Friday, February 5, 2010

செம்ம ஹோட்டு! செம்ம ஹிட்டு!

செம்ம ஹோட்டு!
செம்ம ஹிட்டு!
இதன் அர்த்தம் என்ன
தமிழ் வானொலியில் இப்படிப்பட்ட அடைமொழியா
வெட்கக் கேடு என்கின்றார்
பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ்
_______________________________________________________________________


நமது நாட்டின் தனியார் தமிழ் வானொலி நிலையமான டி.எச்.ஆர். ராகாவின் புதிய அடைமொழி மாற்றப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏதோ ஆங்கில வானொலி நிலையத்திற்கு சூட்ட வேண்டிய அடை மொழியை தமிழ் வானொலி நிலையத்திற்கு மறந்து போய் சூட்டிவிட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

“செம்ம ஹோட்டு, செம்ம ஹிட்டு” என்ற அடைமொழியை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போது, வெறுப்பு ஆத்திரமும் சேர்ந்தே வருகிறது என்றார் அவர்.

ஒரு தமிழ் வானொலி நிலையத்திற்கு ஏன் இந்த ஆங்கிலம் கலந்த அடைமொழி என்று வினா எழுப்பினார். அதுவும் “ஹோட்டு, ஹிட்டு” என்பது பலதரப்பட்ட பொருளைத் தரக்கூடியதாகும்.
இளைஞர்கள் இதனை உச்சரிக்கத் தொடங்கினால் மோசமான அர்த்தத்தைத் தந்துவிடும் என்றும் சுப்பாராவ் எடுத்துரைத்தார்.

தமிழ் வளர்ச்சி பற்றியும், தாய்மொழியைப் பற்றியும் தமிழ் ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்து வரும் இவ்வேளையில் டி.எச்.ஆர். ராகா, இப்படி நிமிடத்திற்கு நிமிடம் செம்ம ஹோட்டு, செம்ம ஹிட்டு என்று தமிழை வளர்க்கும் பணிக்குப் புறம்பாக செயல்படுவது நல்லது அல்ல. டி.எச்.ஆர். ராகா சமுதாயப் பொறுப்புடனோடும் செயல்பட வேண்டும் என்று சுப்பாராவ் கூறினார்.

ஆகவே டி.எச்.ஆர்.ராகா உடனடியாக இந்த அடைமொழியை மாற்றியமைக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ் மொழி அமைப்புக்கள் இந்த அடைமொழிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

No comments:

Post a Comment