Friday, October 30, 2009

புகைப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் உண்மையிலே ஆக்கப்பூர்வமானதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்!


வருகின்ற 2010லிருந்து 20 சிகரெட்டுக்கள் கொண்ட ஒரு சிகரெட் பேக்கட்டின் ஆகக் குறைந்த விலை மவெ. 6.20 என்று நிர்ணயிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோ தியோங் லாய் அறிவித்துள்ளதை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

ஆனாலும் இந்த விலை அப்படி ஒன்றும் குறைவு என்றும் கூறிவிட முடியாது. உண்மையிலேயே புகைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றால், புகைப்பதால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த விலை நிர்ணயம் ஒன்றும் நினைத்த அளவுக்கு பயனைத் தராது என்று இத்ரிஸ் கூறினார்.

“தர மதிப்பு” கொண்ட சிகரெட்டின் விலை அதிகரித்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது. லங்காவியிலிருந்து வரி விலக்கு பெற்ற சில பிரண்டு சிகரெட்டுக்கள் பயனீட்டாளர்களுக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன. இன்னும் சில பிரண்டு வகைகள் வியட்னாம், வங்காளதேசம் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சிலவற்றில் புகைப்பதால் விளையும் கேடுகள் தொடர்பான எச்சரிக்கை படங்களும் இல்லை என்றார் இத்ரஸ்.

முதன்மை பிரண்டு சிகரெட்டுக்களின் இப்போதைய வாங்கும் விலை மவெ. 9லிருந்து மவெ. 30 வரைக்கும் ஆகும். “தர மதிப்பு” கொண்ட சிகரெட்டுக்கள் (20 சிகரெட்டுக்கள்) மவெ.2.20லிருந்து மவெ. 2.50 வரைக்கும் விற்கப்படுகின்றன. இவை 73மூ விலை குறைவாகும்.

முதன்மை பிரண்டு சிகரெட்டுக்கள் இங்கிலாந்தில் மவெ.36 - மவெ.60இ அயர்லாந்து மவெ. 37 - மவெ. 98இ சிங்கப்பூர் மவெ. 27 - மவெ. 80இ நியூசிலாந்து மவெ. 27 - மவெ. 20, ஜப்பான் மவெ. 10 - மவெ. 60இ ஸ்ரீலங்கா மவெ. 10 - மவெ. 90 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன.

மலேசியாவில் புகைக்கும் பழக்கம் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மலேசிய ஆண்கள் புகைக்கிறார்கள். 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 50 மலேசிய பதின்மர்கள் ஒவ்வொரு நாளும் புகைக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 10,000 பேர் புகைப்பது சம்பந்தப்பட்ட நோய்களால் இறக்கிறார்கள். மலேசிய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் தோராயமாக மவெ. 4.8 பில்லியனை புகையிலை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க செலவழிக்கிறது.

பிரிவு 16(1)ன் படி “20 சிகரெட்டுக்கும் குறையாத எண்ணிக்கையில் உற்பத்தியாளர் சிகரெட்டுக்களை பேக் செய்ய வேண்டும்” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட்டுக்கள் இன்னும் விற்பனையில் உள்ளன. 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட் விற்பனைக்கான தடை 2010 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது. 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட்டுக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.

சிகரெட்டின் உதிரி விற்பனையையும் மலேசிய அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் பி.ப.சங்கம் பினாங்கில் 15 கடைகளில் மேற்கொண்ட சோதனையில் 8 கடைகளில் இன்னும் சிகரெட் உதிரியாகத்தான் விற்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிகரெட்டும் 60 காசுக்கு விற்கப்படுகிறது. இப்படி விற்கும்பொழுது 20 சிகரெட்டுக்கள் கொண்ட ஒவ்வொரு பேக்கட்டையும் விற்று முடிக்கும்பொழுது விற்பனையாளருக்கு மவெ. 3.80 இலாபம் கிடைக்கிறது. இவ்வாறு உதிரி சிகரெட் விற்கும் சில கடைகள் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலேயே இருப்பதால் மாணவர்கள் வாங்கிப் புகைக்கவும் வழி வகுத்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

சிகரெட் விற்பனை செய்யும் ஒவ்வொரு கடையும் அதனுடைய லைசென்ஸை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்குமாறு விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். சிகரெட் விற்பனைக்கான விதிமுறைகளை மீறும் பட்சத்தில் இந்த லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்.

சிகரெட்டுக்கான வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். இதனால் இயற்கையாகவே சிகரெட் விலை ஏற்றம் காணும். இந்த விலை ஏற்றம் சிறார்கள் புகைக்க ஆரம்பிப்பதற்கு ஓரளவு தடையாக இருக்கும் என்றார் இத்ரிஸ்.

சிகரெட் வாங்குவதற்கான குறைந்த பட்ச வயதான 18 வயதை 21 வயதாக அரசாங்கம் உயர்த்த வேண்டும். ஓட்டு போடுவதற்கும் 21 வயதுதாயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஓர் இளைஞர் எவ்வளவு காலத்திற்கு புகைக்கும் பழக்கத்தை தொடங்காமல் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் புகைக்காமலே இருப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன.

விமான நிலையங்களில் வரி இல்லா சிகரெட் விற்பனைக்குத் தடை செய்யப்பட வேண்டும். லங்காவித் தீவில் சிகரெட் விற்பனைக்கு அறவே வரி இல்லை. இது முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட வேண்டும். பொருட்கள் வாங்கிவிட்டு காசு செலுத்தும் கவுண்டரில் பயனீட்டாளர்களைத் தூண்டும் வகையில் சிகரெட்டுக்களை அடுக்கி வைப்பதும் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

புகையிலையை முற்றிலும் துடைத்தொழித்து வருகின்ற இளம் சமுதாயத்தினர் ஆரோக்கியமாக வழி வகுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment