Monday, November 15, 2010

நீரிழிவு நோய் - அமைதியான உயிர்கொல்லி!

இன்று உலக நீரிழிவு தினம். சர்வதேச நீரிழிவு சம்மேளனமும் உலக சுகாதார நிறுவனமும் 1991ம் ஆண்டு நவம்பர் 14 தேதியை நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தியதிலிருந்து, உலக அளவில் நீரிழிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று சுகாதார அமைச்சும் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை நடத்தி வருகின்றது. இருப்பினும் மலேசியாவில் இந்நோய் குறிப்பாக 2ம் ரக நீரிழிவு, தொற்றுநோய் போல எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.


ஆசியாவிலேயே நீரிழிவு நோயாளிகளில், மலேசியா 4வது இடத்தில் இருப்பதாக சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறுகிறது. 2007ல் எட்டு இலட்சமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2010ல் 3.4 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டுகளில், தென் கிழக்காசிய நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் மிக அதிகமாக இருப்பார்கள் என்றும் அச்சம்மேளனம் கணித்திருக்கிறது என்றார் அவர்.

தேசிய சுகாதாரம் மற்றும் நோய்கள் பற்றி மிக அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை திடுக்கிடும் வகைனில் அதிகரித்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. 1996-ல் 8.3 விழுக்காடாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, 2006ல் 14.9 விழுக்காடாக அதிகரித்தது. பத்தே வருடத்தில் 30 வயதுக்கும் அதிகமான மலேசியர்களிடையே 80% வரை இந்நோய் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.

இதே ஆய்வில் 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில், 1996ல் 4.4 விழுக்காடாக இருந்த உடல் பருமன், 2006ல் 14.0 விழுக்காடாக உயர்ந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இது பத்தே வருடத்தில் 200 விழுக்காடு உயர்வாகும்.

ஆசியாவிலேயே அதிக உடல் பருமனும் கூடுதல் எடை கொண்டவர்களும் மலேசியாவில் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கான மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் உடல் பருமன் அல்லது கூடுதல் எடையோடு இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை 10 வருடங்களுக்கு முன் 24.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது. இப்பொழுது 10 மலேசியர்களில் (பெரியவர்கள்) எழுவர் மோசமான பிணிக்கு உளாகியிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.

அதிகமான சீனி உட்கொள்ளும் பழக்கமே மலேசியர்களிடையே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இத்ரிஸ் கூறினார். நாள் ஒன்றுக்கு 26 தேக்கரண்டி சீனியை உட்கொள்வதோடு, சீனி அதிகமாக உபயோகிப்பவர்கள் பட்டியலில் நாம் எட்டாவது இடத்தை வகிக்கின்றோம்.

நீரிழிவு உயிர்க்கொல்லி நோயாக கருதப்படுவதற்கு காரணம் அது உடலில் முக்கிய உறுப்புக்களான இருதயம், சீறுநீரகம், நரம்புகள், கண்கள் போன்றவற்றைப் பாதிக்கிறது. நீரிழிவு நோய் முறையாக கட்டுபட்டுத்தப்படவில்லை என்றால், அது பல்வேறு சிக்கல்களை உடலில் ஏற்படுத்தும். முக்கிய உடல் உற்றுப்புக்களைத் தாக்கும் அதே வேளை, கால்களையும் அது குறி வைக்கிறது. 40%லிருந்து 70% கால் துண்டிப்பு சம்பவங்களுக்கு நீரிழிவே காரணமாக இருக்கிறது.

உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில்:
* 10 வினாடிகளில் இருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது
* 10 வினாடிகளில் ஒருவர் நீரிழிவு நோயினால் இறக்கிறார்.
* 30 வினாடிகளில் ஒருவர் கை அல்லது காலை நீரிழிவு நோய்க்கு பலி கொடுக்கிறார்

நீரிழிவு நோயின் முற்றிய நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்படுவது மலேசியாவில் மிகப் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சுமார் 13,000 நீரிழிவு நோயாளிகள் டயலிசிஸ் செய்து கொள்கிறவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 2,500 பேர் நீரிழிவு நோயின் இறுதி கட்டத்தை அடைகின்றார்கள் என்றார் இத்ரிஸ்.

நீரிழிவு நோயாளிகளில் ஐவரில் நான்கு பேர் இருதய நோயால் இறக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் அறுவர் பக்கவாதத்திற்கு பலியாகிறார்கள்.

இருவருக்கு நீரிழிவு நோய் என்று அறியப்படும் பொழுது ஒருவர் தனக்கு இந்நோய் இருப்பது தெரியாமலேயே இருக்கிறார். வயதானவர்களுக்கு அல்லது மத்திய வயதை ஒத்தவர்களுக்கு ஏற்படும் என்று மட்டுமே கருதப்பட்ட 2ம் ரக நீரிழிவு இப்பொழுது 10 வயது குழந்தைக்கும் ஏற்படுகிறது.

இளைஞர்களிடையே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கமும், வாழ்க்கை முறையும் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 18க்கும் 29 வயதுக்கும் இடைபட்டவர்களிடையே 2ம் ரக நீரிழிவு ஏற்படுவது அதிகமாக இருக்கிறது என்று இத்ரிஸ் மேலும் கூறினார்.

குழந்தைகள் உண்ணும் “நாகட், பர்கர், பொறித்த கோழி, பொறியல், கேஸ் பானங்கள் அவர்களை உடல் பருமனானவர்களாக மாற்றுகிறது. நீண்ட நேரத்துக்கு அமர்ந்து நிலையில் வீட்டுப்பாடம் செய்வது, தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுக்களை விளையாடுவது” அவர்களிடையே உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

அதிக புருக்டோஸ் உள்ள சோள சீரப்பில் இருக்கும் மலிவான சீனி பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களிலும், பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது இன்சுலினுக்கு எதிராக செயல்பட்டு 2ம் ரக நீரிழிவு நோய்க்கு வித்திடுகிறது. ஜேம், சாக்லட், பேக் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பேக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பானங்கள், சத்து பானங்கள், பசியாறல் சீரியல்கள், சாஸ் வகைகள், சூப் வகைகளில் இந்த சீரப் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு பொதுமக்களின் சுகாதாரத்தைக் குறிவைக்கும் ஒரு மோசமான நோய். உலக அளவில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். மக்கட்தொகை எண்ணிக்கை அதிகரிப்பு, நகரமயமாக்குதல், உடல் பருமன் அதிகரிப்பு, குறைவான உடல் உழைப்பு போன்றவை முக்கிய காரணமாகிறது.

மலேசியாவில் நீரிழிவின் அதிகரிப்பு எதிர்பார்த்த அளவைவிட மிக அதிகமாக இருக்கிறது. இந்த நோய்க்கான செலவினங்கள் அதிகரிப்பதோடு, அது நோயாளிகளின் கைகால்கள், கண் பார்வை போன்றவற்றைப் பலி கொள்கிறது.

தொற்றுநோய் போன்று அதிகரித்து வரும் இந்நோயைத் தடுப்பதற்கு அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டு கொள்கிறது:

* உணவுகளில் சோள சீரப் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும்

* உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பில் சீனி பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு வகை செய்ய வேண்டும்.

* தங்கள் தயாரிப்பில் எவ்வளவு சீனி இருக்கிறது என்பதை லேபல்களில் குறிப்பிடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

* குழந்தைகள் தொலைகாட்சி பார்க்கும் சமயங்களில் அதிக சீனி சேர்த்த உணவுகளின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்.

* பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலையிலும், பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இந்த உணவுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

* மருத்துவமனை, விமான நிலையம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் தின்பண்டங்களை விற்கும் தானியங்கி இயந்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். அதற்குப் பதில் குடிநீர் தானியங்கி இயந்திரங்களைப் பொருத்த வேண்டும்.

* நீரிழிவு நோயின் ஆபத்துக்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரிய அளவிலான பிரச்சாரங்கள் தீவிரமாக்கப்பட வேண்டும்.

* பயனீட்டாளர்கள் உடல் உழைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் விரிவான பிரச்சாரங்கள் மெற்கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

No comments:

Post a Comment