Sunday, May 2, 2010

புவா பாலா கிராமத்தின் இரண்டாவது மாட்டுக் கொட்டகையும் உடைக்கப்பட்டுவிட்டது 50 ஆண்டு கால பசும்பால் தொழிலுக்கு முற்றுப்புள்ளி


சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பினாங்கு புவா பாலா கிராமத்தில் செயல்பட்டு வந்த மற்றொரு மாட்டுக் கொட்டகையும் மேம்பாட்டாளர்களால் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது.

தனது தந்தையின் காலத்திலிருந்து மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து, தொழில் செய்து வரும் ஆர்.சுப்பிரமணியத்தின் மாட்டுக் கொட்டகையை மேம்பாட்டாளர்கள் உடைத்தெறிந்தனர்.

ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலையில் சுப்பிரமணியமும் அவரின் துணைவியாரும் தங்களுடைய மாட்டுக் கொட்டகை உடைபடுவதை கண்ணீரோடு பார்த்தனர்.

தன்னுடைய 100 மாடுகளும் 25 ஆடுகளும் தங்குவதற்கு ஏற்ற இடத்தை தேடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் எவ்வித முன் அறிவிப்பின்றி தங்களின் மாட்டுக்கொட்டகை உடைக்கப்பட்டது துரோகச் செயல் என சுப்பிரமணியம் கூறினார்.

இந்த மாட்டுக் கொட்டகைக்காக இதுவரை 50 ஆயிரம் வெள்ளி வரை செலவு செய்துள்ளேன். தினமும் 200 வெள்ளி வரை பால் விற்பனை செய்து வருகின்றேன் என்று கூறிய சுப்பிரமணியம், இனி என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத நிலையில் குழம்பிப் போய் இருப்பதாகக் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் எங்களுக்காகப் போராடியது. மாற்று இடம் கிடைக்கும் வரையில் உடைக்கப்படுவதை நிறுத்தி வைக்குமாறு மாநில அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால், மாட்டுக் கொட்டகை உடைக்கப்படும் வரை யாருமே உதவிக்கு வராதது வருத்தமளிப்பதாக சுப்பிரமணியம் கூறினார்.

ஏற்கெனவே இதே புவா பலா கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவானந்தம் என்பவருக்குரிய மாட்டுக் கொட்டகையும் உடைக்கப்பட்டது. அவருடைய 100 மாடுகள் நடுத்தெருவில் தூங்குகின்றன.


இப்பொழுது சுப்பிரமணியத்தின் 100 மாடுகளும் 25 ஆடுகளும் நடுத்தெருவில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

சுமார் 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த ஒரு பாரம்பரிய பசும்பால் தொழில் ஒரு முற்றுப்புள்ளிக்கு வர வாய்ப்பிருப்பதாக பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

உடைபட்ட இந்த இரண்டு மாட்டுக் கொட்டகைகளை காப்பாற்றுவதற்கு யாருமே முன்வராதது வேதனையை தருவதாக சுப்பாராவ் கூறினார்.

No comments:

Post a Comment