இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இருக்காதா என்பது ஒரு மிகப் பெரிய வினாவாக இருக்கின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகின்றது.
படுகொலை, கொலை, பாராங்கத்தியை காட்டி மிரட்டுவது, கொள்ளை என பலதரப்பட்ட இரத்த வெறி சம்பவங்கள் நமது இளைஞர்களுக்கு பாலும் பழமும் சாப்பிடுவது போல ஆகிவிட்டது என பி.ப.சங்க அல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
ஒவ்வொரு பொழுதும் விடியும்போது கொலை கொள்ளை சம்பவங்களையும், மிரட்டிச் செல்கின்ற அச்சுறுத்தல்களையும் படிக்கும்போது அன்றைய தினம் ஒரு பயமான தினமாகவே இருக்கின்றது.
இந்திய இளைஞர்களின் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிடில், இன்னும் பலதரப்பட்ட கோரச் சம்பவங்கள் நிகழக்கூடும்.
இதற்கு அண்மைய காலமாக நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களே ஒரு உதாரணம் என்று சுப்பாராவ் கூறினார்.
கொலை, படுகொலை, கொள்ளை, பயமுறுத்துதல் என பலதரப்பட்ட சம்பவங்களில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்கள் ஏன் இவர்களைக் கண்டிப்பது கிடையாது என்பதுதான் புரியாத புதிராக இருப்பதாக சுப்பாராவ் கூறினார்.
இளம் வயதிலேயே கொடூரமான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இவர்களின் எதிர்காலம் சீரழிந்து போவதற்கு இவர்களது பெற்றோர்களே மூல காரணமாக திகழ்கின்றனர் என அவர் கூறினார்.
கொலை, படுகொலை, கொள்ளையடிப்பது என்பது இவர்களுக்கு சர்வசாதாரணமான செயலாகிவிட்டது. யாருக்கும் இவர்கள் பயப்படுவதும் கிடையாது. யாருடைய அறிவுரையையும் இவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இல்லை.
ஆகவே இவர்களை நல்வழிக்கு கொண்டு வருவதற்கு மிகப் பொருத்தமானவர்கள் இவர்களது பெற்றோர்கள்தான் என சுப்பாராவ் கூறினார்.
இவர்களது உற்றார் உறவினர்களும் இவர்கள் நல்ல திசையை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
“எனக்கென்ன! என் பிரச்னை இல்லை” என அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என என்.வி.சுப்பாராவ் கூறினார்.
No comments:
Post a Comment