Sunday, September 27, 2009

சினிமா நடிகர்களின் கூடாரமாக திகழும் தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை

மயில் இறகு, குத்துவிளக்கு, தீப ஒளி, சூரியோதயம் போன்ற படங்களோடு மிளிரும் தீபாவளி வாழ்த்து கார்டுகளே முன்பெல்லாம் பிரதானமாக விற்பனையிலிருக்கும். ஆனால் இப்பொழுது சினிமா நடிகர் - நடிகைகளின் படங்களை கொண்ட வாழ்த்து கார்டுகளே சந்தையை ஆக்கிரமித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்படிபட்ட வாழ்த்து கார்டுகள் தீபாவளியின் மகத்துவத்தை மாசுபடுத்துவதாக இருக்கிறது என பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.


தீபாவளியின் மகிழ்ச்சியை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கும் அன்பை பரிமாறிகொள்தற்கும்இ நட்பைத் தொடர்வதற்கும் அன்பான பண்பான வார்த்தைகளால் தீபாவளி வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதற்கும் தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

அதேப்போல் தீபாவளி வாழ்த்துக் கார்டுகளின் அட்டைப்படங்களும் தீபாவளியை நினைவுகூர்ந்து பார்க்கும் வகையில் அமைந்திருப்பதும் மிக முக்கியமாகும் என்றார் சுப்பாராவ்.

முன்பு தீபாவளி வாழ்த்துக் கார்டுகளின் அட்டைப்படங்களில் தீப ஒளிகள் கதிரவன் மயில் இறகு, குத்துவிளக்கு, கண்ணன், ஊதுவர்த்தி பழங்கள்,பூஜை பொருட்கள் போன்றவை அச்சிடப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

முன்பு சினிமா நடிகர்களைக் கொண்ட வாழ்த்து கார்டுகள் அச்சிடப்பட்டு வந்தாலும் நடிகர் நடிகையின் சிறிய படங்களே அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இப்பொழுது வருகிற வாழ்த்து கார்டுகளில் கவர்ச்சியான நடிகைகளின் படங்களும் சினிமா நடிகர்களின் வன்முறை காட்சிகளும் கொண்ட படங்கள் அச்சிடப்பட்டு வருவது கவலையைத் தருவதாக இருக்கின்றது என்றார் சுப்பாராவ்.

துப்பாக்கி ஏந்தி நிற்பது போலவும் ஒரு நடிகை தான் அணிந்திருக்கும் சட்டையைக் கழட்டுவது போலவும் இன்னொரு படத்தில் குட்டை பாவாடை அணிந்து தொடையைக் காட்டுவது போலவும் உள்ள தீபாவளி வாழ்த்துக் கார்டுகளும் விற்கப்பட்டு வருகின்றன என்றார் சுப்பாராவ்.

முன்பு சிறிய வடிவில் அமைந்திருந்த தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் இப்பொழுது மெகா அளவில் வரத் தொடங்கிவிட்டன.

பி.ப.சங்கம் மேற்கொண்ட ஆய்வில் இது போன்ற கார்டுகள் பினாங்கு, ஈப்போ, கிள்ளான், கோலாலும்பூர், சுங்கைப்பட்டாணி , ஜோகூர் பாரு, போன்ற இடங்களில் பரவலாக விற்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

பள்ளி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்களிடம் இது போன்ற தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் மிகவும் பிரபலம் அடைந்து வருவதாக சுப்பாராவ் கூறினார்.

இது போன்ற நிலை தொடருமானால், எதிர்காலத்தில் தீபாவளி சினிமா நடிகர் - நடிகைகளுக்கே கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாக அமைந்துவிடும் என்றும் சுப்பாராவ் எச்சரிக்கை விடுத்தார்.

நமது பாரம்பரிய சின்னங்கள், படங்கள், பணபுநலன்கள் போன்றவை எத்ரகால தலைமிறையினருக்கு காட்டப்படாமலேயே மறைக்கப்படுவதற்கு சினிமா நடிகர் நடிகைககளின் ஊடுருவல் அமைந்துவிடம் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

இது போன்ற படங்கள் கொண்ட தீபாவளி வாழ்த்துக்கார்டுகளை வாங்க வேண்டாம் என பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.

வியாபாரிகளும் இது போன்ற படங்களைக் கொண்ட தீபாவளி வாழ்த்துக்கார்டுகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து விற்க வேண்டாம் என பி.ப.சங்கம் கேட்டு கொள்வதாக என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

No comments:

Post a Comment