Monday, April 19, 2010
வெற்றிகரமாக நடைபெற்ற பாரம்பரிய விவசாய பயிலரங்கு
உலகெங்கிலும் இயற்கை விவசாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்ற இத்தருணத்தில் மலேசியாவில் இயற்கை விவசாயத்திற்கு மெருகூட்டி வரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கில் உள்ள 40 இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இயற்கை விவசாயத்தின் அடிப்படை வழிமுறைகளை செயல்விளக்கத்தோடு செய்துகாட்டியது ஆசிரியர்களை பிரமிக்க வைத்தது.
பி.ப.சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் அவர் இந்த அரை நாள் பயிலரங்கை தொடக்கி வைத்து உரையாற்றினார். ஆசிரியர்கள் இயற்கை விவசாயத்தின் அடிப்படைத் தகவல்களை பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பள்ளி மாணவர்களிடையே இயற்கை விவசாயத்தின் நன்மைகளையும் அது எவ்வாறு மனிதனையும் இப்பூலவகையும் காப்பாற்றும் என்பதை ஆசிரியர்கள் தங்களுடைய பாடத்திட்டத்தில் எடுத்துக் கூறினால், இப்பொழுது உலகமெங்கும் பேசப்பட்டு வரும் புவி வெப்பம் மற்றும் மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கு ஓரளவாவது முடிவு கட்டலாம் என இத்ரிஸ் தெரிவித்தார்.
அவருடைய உரைக்குப் பின்பு பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் காய்கறிகள் மற்றும் செடிகளுக்குப் பயன்படக்கூடிய பயிர் ஊக்கிகள் பற்றி தெளிவாக எடுத்துக்கூறினார். விளக்க உரையோடு பயிர் ஊக்கிகள் செய்முறையும் காண்பிக்கப்பட்டதை ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
முதல் செயல்விளக்கமாக எலுமிச்சை முட்டை கரைசலை செய்து காண்பித்தார் சுப்பாராவ். சிறிய தோட்டங்கள் வைத்திருப்போரும் அல்லது பெரிய அளவில் விவசாய வர்த்தகத்தில் ஈடுபட நினைப்போரும் இந்த எலுமிச்சை முட்டை கரைசலைப் பயன்படுத்தினால் தங்களுடைய விவசாயம் எந்த அளவுக்கு மேன்மை அடையும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறினார்.
இயற்கை விவசாயத்தின் நமது முன்னோர்கள் கண்டுபிடித்த இயற்கை பயிர் பாதுகாப்பு முறைகளை ஆசிரியர்கள் மட்டுமல்லாது குடும்ப மாதர்களும் தனிப்பட்டவர்களும் பின்பற்றி இப்பூலவகை காப்பாற்ற முடியும் என அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வுக்குப் பிறகு பி.ப.ச. பணிமனையில் அமையப்பெற்றுள்ள மண்புழு மனையில் இருக்கின்ற புழுக்களின் வளர்ப்பு முறை பற்றியும் சுப்பாராவ் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். மண் புழுக்கான உணவு வழங்கும் முறைகளையும் விளக்கினார்.
அதற்குப் பிறகு பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரிகளான சரஸ்வதி மற்றும் சுசிலா 7 ஜாடி முறை மற்றும் எவ்வாறு குப்பைகளை மக்க வைப்பது, மண் புழு உரம் தயாரிப்பது, வளையத்தோட்டம் உருவாக்குவது ஆகியவற்றை கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு செய்துகாட்டினார்கள். இந்த இயற்கை விவசாயத்தை பின்பற்றிய விவசாயி சன்மார்க்கம் பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கி செய்து காட்டினார்.
இன்று விவசாயத்தில் பூச்சிகள்தாம் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகின்றன. அந்தப் பூச்சிகளைக் கொல்வதற்கு விவசாயிகள் மட்டுமல்ல பொது மக்களும் கொடிய நஞ்சுடைய இரசாயனங்களைப் பயன்படுத்தி பூச்சிகளை சாகடிப்பதாகக் கூறிக்கொண்டு பயிர்களுக்கும் விஷத்தைத் தெளித்துவிடுகின்றார்கள். இதனால் பலதரப்பட்ட அபாயங்கள் ஏற்படுகின்றன.
பூச்சிகள் இல்லையென்றால் விவசாயமே இல்லை என்று விளக்கிய சுப்பாராவ் இப்பூச்சிகளைக் கொல்லுவதற்குப் பதிலாக இயற்கை விவசாயத்தின் மூலமாக பூச்சிகளை விரட்டி அடிக்க வேண்டும் என்று கூறினார்.
அப்படிப் பூச்சிகளை விரட்டுவதற்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளையே பயன்படுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார். இந்தப் பூச்சிகளை விரட்டுவதற்கு 3 மாதிரியான பூச்சி விரட்டி முறை ஆசிரியர்களுக்குக் செய்து காண்பிக்கப்பட்டன.
பயனளிக்கும் வகையில் அமைந்திருந்த இந்தப் பயிலரங்கு இயற்கை விவசாயம் தொடர்பான தங்களுடைய அறிவைப் பெருக்கியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment