Thursday, August 11, 2011

உங்களைக் கொல்ல கால் தேக்கரண்டி பூச்சிக்கொல்லியே போதுமானது - கார்போபியூரானை தடை செய்யுங்கள்!

விவசாய அமைச்சு உடனடியாக கார்போபியூரான் என்ற பூச்சிக்கொல்லியைத் தடை செய்ய வேண்டும். இந்த வருட ஆரம்பத்தில், கெடா, பெண்டாங்கைச் சேர்ந்த 5 விவசாயிகளின் 18 மாடுகள் கார்போபியூரான் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி செத்துப்போன காரணத்தால் அவர்கள் மவெ. 30,000.00 இழப்பை எதிர்நோக்கியுள்ளனர். கார்போபியூரான் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்ததால் இந்த மாடுகள் செத்துப்போயின.

சோளம் வளர்க்கும் விவசாயிகள் அவற்றை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கும் பொருட்டு சோளச்செடியின் முளைகளில் கார்போபியூரான் சிற்றுருண்டைகளை வைக்கின்றனர்.

இதேப்போன்று குமட்டி வளர்ப்பவர்களும் அவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்கும் பொருட்டு மண்ணில் கார்போபியூரானைப் இடுகின்றனர். கார்போபியூரான் அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த காரணத்தால் அதை கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் 2008ல் தடை செய்தது.

ஆகக் கடைசியாக அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகமும் கார்போபியூரான் உபயோகத்தைத் தடை செய்துள்ளது. கார்போபியூரானை பியூராடான் (Furadan) என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். உணவு சட்டம் 1985ன்படி கார்போபியூரான் அரிசி, சோளம், மிளகு (கருப்பு, வெள்ளை), மாங்காய், வாழைப்பழம், கரும்பு மற்றும் கத்திரிக்காய் பயிர் வளர்ப்பில் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் கார்போபியூரான்தான் அதிக அளவு நச்சுத்தன்மை கொண்டது. ஒருவரைக் கொல்வதற்கு வெறும் கால் தேக்கரண்டி கார்போபியூரான் போதுமானது.

இந்த நச்சு நரம்பு மண்டலத்தைத் தூண்டி, குமட்டல், தலை சுற்றல், குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அளவு அதிகமானால் சுவாசக் குழாய் செயலிழப்பை ஏற்படுத்தி இறப்புக்கும் இட்டுச் செல்லும். நரம்பு மண்டலம் மற்றும் இன உற்பத்தி உறுப்பில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். கார்போபியூரான் எச்சங்கள், சாப்பிடும் உணவிலும் குடிக்கும் நீரிலும் கலக்கும்பொழுது இந்தப் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகின்றன.

கார்போபியூரான் சுற்றுச்சூழல் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். 1967ல் கார்போபியூரான் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இலட்சக்கணக்கான பறவைகள்
மற்றும் வனவிலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த கார்போபியூரான் சிற்றுருண்டைகளைக் குருவிகள் தீனி என்று நினைத்து அவற்றைத் தின்று மடிகின்றன. செத்துப்போன
பறவைகளை இதர மிருகங்கள் தின்னும்பொழுது அவையும் சாகின்றன. இந்த கார்போபியூரான் மீன் இனத்தையும் நச்சுக்குள்ளாக்கி வருகிறது.

அமெரிக்காவில் வஞ்சன மீன் இனம் குறைந்து போனதற்கு இந்த கார்போபியூரான்தான் காரணம். கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சிங்கங்களைக் கொல்வதற்கு கார்போபியூரானைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. கார்போபியூரானின் நச்சுத்தன்மை காரணமாக மலேசியாவில் இந்த நச்சு பூச்சிக்கொல்லி தடை செய்யப்பட வேண்டும். கார்போபியூரானால் விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை இதன் மூலம் பெரும் அளவில் குறைக்க முடியும்.

No comments:

Post a Comment