயாரிப்பில் அமிலம் பதப்பொருட்கள், சுவைகூட்டுப்பொருள், கெட்டிப்படுத்தும்பொருள், வர்ணங்கள், என்டிஆக்சிடன்ட், நுரைக்கும் பொருள், மாவு பதப்படுத்தும் பொருள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்படுத்தப்படும் சுமார் 136 விதமான சுவை கூட்டுப்பொருட்களில் 24 சோடிய உப்பு வகைகளாகும். இவற்றினால்தான் திடீர் மீக்களில் சோடிய உப்பு அதிகமாக இருக்கிறது. சோடிய உப்பு அதிகமாக உள்ள உணவுகள் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என்றார் இத்ரிஸ்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுமார் 10 மாதிரி திடீர் மீக்களில் மேற்கொண்ட சோதனையில் 3 மாதிரிகளில் சோடியத்தின் அளவு 1,000 மில்லிகிராமை விட அதிகமாக இருந்தது. 4 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2400 மில்லிகிராமுக்கு மேற்பட்ட சோடியத்தை உட்கொள்ளக்கூடாது. ஆனால் திடீர் மீக்களை உட்கொள்ளும் ஒருவருக்கு சோடியத்தின் அளவு நிச்சயம் அதிகமாகித்தான் போகும்.

திடீர் மீக்கள் வேறு விதமான ஆபத்துக்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. திடீர் மீ வகைகள் பிளாஸ்டிக் குவளைகளில் விற்பனை செய்யப்படுவதால் அவற்றில் உள்ள டையோக்சின் மீயில் கலந்துவிடும். இவற்றில் சுடச்சுட நீரைக் கலக்கும்பொழுது இந்த அபாயகரமான இரசாயனங்கள் சூப்பில் கலந்துவிடுகின்றன என்றார் இத்ரிஸ்.

திடீர் மீக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க அவற்றில் மெழுகு பூசுகிறார்கள். அதனால்தான் திடீர் மீக்களில் சுடுநீர் ஊற்றும்பொழுது அந்த மெழுகு கரைந்து நீரின் மேற்பாகத்தில் மிதக்கிறது.

திடீர் மீக்களில் ஈரப்பசையை தக்க வைப்பதற்கும் அளவுக்கு அதிகமாக உலர்ந்து போகாமல் இருப்பதற்கும் புரோபிலின் க்ளைக்கோளன் (propylene glycolan) என்ற இரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். இந்த இரசாயனத்தை நம் உடலில் விரைவில் ஈர்த்துக்கொண்டு இருதயம், ஈரல், சிறுநீரகத்தில் சேமித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.

திடீர் மீக்களில் பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜி.இயின் அளவு அதிகமாகும். இது திடீர் மீயின் சுவையைக் கூட்டிக்கொடுக்கிறது. உலக மக்களில் 2 விழுக்காட்டினர் எம்.எஸ்.ஜி.யினால் அளவுக்கு அதிகமான ஒவ்வாமைக்கு உள்ளாகிறார்கள். இவர்களுக்கு எரிச்சல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

சோடிய உப்பை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. மலேசியாவில் 13,000 சிறுநீரக நோயாளிகள் டைலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 2,500 பேர் மோசமான சிறுநீரகக் கோளாறினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். மலேசியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 6 பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது என்றார் இத்ரிஸ்.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயை 30 விழுக்காடு வர விடாமல் தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. திடீர் மீக்களை பயனீட்டாளர்கள் முற்றிலுமாக ஒதுக்க வேண்டும்.

திடீர் மீக்கள் மலேசிய மக்களிடையே மிகவும் பிரபலம். திடீர் மீக்கள் கொண்டு வரும் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு அவற்றின் ஆரோக்கியக் கேடுகளை, சுகாதார அமைச்சு பிரச்சாரங்களின் மூலமாக மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

No comments:

Post a Comment