Friday, September 23, 2011

தேவைக்கு மேற்பட்ட மருந்துகளை நோயாளிக்கு அள்ளிக்கொடுப்பதை நிறுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

உபயோகப்படுத்தாத அல்லது காலாவதியான மருந்துகளை அரசாங்க மருத்துவ மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் கொண்டு போய் கொடுத்துவிடுமாறு அமைச்சு கூறியுள்ளது சரியான அணுகுமுறை கிடையாது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

காலாவதியான மருந்துகளை ஒரு முறையில்லாமல் தூக்கி எறிவதைத் தவிர்க்கவும், மருந்துப் புட்டிகளின் மூடி கூட திறக்கப்படாமல் இருக்கின்ற மருந்துகளை, நல்ல நிலையில் உள்ள மருந்துகளை மறுபயனீடு செய்யவும் இந்த அணுகுமுறையை சென்ற வருடத்தில் அமைச்சு பரிந்துரை செய்தது.


முதல் அரை வருடத்தில் கோலாலம்பூர் மருந்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 128,818 பெருமானமுள்ளவை. சென்ற வருடத்தில் மட்டும் செபிராங் ஜாயா மருத்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 27,899 பெருமானமுள்ளவை. இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரோல் குறைப்பு மருந்துகளே பெரும்பாலும் திருப்பி கொடுக்கப்பட்ட மருந்துகளாகும் என்றார் இத்ரிஸ்.

நோயாளிகளுக்குத் தேவையில்லாத மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட நோய்க்கு தேவைப்பட்டதைவிட அதிகமான மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மலேசியாவில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இப்படிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது என்றார் இத்ரிஸ்.

ஒவ்வொரு முறையும் தேவைக்கு மேற்பட்ட மருந்துகளைக் கொடுத்து நோயாளியின் மருத்துவக் கட்டணத்தை ஏகத்துக்கு உயர்த்துவதும் வழக்கமாகிவிட்டது என்று பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. மருத்துவக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நோயாளி பணி புரியும் கம்பெனி செலுத்தும் பட்சத்தில் இப்படி அதிகமாக விதிக்கப்படும் மருத்துவக் கட்டணம் நோயாளிக்கு பிரச்னையாக இருப்பதில்லை. மருந்துகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, தேவையானதை பயன்படுத்திவிட்டு மிச்சத்தை குப்பையில் போடுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

இல்லாத நோய்க்கான மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. இருமல் இல்லாமலேயே இருமல் மருந்தும், காய்ச்சல் இல்லாமலேயே பாரசெட்டமோலும், தேவையில்லாத லோஷன் மற்றும் கிரீம்களையும் கொடுத்துவிடுகிறார்கள்.

இதற்கு நோயாளியின் அறியாமை, நோயை விரைவில் குணப்படுத்தும் மருந்து வேண்டும் என்று வலியுறுத்துவது, அல்லது கம்பெனிதான் கட்டணம் செலுத்துகிறது என்ற காரணத்திற்காக அதிக மருந்துகளை பெற்றுக்கொள்வது என்று நோயாளியே இந்நிலைக்குப் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறார்.

ஆனால் இதற்கு உண்மையான காரணம் நோயாளி கிடையாது. மருந்துகளை விநியோகிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கும் உள்ள வியாபாரத் தொடர்பே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.

சென்ற வருடத்தில் மட்டும் சுகாதார அமைச்சு மவெ. 1.6 பில்லியனை நாட்டில் உள்ள 135 மருத்துவமனைகளின் மருந்துத் தேவைக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 15% அதிகமாகும்.

ஒவ்வொரு முறையும் பினாங்கு பொது மருத்துவமனைக்குச் செல்லும்பொழுது புதிய மருந்துகளை கொடுப்பதாகவும் அவருக்குப் பை நிறைய மருந்துகள் குவிந்து கிடப்பதாகவும் ஒருவர் புகார் அளித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையின் மீது ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இருமல் மற்றும் தொண்டை வலிக்கு மருந்து வாங்கச் சென்றபொழுது அளவுக்கு அதிகமான பாரசெட்டமோல், மிகவும் வீரியமான இருமல் மருந்து மற்றும் என்டிபையோட்டிக்கை கொடுத்து அவருடைய மருத்துவக் கட்டணத்தை அளவுக்கு அதிகமான உயர்த்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நோயாளியின் தேவைக்கு அதிகமான மருந்துகளைக் கொடுப்பதைப் பெரும்பாலான மருத்துவமனைகள் செய்து வருகின்றன. இவ்வாறு செய்து நோயாளிகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று இத்ரிஸ் கூறினார்.

இதற்கு முதலில் நோயாளியின் நோய் முழுமையாக சரியாகக் கண்டறியப்பட வேண்டும். சில சமயங்களில் மருந்தைவிட நோயாளிக்கு ஓய்வு, உடற்பயிற்சி, போதிய தூக்கம், உணவுப் பழக்கத்தில் சில மாறுதல்கள் போன்றவையே நோயைக் குணப்படுத்த போதுமானவையாக இருக்கும்.

மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் மருத்துமவனைகள் இலாபம் பார்க்கும் பொருட்டு நிறைய மருந்துகளையும் புதிய புதிய மருந்துகளையும் வாங்கி பின்பு அவற்றைத் தேவைக்கு மேற்பட்டு நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து இலாபம் சம்பாதிக்க முயல்கின்றன. இப்படி மருந்துக் கம்பெனிகளின் அளவுக்கு மீறிய மூக்கை நுழைக்கும் போக்குக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

எந்தெந்த மருந்துகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவை என்பதை அரசாங்கம் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படாத மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும்பொழுது அவர்கள் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். சில சமயங்களில் இறப்பு கூட நிகழலாம்.

ஆகையால் நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் பொருட்டு அளவுக்கு அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

1 comment: