Monday, June 15, 2009

சிகரெட் பேக்கட்டுகளை அடைத்து வைக்கக்கூடிய புது வகையான பெட்டிகளுக்குத் தடை விதியுங்கள்! சுகாதார அமைச்சுக்கு சுப்பாராவ் வேண்டுகோள்!

ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து சிகரெட் பேக்கட்டுக்களின் முகப்பில்இ சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் நோய்களை விவரிக்கும் ஆறு விதமான படங்கள் பிரசுரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் இந்த சிகரெட் பேக்கட்டுக்களில் உள்ள அபாய அறிவிப்புக்கள் புகைப்பவருக்குப் போய்ச்சேராமல் இருக்க சில தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கும் புதிய பெட்டிகளுக்கு உடனடித் தடையை ஏற்படுத்தும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.



சிகரெட் பேக்கட்டில் உள்ள அபாய அறிவிப்புப் படங்களை புகைப்பவர்கள் பார்க்காமல் இருக்கும் பொருட்டு உற்பத்தி செய்யப்படும் இந்த பெட்டிகள் மவெ. 3.50லிருந்து மவெ. 13 வரை சந்தையில் விற்கப்படுவதாக பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் அம்பலப்படுத்தினார்.

இந்தப் பெட்டிகள் பெரும்பாலும் பெட்ரோல் நிரப்பும் எண்ணெய் நிலையங்களில் விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இப்பொழுது நமது நாட்டில் விற்கப்படும் எல்லா சிகரெட் பேக்கட்களிலும் 6 விதமான நோய்களைக் குறிக்கும் படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. சிகரெட் புகைப்பவர்களுக்கு ஏற்படும் மோசமான ஆரோக்கியக் கோளாறுகளைப் படம் பிடித்துக் காண்பிக்கும் இந்த எச்சரிக்கைப் படங்கள் புகைப்பவர்கள் சிகரெட் வாங்காமல் இருக்கவும் அல்லது புகைப்பதை குறைக்கவும் வழி கோளும் நோக்கில் தயாரிக்கப்பட்டவை. இந்த நோக்கம் நிறைவேறினால் சிகரெட் நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

இந்த எச்சரிக்கைப் படங்களின் வழியாக புகைப்பவர்கள் எண்ணிக்கை குறையக்கூடும் என்பதற்காக சில நிறுவனங்கள் சுகாதார அமைச்சின் இந்த நோக்கத்தை முறியடிக்கும் பொருட்டு புதிய மாதிரியான சிகரெட் பெட்டிகளை தயாரித்து விற்கத் தொடங்கியிருக்கின்றனர். புகைப்பவர் தான் வாங்கும் சிகரெட்டை இந்தப் புதிய பெட்டியினுள் வைத்துவிட்டால் அதில் உள்ள எச்சரிக்கைப் படம் கண்ணுக்குத் தெரியாது. பிறகு சிகரெட் பற்ற வைப்பதற்காகப் பெட்டியைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றார் சுப்பாராவ்.

இந்த யுக்தி அரசாங்கத்தின் புகைப்பதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு எதிராக அமைகின்றது. ஏற்கெனவே நமது நாட்டில் 30 இலட்சம் பேர் புகை பிடித்து வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் புகை பிடிப்பதற்காக செய்யும் செலவு மவெ. 150 இலட்சம்.

புகைக்கும் பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் சிகரெட் நிறுவனங்கள் அதற்கு எதிராக மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருத்தத்தைத் தருகின்றது என்று சுப்பாராவ் கூறினார்.


சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கின்ற இந்த புதிய எச்சரிக்கை படங்கள் திட்டத்தினால் புகை பிடிப்பவர்களில் பலர் தங்களின் புகைக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கும் குறைத்து வருவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கும் இந்த வேளையில் சிகரெட் நிறுவனங்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு அதற்கு எதிர்மாறாக இருப்பதால்இ சுகாதார அமைச்சு விரைவு நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும் என்று என்.வி.சுப்பாராவ் கூறினார்.

No comments:

Post a Comment