Saturday, January 15, 2022

நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் ஊக்குவிப்பு தர வேண்டும். நூருல் இசா அன்வார் வேண்டுகோள்.

 பத்திரிகை செய்தி 16.1.2022

பினாங்கு பயனீட்டாளர் சங்க பணிமனையில் செயல்படும் இரசாயனமற்ற நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் மேலும் ஊக்குவிப்பு தர வேண்டும் என பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.

அதே நேரத்தில் பொதுமக்களும் இயன்ற வரையில் சுயமாக காய்கறிகள் நடுவதற்கு ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் நூருல் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முயற்சியில் செயல்படும் இரசானமற்ற நகர் புற விவசாய தோட்டத்திற்கு வருகை புரிந்து, நடைபெற்ற விவசாய பயிற்சியை தொடக்கிவைத்தபின் நூருல் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்

நாளுக்கு நாள் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து கொண்டே போகிறது. மலேசியர்கள் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை.

அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிய காரணமாக அவரவர் தங்கள் விருப்பம்போல் விலையை உயர்த்தி பயனீட்டாளர்களுக்கு மேலும் சுமையை தந்துவிடுகின்றனர் என்றார் அவர்.

மலேசியர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சுயமாக சிறிய அளவில் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை நட வேண்டும் என நூருல் ஆலோசனை கூறினார்.

இதற்கிடையே இதே நிகழ்வில் பேசிய பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் நமது தற்போதைய விவசாயம் இரசாயன உள்ளீடுகளை பெரிதும் நம்பியுள்ளது என்றார். குறைந்த அளவிலான வெளிப்பாடுகளில் கூட, இந்த இரசாயனங்கள் பல மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அறிவியல் காட்டுகிறது. குறிப்பாக குழந்தைகளின் வளரும் மனம் மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்றார்.

விவசாயத்திற்கான இரசாயனமற்ற அணுகுமுறைகள் சாத்தியமானவை மட்டுமல்ல, விவசாய உற்பத்தியின் பின்னடைவை வலுப்படுத்தும் என்பது தெளிவாகிறது.

இயற்கை மற்றும் இரசாயனமற்ற விவசாயம் விளைச்சலை நிலையான முறையில் அதிகரிக்கும், உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்றார். இதனை நாங்கள் நிரூபித்து உள்ளோம் என்றார்.

எளிய கொள்கலன்களில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் மூலிகைகள், இரசாயன எச்சங்கள் இல்லாத புதிய மற்றும் சத்தான விளைபொருட்களுக்கான குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதோடு அவர்களின் உணவுச் செலவுகளையும் குறைக்கும்.

இதை மழைநீர் சேகரிப்பு மற்றும் தோட்டம் மற்றும் சமையலறை கரிம கழிவுகளை உரமாக்குதல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க முடியும்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பள்ளித் தோட்டத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. உணவு உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு விவசாயம், நடைமுறை ஊட்டச்சத்துக் கல்வி மற்றும் அவர்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பயிற்சியும் அளித்துள்ளது என்றார் முகைதீன்.

விவசாயம் ஒரு சாத்தியமான வாழ்க்கைப் பாதை என்பதை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விதைப்பதே எங்கள் நோக்கம் என்று அவர் சுட்டிகாட்டினார்.
நாட்டின் விவசாய முறையை 100 சதவீதம் கரிமமாக மாற்றுவதற்கான இலக்கை 2011 இல் அறிவித்த சிறிய மலை நாடான பூட்டான் அதில் வெற்றி கண்டுள்ளது.

டேனிஷ் அரசாங்கம் முழு நாட்டின் விவசாயத்தையும் இயற்கை மற்றும் நிலையான விவசாயமாக மாற்ற பல வழிகளில் செயல்படுகிறது. 2015 ஆம் ஆண்டில், இயற்கை விவசாயத்தை இரட்டிப்பாக்குவதற்கும், 2020 க்குள் நாட்டின் பொது நிறுவனங்களில் அதிக இயற்கை உணவுகளை வழங்குவதற்கும் அவர்கள் ஒரு லட்சியத் திட்டத்தை வெளியிட்டனர்.

இந்தியாவில் சிக்கிம் இப்போது 100% கரிம மாநிலமாக உள்ளது, இரசாயன பூச்சிக்கொல்லிகள் அல்லது உரங்கள் இல்லை. ஒரு முழு பிராந்தியத்திலும் கரிம உணவு சாத்தியம் என்பதை இது காட்டுகிறது.

எனவே ரசாயனமற்ற நிலையான விவசாயத்திற்கான வலுவான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த மலேசிய அரசாங்கத்தை பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் நூரூல் இசா அன்வார் இரசாயனமற்ற வெண்டைகாயை அறுவடை செய்ததோடு வருகை புரிந்ததற்கான அடையாளமாக தக்காளி செடியையும் நடவு செய்து நடை பெற்ற விவசாய பயிற்சியை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்குகொண்ட சுமார் 40 பேருக்கு, பி.ப சங்கத்தின் என். வி . சுப்பாராவ், ஓ.சரஸ்வதி தேவி மற்றும் தீபன் குணசேகரன் ஆகிய மூவரும் பயிற்சி கொடுத்தனர்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Wednesday, January 12, 2022

“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது


 
வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று 
“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” என்ற வழிகாட்டிப் புத்தகத்தை வெளியீடு செய்துள்ளது. இருபது பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் முழு வண்ணத்தில் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் என்று 4 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் பெரும்பாலானோர் சொந்தமாகக் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.  அரசாங்கம் மக்களைத் தங்கள் வீட்டுக்கு அருகாமையிலும் பயிர்களை வளர்க்கத் தூண்டுவதோடு நகர்ப்புற பயிர் வளர்ப்புத் திட்டத்தையும் ஊக்குவித்து வருகிறது.  

பயிர்களைப் பூச்சிகள் தாக்குவது இயற்கையே.  இதனைக் கையாளும் முறைகளை அறிந்திராத பயனீட்டாளர்கள், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது எப்படி என்று தொடர்ந்து ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பூச்சிகளை அழிப்பதற்காகப் பயனீட்டாளர்கள் நச்சு இரசாயனங்களை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்த  வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  பசுமை நடவடிக்கை வாரத்திற்கான கருப்பொருளும் இதுவேயாகும்.

நம் தோட்டத்திற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் இவற்றைப் பிடித்துத் தின்னும் நன்மை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றின் பங்கு பற்றி இந்த வழிகாட்டி விவரிக்கிறது.  அதோடு, பூச்சிகளை விரட்டுவதற்காக நாமாகவே எப்படிச் சொந்தமாக பூச்சி விரட்டி கரைசல்களைத் தயாரிப்பது, நன்மை செய்யும் பூச்சிகளை எப்படி நம்முடைய தோட்டத்திற்குள் வரவழைப்பது என்றும் இந்த வழிகாட்டியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம், நிலைபேறான வாழ்க்கை முறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கூட்டாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டும், விதைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் தோட்டம் போடுதல் குழுமங்களை உருவாக்கி இயங்கி வருகிறது.  இதனோடு நின்றுவிடாமல், நச்சுத்தன்மையுள்ள, ஆபத்தான பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.  நம் எதிர்கால சந்ததியினர் நச்சுப் பாதிப்புகளுக்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்கு இது அவசியமாகும் என்றார் முகைதீன்.

உலகம் முழுக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிளைபோசேட் மற்றும் கிளைபோசேட் சார்ந்த களைக்கொல்லிகளைத் தடை செய்யுமாறு கடந்த வாரம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றினைச் சமர்ப்பித்தது. இந்த வேளாண்-இரசாயனங்கள் யாவும் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் தொடர்ந்து நச்சுத்தன்மைக்கு உள்ளாக்கி வருகின்றன.  இந்த நச்சுகளைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.  அதனோடு இவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கும் கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.

உலகில், பெரும்பாலான பயிர்களுக்கான மகரந்தச் சேர்க்கை இயற்கை முறையில் பூச்சிகளாலேயே செய்யப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகள் தொடர்ந்து பயன்படுத்தப் படுமேயானால், நாம் நன்மை செய்யும் பூச்சிகளையும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று நம்முடைய உணவுத் தேவைக்கு நாமே உலை வைத்துவிடுவோம்.

உணவுப் பாதுகாப்பும், தங்குத் தடையின்றி உணவு கிடைப்பதும் நம் வாழ்வின் தேவையாகும்.  நமக்குத் தேவையான பயிர்களைச் சொந்தமாக வளர்ப்பதே இதனை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வழியாகும்.  பகிர்ந்து வாழ்ந்த நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையை திரும்பக் கொணரவும், நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள நாமே பயிர் செய்யவும், நாம் உற்பத்தி செய்யும் காய்கறிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பயிரிடுதல் தொடர்பாக நம்மிடமுள்ள தகவல்களைப் பகிரவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தோடு இணைந்து செயல்படுங்கள்.  



தொடர்புக்கு : CAP MARKETING SECTION :  04-8283511
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்


Attachments area

Saturday, January 1, 2022

 

அவரும் நானும்....

ஒத்தநாடி உடம்பு,  வைரம் பாய்ந்த உறுதி, கடல் அளவு அறிவும் மண் போன்ற எளிமையும், விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை என வாழ்நாள் முழுதும் பாடுபட்ட இயற்கை மைந்தர் கோ.நம்மாழ்வாரின் நினைவு நாள் இன்று.  

இந்தப் பச்சை மனிதருடன் பயணித்த பேறு இன்றளவும் பசுமையாய் உள்ளது. நம்மாழ்வார் அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு முதன் முறையாக வருகை  புரிந்த போது அவரைக் கண்டு நெகிழ்ந்த தருணங்களின் ஈரம் நித்தியமானவை. இங்கு அவர் வழங்கிய பயிற்சி பட்டறைகளின் வழி பெற்ற அனுபவமும் அறிவும் ஈடு அற்றவை. 

மேலும்,  2012-ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின்  ஏற்பாட்டில்  தமிழகப் பயணத்தின் போது இயற்கை நாயகனுடன் மீண்டும்  ஒரு பொன்னான நாள். அவருடன் கழிந்த பொழுதுகள் எங்களின்  வேளாண்மைக்கான தேடலுக்குப் பதில்களாய் அமைந்தன. ஆனால், அதுவே எங்களின் இறுதி சந்திப்பாக அமைந்தது. 8 ஆண்டுகள் கழிந்திருந்தாலும் அவரின் வழிகாட்டலும் அவரது குழந்தைச் சிரிப்பும் அழகு பேச்சும் என்றும் மனம் விட்டு நீங்காதவை.

இயற்கையை நேசிக்கும்  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாம்மாழ்வார் வாழ்கிறார். இயற்கைக்கு இயற்கையே உரம்.  அவரது எளிய புன்னகையின் புள்ளி மண்ணின் நலத்திலும் வளத்திலும் காண்போம்.

தீபன் குணசேகரன்
Theeban Gunasekaran