Monday, December 11, 2023

சிக்கிம் - இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலம்


சிக்கிமில் உள்ள 75,000 ஹெக்டர் விவசாய நிலங்களில் இப்பொழுது பூச்சிக்கொல்லிகளுக்கும் இரசாயன உரங்களுக்கும் இடமில்லை. இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அது உருவெடுத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.



ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலம் பூக்களின் மாநிலம் என்ற பெயரிலும் திகழ்கிறது. சென்ற ஆண்டு இறுதியில் இயற்கை விவசாயத்தை முழுமையாக அமல்படுத்தும் ஒரு மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிக்கிம் மாநிலத்திற்கு வருகை புரிந்து அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார். தேசிய இயற்கை விவசாயத் திட்டத்தின் கீழ் இந்த மாநிலம் படிப்படியாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு இப்பொழுது முழு இயற்கை விவசாய மாநிலமாக தன்னை முன்னிறுத்தியுள்ளது. 

சிக்கிமை முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற வேண்டும் என்று 12 வருடங்களுக்கும் முன்பு 2003ல் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்குப் பிறகு விவசாயப் பண்ணைகளில் இரசாயன உபயோகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயன உரங்கள் விற்பனை தடை செய்யப்பட்டன. சிக்கிம் விவசாயிகள் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தாதவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தியே வந்தனர்.

அரசாங்கம் எடுத்த முடிவுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் விவசாயிகள் இயற்கை விவசாய வழிமுறைகளுக்கு மாறினர். சிக்கிமில் பெரும்பாலும் ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், அந்தந்த பருவத்திற்கு ஏற்ற காய்கறிகள், ஆரஞ்சு, கிவி, கோதுமை, நெல், சோளம் மற்றும் தானியங்கள் பயிரிடப்படுகின்றன. கலிபோர்னியா, விஸ்கொன்ஸின் போன்ற இயற்கை விவசாயம் செய்யும் வெளிநாட்டு மாநிலங்களின் பட்டியலில் சிக்கிமும் சேர்ந்துவிட்டது. சிக்கிம் மாநிலத்தைப் பார்த்து இந்தியாவின் கேரளா, மிசோராம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இயற்கை விவசாயத்தை நோக்கி அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்றன.

இயற்கை விவசாய முறையில் இரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளுக்கும் இடம் கிடையாது. இவற்றைப் பயன்படுத்தாத பட்சத்தில் சூழல் நச்சுத்தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இது பல்லுயிர் செறிவுக்கு வித்திடுகிறது" என்று விவசாய செயலாளர் கோர்லோ பூத்தியா கூறினார். 


இயற்கை விவசாயம் மண் நலத்தைப் பெருக்கும். இதன் மூலம் விளைச்சலும் அதிகரிக்கும். சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத் துறை மேம்படவும் இது உதவும். நச்சுக் கலவாத இயற்கை உணவுகளை அளிக்கிறோம் என்று இப்பொழுதே சுற்றுலாத்துறை விடுதிகள் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டன. சிக்கிமிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளும் விஷமற்ற உணவை அருந்தி மகிழலாம்.

ந்ன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 2016

No comments:

Post a Comment