Friday, February 5, 2010

உணவுப் பொருட்களின் விலை 50%லிருந்து 140% உயர்வு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

உணவுப் பொருட்களின் விலை 50%லிருந்து 140% உயர்வு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
________________________________________________________________________

அண்மையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், பயனீட்டாளர்கள் வீட்டு சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் அதிக அளவு உயர்வு கண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

பூண்டு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, கருப்புச்சீனி மற்றும் சீரகம் போன்றவற்றின் விலைகள் 50 விழுக்காட்டிலிருந்து 140 விழாக்காடு வரை உயர்வு கண்டிருப்பதாக பி.ப.சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

உளுந்தின் விலை ஒரு கிலோவுக்கு மவெ. 4லிருந்து மவெ. 6.50க்கு உயர்வு கண்டுள்ளது. சீரகத்தின் விலை ஒரு கிலோவிற்கு மவெ. 4லிருந்து மவெ. 7க்கும், துவரம்பருப்பு கிலோ ஒன்றுக்கு மவெ. 4லிருந்து மவெ. 8க்கும் பாசிப்பயறு மவெ. 3.60லிருந்து மவெ. 6.00க்கும், நிலக்கடலை மவெ. 3.00லிருந்து மவெ. 5.00க்கும், கருப்புச்சீனி கிலோ ஒன்றுக்கு மவெ. 2.00லிருந்து மவெ. 3.00 உயர்த்தி விற்கப்படுகின்றது என்றார் இத்ரிஸ்.

வீட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தும் பூண்டின் விலை 140 விழுக்காடு வரை உயர்வு கண்டுள்ளது. கிலோ ஒன்றுக்கு மவெ. 2.50 என விற்கப்பட்ட பூண்டின் விலை மவெ. 6.00க்கு விற்கப்படுகின்றது என்றார் அவர்.

அடுத்த சில வாரங்களில் பால்டின், மைலோ மற்றும் தாளிப்பு பொருட்களின் விலைகள் 5லிருந்து 10 விழுக்காடு வரை உயரக்கூடும் என மொத்த விற்பனையாளர்களும் விநியோகிப்பாளர்களும் கூறியதாக கடைக்கார்கள் தங்களிடம் புகார் செய்திருப்பதாக இத்ரிஸ் கூறினார்.

உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டு அமைச்சின் அமலாக்கப் பிரிவு இந்த விலை உயர்வை கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அடித்தட்டு மட்டும் நடுத்தர வர்க்க மக்கள் இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால் அமைச்சு விரைவு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment