Friday, September 23, 2011

மரம் எழுதும் மடல்!


"ஏதோ ஒரு நதிக்கரையி்ல், எப்போதோ ஓர் ஏகாந்த நாளில், உயிர்ப்பு நிறைந்த ஒரு விநாடியில் விதையாய் நான் விழுந்தேன்.

முளைத்தேன்; வளர்ந்தேன்; செடியானேன்: மலர்கள் தவழும் மடியானேன். எனது வேர்கள் நிலத்தை உழுதன. கிளைகள் வானத்தில் எழுந்தன.

என்னில் தவழ்ந்து, என்னை உறிஞ்சி, என்னால் வளர்ந்து, என்றும் என்னைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி மனிதன் இன்று என்னை வெட்டுவதற்கு வந்தான். அவனது உடலின் உரமும், மனத்தின் வெறியும் இதோ - என்னைத் துண்டாடிக் கொண்டிருக்கின்றன. மனித ஊனங்களுக்கெல்லாம் கைகொடுத்து உதவிய நான், இப்போது ஊனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
தவணை முறையில் எனது உயிர் சிறிது சிறிதாகப் போய் கொண்டிருக்கிறது.

இந்த வேளையில், "எனது இரத்தத்தைப் பாருங்கள். இன்னுமா உங்களுக்கு இரக்கம் வரவில்லை?" என்று நான் இறைஞ்சமாட்டேன். எனக்குத் தெரியும் எனது இரத்தத்தில் இரப்பர் செய்ய ஏதேனும் வழியிருக்கிறதா என்று பார்ப்பவர்கள் நீங்கள். உங்களுக்குத் தெரியுமா? எனது மரணப் போராட்டத்தில் வெளிவரும் இறுதி மூச்சுகள்கூட உங்கள் சுவாசத்துக்காகத்தான்!

- உங்களில் ஒருவரால் வெட்டப்படும்.....ஒரு மரம்.

இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இல்லையா? இவர்களது பெற்றோர்கள் என்ன செய்கின்றார்கள்?

இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இருக்காதா என்பது ஒரு மிகப் பெரிய வினாவாக இருக்கின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகின்றது.

படுகொலை, கொலை, பாராங்கத்தியை காட்டி மிரட்டுவது, கொள்ளை என பலதரப்பட்ட இரத்த வெறி சம்பவங்கள் நமது இளைஞர்களுக்கு பாலும் பழமும் சாப்பிடுவது போல ஆகிவிட்டது என பி.ப.சங்க அல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

ஒவ்வொரு பொழுதும் விடியும்போது கொலை கொள்ளை சம்பவங்களையும், மிரட்டிச் செல்கின்ற அச்சுறுத்தல்களையும் படிக்கும்போது அன்றைய தினம் ஒரு பயமான தினமாகவே இருக்கின்றது.

இந்திய இளைஞர்களின் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிடில், இன்னும் பலதரப்பட்ட கோரச் சம்பவங்கள் நிகழக்கூடும்.


இதற்கு அண்மைய காலமாக நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களே ஒரு உதாரணம் என்று சுப்பாராவ் கூறினார்.

கொலை, படுகொலை, கொள்ளை, பயமுறுத்துதல் என பலதரப்பட்ட சம்பவங்களில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்கள் ஏன் இவர்களைக் கண்டிப்பது கிடையாது என்பதுதான் புரியாத புதிராக இருப்பதாக சுப்பாராவ் கூறினார்.

இளம் வயதிலேயே கொடூரமான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இவர்களின் எதிர்காலம் சீரழிந்து போவதற்கு இவர்களது பெற்றோர்களே மூல காரணமாக திகழ்கின்றனர் என அவர் கூறினார்.

கொலை, படுகொலை, கொள்ளையடிப்பது என்பது இவர்களுக்கு சர்வசாதாரணமான செயலாகிவிட்டது. யாருக்கும் இவர்கள் பயப்படுவதும் கிடையாது. யாருடைய அறிவுரையையும் இவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இல்லை.

ஆகவே இவர்களை நல்வழிக்கு கொண்டு வருவதற்கு மிகப் பொருத்தமானவர்கள் இவர்களது பெற்றோர்கள்தான் என சுப்பாராவ் கூறினார்.

இவர்களது உற்றார் உறவினர்களும் இவர்கள் நல்ல திசையை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

“எனக்கென்ன! என் பிரச்னை இல்லை” என அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என என்.வி.சுப்பாராவ் கூறினார்.

தேவைக்கு மேற்பட்ட மருந்துகளை நோயாளிக்கு அள்ளிக்கொடுப்பதை நிறுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

உபயோகப்படுத்தாத அல்லது காலாவதியான மருந்துகளை அரசாங்க மருத்துவ மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் கொண்டு போய் கொடுத்துவிடுமாறு அமைச்சு கூறியுள்ளது சரியான அணுகுமுறை கிடையாது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

காலாவதியான மருந்துகளை ஒரு முறையில்லாமல் தூக்கி எறிவதைத் தவிர்க்கவும், மருந்துப் புட்டிகளின் மூடி கூட திறக்கப்படாமல் இருக்கின்ற மருந்துகளை, நல்ல நிலையில் உள்ள மருந்துகளை மறுபயனீடு செய்யவும் இந்த அணுகுமுறையை சென்ற வருடத்தில் அமைச்சு பரிந்துரை செய்தது.


முதல் அரை வருடத்தில் கோலாலம்பூர் மருந்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 128,818 பெருமானமுள்ளவை. சென்ற வருடத்தில் மட்டும் செபிராங் ஜாயா மருத்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 27,899 பெருமானமுள்ளவை. இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரோல் குறைப்பு மருந்துகளே பெரும்பாலும் திருப்பி கொடுக்கப்பட்ட மருந்துகளாகும் என்றார் இத்ரிஸ்.

நோயாளிகளுக்குத் தேவையில்லாத மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட நோய்க்கு தேவைப்பட்டதைவிட அதிகமான மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மலேசியாவில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இப்படிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது என்றார் இத்ரிஸ்.

ஒவ்வொரு முறையும் தேவைக்கு மேற்பட்ட மருந்துகளைக் கொடுத்து நோயாளியின் மருத்துவக் கட்டணத்தை ஏகத்துக்கு உயர்த்துவதும் வழக்கமாகிவிட்டது என்று பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. மருத்துவக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நோயாளி பணி புரியும் கம்பெனி செலுத்தும் பட்சத்தில் இப்படி அதிகமாக விதிக்கப்படும் மருத்துவக் கட்டணம் நோயாளிக்கு பிரச்னையாக இருப்பதில்லை. மருந்துகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, தேவையானதை பயன்படுத்திவிட்டு மிச்சத்தை குப்பையில் போடுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

இல்லாத நோய்க்கான மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. இருமல் இல்லாமலேயே இருமல் மருந்தும், காய்ச்சல் இல்லாமலேயே பாரசெட்டமோலும், தேவையில்லாத லோஷன் மற்றும் கிரீம்களையும் கொடுத்துவிடுகிறார்கள்.

இதற்கு நோயாளியின் அறியாமை, நோயை விரைவில் குணப்படுத்தும் மருந்து வேண்டும் என்று வலியுறுத்துவது, அல்லது கம்பெனிதான் கட்டணம் செலுத்துகிறது என்ற காரணத்திற்காக அதிக மருந்துகளை பெற்றுக்கொள்வது என்று நோயாளியே இந்நிலைக்குப் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறார்.

ஆனால் இதற்கு உண்மையான காரணம் நோயாளி கிடையாது. மருந்துகளை விநியோகிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கும் உள்ள வியாபாரத் தொடர்பே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.

சென்ற வருடத்தில் மட்டும் சுகாதார அமைச்சு மவெ. 1.6 பில்லியனை நாட்டில் உள்ள 135 மருத்துவமனைகளின் மருந்துத் தேவைக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 15% அதிகமாகும்.

ஒவ்வொரு முறையும் பினாங்கு பொது மருத்துவமனைக்குச் செல்லும்பொழுது புதிய மருந்துகளை கொடுப்பதாகவும் அவருக்குப் பை நிறைய மருந்துகள் குவிந்து கிடப்பதாகவும் ஒருவர் புகார் அளித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையின் மீது ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இருமல் மற்றும் தொண்டை வலிக்கு மருந்து வாங்கச் சென்றபொழுது அளவுக்கு அதிகமான பாரசெட்டமோல், மிகவும் வீரியமான இருமல் மருந்து மற்றும் என்டிபையோட்டிக்கை கொடுத்து அவருடைய மருத்துவக் கட்டணத்தை அளவுக்கு அதிகமான உயர்த்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நோயாளியின் தேவைக்கு அதிகமான மருந்துகளைக் கொடுப்பதைப் பெரும்பாலான மருத்துவமனைகள் செய்து வருகின்றன. இவ்வாறு செய்து நோயாளிகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று இத்ரிஸ் கூறினார்.

இதற்கு முதலில் நோயாளியின் நோய் முழுமையாக சரியாகக் கண்டறியப்பட வேண்டும். சில சமயங்களில் மருந்தைவிட நோயாளிக்கு ஓய்வு, உடற்பயிற்சி, போதிய தூக்கம், உணவுப் பழக்கத்தில் சில மாறுதல்கள் போன்றவையே நோயைக் குணப்படுத்த போதுமானவையாக இருக்கும்.

மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் மருத்துமவனைகள் இலாபம் பார்க்கும் பொருட்டு நிறைய மருந்துகளையும் புதிய புதிய மருந்துகளையும் வாங்கி பின்பு அவற்றைத் தேவைக்கு மேற்பட்டு நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து இலாபம் சம்பாதிக்க முயல்கின்றன. இப்படி மருந்துக் கம்பெனிகளின் அளவுக்கு மீறிய மூக்கை நுழைக்கும் போக்குக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

எந்தெந்த மருந்துகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவை என்பதை அரசாங்கம் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படாத மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும்பொழுது அவர்கள் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். சில சமயங்களில் இறப்பு கூட நிகழலாம்.

ஆகையால் நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் பொருட்டு அளவுக்கு அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

Wednesday, September 21, 2011

பிபியின் நாச வேலை

கடந்த ஆண்டு (2010) ஏப்ரல் மாதம் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடாவில் பிபி எரிசக்தி நிறுவனத்தின் ஆழ்கடல் துளை இயந்திரம், எண்ணெய் கிணறு ஏதாவது கிடைக்கிறதா என்பதற்காகத் துளையிடும்பொழுது, கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்த கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தால் கடலெல்லாம் பிசுபிசுவென்று கச்சா எண்ணெய்.


நாளொன்றுக்கு 10 லட்சம் கேலன்கள் கச்சா எண்ணெய் அந்தக் கிணற்றிலிருந்து கடலில் கலந்துகொண்டிருக்கிறது. கடல் மட்டத்திற்கு 1500 மீட்டர் கீழே வெடித்துச் சிதறியிருக்கும் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து கலந்து கொண்டிருக்கின்றது. கச்சா எண்ணெய் கடல் மீது படர்ந்து, கரை நோக்கி நகர்ந்து, ஒரு கச்சா எண்ணெய்க் கம்பளமே விரிந்துவிட்டிருக்கிறது.


இவ்வளவு சம்பவத்திற்கும் காரணமாக இருக்கும் உலகத்தின் 4வது பெரிய நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் (BP) கொடூர நடவடிக்கைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்பது பிபி நிறுவனத்திற்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. எண்ணெய் தோண்டுவதற்கு மட்டுமே தன்னுடைய பணத்தைச் செலவு செய்யும் பிபி, எண்ணெய் கசிவைத் தடுப்பதற்கோ, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கோ பணத்தை இது வரைக்கும் செலவு செய்ததில்லை. ஒவ்வொரு நாளும் கடல் நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும்.

எண்ணெய்க் கசிவை நிறுத்துவதற்கு வழி கோளாமல், தன்னுடைய நல்ல பெயரை தற்காத்துக்
கொள்வதற்காக மட்டும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களில் செத்துக்கிடக்கும் உயிரினங்களைப் படம் பிடிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களை அமெரிக்க தேசிய காவலர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள்.

கச்சா எண்ணெய் கடலில் கலந்து வரும் வேகம் உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியது. இந்தக் கழிவு ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் அபாயமிருக்கிறது. எண்ணெய் நீருடன் கலக்கும்பொழுது அது வேதிய மாற்றத்திற்கு உட்பட்டு பிசுபிசுப்பான நிலையை அடைந்துவிடுகிறது. கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் மீன் வளங்களும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றன.



எண்ணெய் கசிவு தொடங்கி 40 நாட்களில், வனவிலங்குத் துறை அதிகாரிகள் அமெரிக்க வளைகுடா கடற்பகுதிகளிலிருந்து பறவைகள், ஆமைகள் மற்றும் பல்வேறு பாலூட்டிகளின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளனர். பிபி அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் கம்பெனியாகும். இரு சாராரும் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்து இருப்பதால் பிபிக்கு எதிர்காலம் பிரகாசமானதாகவே இருக்கிறது, பிபி மிகப்பெரிய சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டுக்கு வித்திட்டு இருந்தாலும் கூட அமெரிக்க அரசாங்கம் பிபி நிறுவனத்தை தற்காத்தே தீரும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கச்சா எண்ணெய் உற்பத்தித் துறையே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒன்றாகும். தற்போது நிகழ்ந்து வரும் மிகவும் மோசமான சீதோஷ்ண நிலை மாறுதல்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களும் முக்கிய காரணமாகும்.

எத்தனை உறிஞ்சினாலும் தீராத நம் எண்ணெய் தாகம்தான் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படை. இயற்கையை நாங்கள் நன்றாக அறிந்துகொண்டுவிட்டோம் என்ற ஆணவம். இனி அதை இஷ்டத்திற்கு உபயோகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற பேராசை. ஆனால் இயற்கையோ நம்முடைய அறிவைப் புரட்டிப்போட்டு சிரித்துக்
கொண்டிருக்கிறது.

Tuesday, August 16, 2011

உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்

மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம் நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய 10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன. உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.


இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட
பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்
பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை
ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.

வாழ்க்கை மன்னிக்க மறுத்துவிடும்

அவ்வப்போது தொலைக்காட்சி மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் நான் நுழைந்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் தொலைக்காட்சி நுழைந்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன்.
இல்லை. சிறு வயதிலிருந்தே வாழ்க்கை என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

அதனால், தொலைக்காட்சி நம் தேசத்தில் அறிமுகமான ஆரம்ப வருடங்களில்கூட என்னைப் பெரிதாக வசீகரித்ததில்லை. வாழ்க்கையில் எதுவும் உருப்படியாக நடக்காதவர்கள்தாம்
தொலைக்காட்சியே கதி என்று கிடப்பார்கள். அதில் காணும் வேறு யார் மூலமோ தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள முற்படுவார்கள். பசுமையான மலையையோ, அழகான நீரோடையையோ பார்த்து ரசித்துவிட்டு வந்தபிறகும், அந்த அதிர்வுகள் வெகு நேரம் உங்கள்
மனதில் தங்கியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?


தொலைகாட்சியின் அதிர்வுகளும் அப்படித்தான் உள்ளே இறங்கும். பார்த்த ஒவ்வொரு பிம்பத்தையும், ஒலியையும் மனம் அசைபோடும்.குடிக்காரர்கள்,கொலைகாரர்கள், போதை மருந்துக்கு அடிமையானவர்கள், மற்றவர் வாழ்க்கையைக் கெடுக்க சூழ்ச்சி செய்பவர்கள், இன்னும் யார் யார் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்க ஆசைப்படுவீர்களோ , யார் யாருடன் எந்த வித சகவாசமும் வைத்துக்கொள்ளவே கூடாது என்று தீர்மானமாக நினைக்கிறீர்களோ, அவர்களைத் தொலைக்காட்சி மூலம் உங்கள் வீட்டுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கிறீர்கள்.

அவர்களால், உங்கள் வீட்டுக் குழந்தைகளின் புத்திசாலித்தனம் பெரிதளவு சிதைக்கப்படுகிறது. அவர்களின் மூளை வளர்ச்சி பெரும் அளவு தடை செய்யப்படுகிறது. தொலைக்காட்சி என்ற கண்டுபிடிப்பு அபாரமானது. ஆனால், அளவுக்கு அதிகமாக அதற்கு இடம் கொடுத்ததால், அது புத்தகங்கள் படிக்கும் வழக்கம், விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் இவற்றைக் குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டது. கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை ஒரு நிலையாக உட்காரச் சொன்னால், வெகு இயல்பாக செய்கிறார்கள்.


சத்குரு ஜக்கி வாசுதேவ்

அதே நேரம், நகரத்து மாணவர்கள் உடைந்த பம்பரங்கள் போல் ஒரு புறமாகச் சாய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய உடல்நலம், விளையாட்டை மறந்து, அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து, யாரோ மலையேறுவதைப் பார்த்து, நீங்களே மலையேறிவிட்ட திருப்தி கொள்கிறீர்கள். யாரோ நடக்கிறார்கள். யாரோ μடுகிறார்கள்.

யாரோ நீந்துகிறார்கள். யாரோ காதலிக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையையே அந்த நபரின் மூலம் வாழப் பார்க்கிறீர்கள். வாழ்க்கையின் நேரடி அனுபவங்களைச் சந்திக்காமல், யாருடைய பிம்பம் மூலமாகவோ பொய்யாக வாழ்வது புத்திசாலித்தனமா? நாளைக்குத் தொலைக் காட்சித் திரையைப் பொருத்திவிட்டால், கல்லறையில் கூட உட்கார்ந்திருக்க நீங்கள் தயார். அப்படித்தானே? மக்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி, அவர்களை மேம்படுத்தி சமூகக் கட்டுக்கோப்பையே மாற்றி அமைக்கக்கூடிய மிகச் சக்தி வாய்ந்த μர் ஊடகம், பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே தயாரித்து வழங்கிக்கொண்டு இருப்பது எவ்வளவு அபத்தமான விஷயம். பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் பற்றித்தான் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்கள் ரசனையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

நிஜ வெள்ளத்தை மறந்து தொலைக்காட்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் பொழுது போக்கு அம்சங்களே இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதை அமைதிப்படுத்தி, புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலான தொடர்களின் உள்ளடக்கமும், தரமும் பார்ப்பவரின் புத்திசாலித்தனத்தின் மீது தொடுக்கப்படும் போராகவே இருக்கிறது. தொழில்நுட்பங்களில் மற்ற எந்தத் தலைமுறையை விடவும் நாம் முன்னணியில் இருக்கக்கூடும். ஆனால், உடல்ரீதியாக, மனரீதியாக மக்கள் தொகையில் பெரும் பகுதி மிகப் பலவீனமாகவே விளங்குகிறது.

உருப்படியாகச் செய்வதற்கு எவ்வளவோ இருக்க, பகல் நேரங்களில்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு ஜனத் தொகையில் ஒரு பெரும்பகுதி உட்கார்ந்திருந்தால், அந்த நாடு அழுகிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். தொலைக்காட்சியோ, கைபேசியோ புதிதாக எது கிடைத்தாலும், சரியான பக்குவம் இன்றி, தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றோம். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், வாழ்க்கையையே அவற்றின் மீது எழுப்ப முயற்சிக்கின்றோம்.

தவறான திசையில் வெகு தொலைவுக்குப் போய்விட்டால், விருப்பப்பட்டால்கூட நம்மால் சரி செய்ய முடியாத அளவுக்கு எல்லாம் சிடுக்காகி இருக்கும். வாழ்க்கை எல்லா சமயங்களிலும் நம்மைப் பொறுத்துக்கொள்ளாது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

நன்றி : ஆனந்த விகடன்

Sunday, August 14, 2011

பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும்

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்.

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காகப் பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள்.

பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும் பொழுது 40 சென்னாகவும் அதே
நீரை விடுதிகளில் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது. பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீர் என்றும், வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்பதும் பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது.கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம், பொட்டேஸியம், துத்தநாகம் போன்றவை பாட்டில் நீரில் மிக மிக சொற்ப அளவில்தான் இருக்கின்றன. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். பாட்டில் பானத்தை வாங்கும்பொழுது அந்த நீருக்காக நீங்கள் கொடுக்கும் தொகை மொத்த
விலையில் 10% மட்டுமே. எஞ்சிய 90% பிளாஸ்டிக் பாட்டிலுக்காக நீங்கள் கொடுக்கும் தொகையாகும். ப ¡ ட் டி ல் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய், பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு
பாட்டில்களைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன.



இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும் 500 வருடங்களாவது பிடிக்கும். பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1, PET, PETE ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் நீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் இந்த நீர் பாட்டில்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30OC சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் நீர் பாட்டில்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரிலும் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும். PET ரக பாட்டிலில் உள்ள நச்சு இரசாயனங்களும் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பாட்டில்நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத் தன்மை உடையதாக ஆகிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும். பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை.

மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல.

அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில துளி எலுமிச்சையைக் கலந்து அருந்தினாலே புத்துணர்ச்சி கிட்டும்.