Friday, September 23, 2011

மரம் எழுதும் மடல்!


"ஏதோ ஒரு நதிக்கரையி்ல், எப்போதோ ஓர் ஏகாந்த நாளில், உயிர்ப்பு நிறைந்த ஒரு விநாடியில் விதையாய் நான் விழுந்தேன்.

முளைத்தேன்; வளர்ந்தேன்; செடியானேன்: மலர்கள் தவழும் மடியானேன். எனது வேர்கள் நிலத்தை உழுதன. கிளைகள் வானத்தில் எழுந்தன.

என்னில் தவழ்ந்து, என்னை உறிஞ்சி, என்னால் வளர்ந்து, என்றும் என்னைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி மனிதன் இன்று என்னை வெட்டுவதற்கு வந்தான். அவனது உடலின் உரமும், மனத்தின் வெறியும் இதோ - என்னைத் துண்டாடிக் கொண்டிருக்கின்றன. மனித ஊனங்களுக்கெல்லாம் கைகொடுத்து உதவிய நான், இப்போது ஊனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
தவணை முறையில் எனது உயிர் சிறிது சிறிதாகப் போய் கொண்டிருக்கிறது.

இந்த வேளையில், "எனது இரத்தத்தைப் பாருங்கள். இன்னுமா உங்களுக்கு இரக்கம் வரவில்லை?" என்று நான் இறைஞ்சமாட்டேன். எனக்குத் தெரியும் எனது இரத்தத்தில் இரப்பர் செய்ய ஏதேனும் வழியிருக்கிறதா என்று பார்ப்பவர்கள் நீங்கள். உங்களுக்குத் தெரியுமா? எனது மரணப் போராட்டத்தில் வெளிவரும் இறுதி மூச்சுகள்கூட உங்கள் சுவாசத்துக்காகத்தான்!

- உங்களில் ஒருவரால் வெட்டப்படும்.....ஒரு மரம்.

No comments:

Post a Comment