Sunday, May 2, 2010

“எந்நாடுடைய இயற்கையே போற்றி” இயற்கையே எங்கள் ஜீவநாடி பினாங்கு மாணவர்களின் பசுமைப் புரட்சி!

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முழு ஆதரவில் நாட்டிலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் பூமியைக் காப்பதற்கும், மனிதர்களிடையே ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கும் பசுமைப் புரட்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இருக்கின்ற காலியான இடங்களில் மூலிகைத் தோட்டமும் இயற்கை வேளாண்மையும் தொடங்குவதற்கு பி.ப.சங்கம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

இயற்கை விவசாயத்தைப் பற்றி பேசும்பொழுது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதன் முழு அவசியத்தையும் அதன் பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். பசுமைப் புரட்சி பள்ளிகளில்தான் தொடங்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் உள்ள துங்கு புவான் அப்சா இடைநிலைப்பள்ளியில் மூலிகைத் தோட்டத்தையும் இயற்கை விவசாயத்தையும் பி.ப.சங்கம் தொடக்கி வைத்ததாக இத்ரிஸ் கூறினார்.

பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் தலைமையில் சென்ற அதிகாரிகள் அப்பள்ளியில் 15 மூலிகைகளை வழங்கி நட்டு வைத்தனர்.

ஒவ்வொரு மூலிகையையும் ஒரு மாணவி தத்தெடுத்து பள்ளியில் படிக்கும் வரையில் பராமரித்து வருவார் என சுப்பாராவ் கூறினார்.

இம்மூலிகைச் செடிகளுக்குத் தேவையான இயற்கை உரம் மற்றும் இயற்கை ஊக்கிகளை பி.ப.சங்கம் வழங்கும் என்றார்.

அதே போல், பள்ளியைச் சுற்றிலும் இருக்கின்ற குப்பைகளை வைத்து அதை மக்க வைத்து உரமாக்கும் செயல்பாட்டையும் பி.ப.சங்கம் மாணவர்களுக்கு சொல்லித் தந்தது.

வலையத் தோட்டம், விதை நடுதல், செடிகளை பராமரிப்பது போன்ற முறைகளும் சொல்லித் தரப்படுகின்றன என்றார் சுப்பாராவ்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 200 மாணவிகள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் என சுப்பாராவ் கூறினார்.

No comments:

Post a Comment