Thursday, August 11, 2011

பூர்வீகக் குடிகளின் மருத்துவ மகிமைகள்

பூர்வீகக் குடிகளின் நில உரிமையைத் தற்காக்கும் பொறுப்பிலிருந்து நாம் நழுவும் பட்சத்தில், அவர்களிடையே பொதிந்திருக்கும் மருத்துவ மூலிகைகள் தொடர்பான தகவல் பொக்கிஷங்கள் நம்மை விட்டு மறைந்துபோகும். எந்த ஒரு இனமாக இருக்கட்டும். பாரம்பரியமாக அவர்கள் உடல் நலத்தைப் பேண நம்பி இருந்தது மூலிகைகளைத்தான்.

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் 80% தங்களுடைய ஆரோக்கிய மேம்பாட்டுக்கு தாவரங்களையும் மூலிகைகளையும் நம்பியுள்ளனர். உலகத்தில் உள்ள சுமார் 150 மில்லியன் பூர்வீகக் குடிகளுக்கு இயற்கைதான் மருந்துக்கடை. மூலிகை தொடர்பான அவர்களுடைய அறிவும் அபாரமானவை. இயற்கையோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்ததால் அனுபவ அறிவால் வழிவழியாக வந்த அருமைச் சொத்து அவர்களுடையது.


உதாரணத்திற்கு அமேசோனைச் சேர்ந்த யனோமாமி என்ற பூர்வீகக் குடிகள் woody cat's claw vine என்ற மூலிகையை பேதியைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பைனி மரத்தின் copal tree) பட்டையை கண் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இக்குவாடோர் மற்றும் பெருவைச் சேர்ந்த சுவார் பூர்வீகக் குடிகள் வயிற்றுப் பிரச்சனைகளுக்காக நூற்றுக்கும் குறையாத மூலிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மட்சிகென்கா என்ற இன்னொரு பூர்வீகக் குடியினர் தங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தண்ணீர் குடத்தில் மூலிகைகளைப் போட்டு
வைக்கிறார்கள்.

பூமியின் ஆசனத்திலிருந்து வெளிப்படும் துர்வாடையும் நீராவியுமே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். பூர்விகக் குடியினர்களிடையே ஷாமன் (shamans) என்னும் ஒருவரே மருத்துவராக செயல்படுவார்.

உலக உயிர்களுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் இடையே தூதுவராக செயல்படுவார். மூலிகைகளின் குணப்படுத்தும் தன்மைகளை தன்வசமாக்கி வைத்தியத்திற்கு உபயோகிப்பர். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளோடு சிகிச்சை பெற வந்திருப்பவர்களுக்கு நோயின் மூலத்தைக் கண்டுபிடித்து அதற்கான ஆலோசனைகளையும் கேட்டறிந்து வைத்தியம்
செய்வர். மூலிகைகளின் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் நோயைக் கண்டுபிடிப்பர். "ஒய் கனாஹி" மரத்தின் துகள்களை நுகரும்பொழுது, சாபிரிப் என்ற வன தேவதைகள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். படிப்படியாக அவை தங்களை உங்களுக்கு வெளிக்காட்டும்" என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த டாவி கோப்பேனாவா என்ற ஷாமன்.

சில மூலிகைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவை கிராமத்தில் உள்ள எலிகளையும் பேய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தவை. மழை வருவதையும், வேட்டைக்குச் செல்பவர்கள் வெற்றியோடு திரும்புவதையும் அவை உறுதிப்படுத்துகின்றன என்று
லண்டனில் உள்ள மூலிகை ஆராய்ச்சியாளர் வில்லியன் மில்லிகேன் கூறுகிறார்.

சில ஷாமன்கள் மூலிகைகளின் பெயரை வேகமாகக் கூறுவதில்லை. காதில் மட்டும் கிசுகிசுக்கிறார்கள். அவை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளாம். வழிவழியாகக் கொண்டு வரப்படும் ஷாமன் பாரம்பரியங்கள் இவை.

பூர்வீகக் குடியினர்களின் மொழியும் இயற்கை வளம், பூகோளம், மருந்து, சீதோஷ்ண நிலை போன்றவை சார்ந்தே இருக்கின்றன. பொலிவியாவில் உள்ள கல்லவாயா என்ற மேட்டுநில விவசாயிகளின் மூலிகை அறிவு அபாரமானது. மூலிகை மற்றும் மருத்துவ குணங்கள் தொடர்பான இரகசிய மச்சாச் ஜூயாய் என்ற மொழி வைத்துள்ளனர். இது இன்கா அரசர்களின் மொழி என்று சிலர் நம்புகின்றனர். உலகில் 7,000 மொழிகளுக்கும் மேலாக இருந்தன.

இவற்றில் 4,000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. "ஒவ்வொரு மொழியும் கலாச்சாரமும் ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை வளர்ச்சியை பெருமைகளை கோடிட்டுக் காட்டுபவை ஆகும். ஆகையால் ஒரு மொழி அழியும்பொழுது, வாழ்க்கை முறை, பிரச்னைகளுக்கான தீர்வுகள் எல்லோமே சேர்த்து அழிகின்றன என்கிறார் மொழி ஆய்வாளர் டேனியல் எவரட்.

பூர்வீகக் குடிகளின் புண்ணியத்தால் நமக்கு நிறைய மூலிகைகளின் மருத்துவ குணங்கள் தெரிய வந்த பயன்பாட்டில் உள்ளன. தெற்கு அமெரிக்க இந்தியர்களால் நஞ்சாக பயன்படுத்தப்பட்ட சில மூலிகை வகைகள் இப்பொழுது மேலை நாட்டு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, குராரே (curare) என்ற மூலிகைச் செடி. இந்த மூலிகைகளை அம்புகளின் நுணியில் பொருத்தி மிருகங்களின் மீது பாய்ச்சி அவற்றைச் செயலிழக்கச் செய்வர்.

அதே மூலிகையை, நவீன மருத்துவத்தில் தசைகளை இலகுவாக்கும் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் திறந்த இருதய அறுவைச் சிகிச்சை சாத்தியமாகிறது. பூர்வீகக் குடியினரின் மருத்துவ அணுகுமுறையும் வியக்க வைக்கிறது. நோயற்ற வாழ்க்கை மட்டும் ஆரோக்கியம் என்று அவர்கள் நினைத்துவிடவில்லை.

மனோ நலத்தையும் ஆன்மீக நலத்தையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நலத்தைக் கணிக்கிறார்கள். மனிதன் ஒரு தனித்தீவு கிடையாது.

ஆரோக்கியமான மனித உறவுகள் மற்றும் இயற்கையோடு சுமூகமான தொடர்பும் முக்கியம். நவீன மருத்துவம் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. ஒவ்வொருவரையும் ஒரு தனி அமைப்பாகவே அது பார்க்கிறது. இப்பொழுது இந்த உண்மையை நாம் உணர ஆரம்பித்துவிட்டோம்.

பித்தப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களின் படுக்கைக்கு வெளியே இயற்கைக் காட்சிகள் இருக்குமாறு அமைப்பு இருந்தபொழுது அவர்களுக்கு மிகவும் குறைவான அளவு வலி நிவாரண மருந்துகளே தேவைப்பட்டன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

போர்னியோ காடுகளில் உள்ள பின்தாங்கோர் மரம் ஒரு விஷேசமான இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது. எச்.ஐ.வி. வைரஸ் பெருகுவதை இந்த இரசாயனம் கட்டுப்படுத்தும் என்பதால்
இப்பொழுது இந்த மரங்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பவளப்பாறைகளும் மருந்து மூலங்களாக இருக்கின்றன. புற்றுநோய், மூட்டு வலி, இருதய நோய் போன்றவற்றுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலை நாடுகள் காடுகளின் மருத்துவ மகத்துவத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தவுடன், காடுகளையும் பவளப்பாறைகளையும் சிறிது சிறிதாக சுரண்ட ஆரம்பித்துவிட்டன. இதனால் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளும் அருக ஆரம்பித்துவிட்டன. மூலிகைகளை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் 50,000க்கும் மேற்பட்ட மருத்துவ மூலிகைகள் அழியும் விளிம்பில் இருப்பதாக அனைத்துலக மூலிகை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது.

இப்படி அழியும் மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் முதலில் பூர்வீகக் குடியினரின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் எனக்குக் கட்டை விரலில் மரு உண்டாகும். ஒரு பிரபலமான கண் மருத்துவரான என் தாத்தா இதற்கு எப்படி மருத்துவம் பார்ப்பார் தெரியுமா? ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டுவார்.

பாதி ஆப்பிளைக் கொண்டு மருவைத் தடவுவார். இன்னொரு பாதியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சூரிய ஒளி படும் இடத்தில் புதைத்து வைப்பார். மரு μரிரு தினங்களிலேயே மறைந்து போகும். இயற்கையோடு இணைந்து எதற்கும் தீர்வு காண முயலும்பொழுது அது நமக்கு வேண்டிய தீர்வை அளிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மோர்பைனைவிட 200 மடங்கு அதிகமான சக்தி வாய்ந்த வலி நிவாரணியை இக்குவாடோர் தவளைகளிலிருந்து பெற முடியும் என்றால், நம்முடைய மலைக்காடுகளில் நமக்கு இதுவரை தெரியாத இன்னும் நிறைய அதிசயங்கள் பொதிந்து கிடக்கத்தான் செய்யும். பூர்வீகக் குடியினரின் மொழிகளில் எல்லாம் இந்தத் தகவல்கள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.

No comments:

Post a Comment