Monday, September 21, 2009

புவா பாலா கிராமத்தின் பாரம்பரியம் புதைக்கப்பட்டுவிட்டது அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டனர்

ஒரு 200 ஆண்டு கால இந்திய பாரம்பரிய சின்னமாகத் திகழ்ந்து வந்த ஒரு கிராமம் “அத்திப்பட்டி” போல் சிதறி உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மேம்பாடு என்ற பெயரில் லட்சக்கணக்கான வெள்ளியில் சொகுசான வீடுகள் கட்டப்படுவதற்காக, சரித்திரம் படைத்த புவா பாலா என்ற தமிழர்களுக்கே சொந்தமான கிராமத்தின் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி, புவா பாலா கிராமத்தை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என முழு நம்பிக்கையில் இருந்த கிராமவாசிகளுக்கு இந்த ஏமாற்றம் தங்கள் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாக இருக்கும்.

தங்களின் வீடுகள் தங்கள் கண்ணெதிரிலேயே உடைக்கப்படுவதைக் கண்டு வயதானவர்கள் கண் கலங்கினர். வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்படும்போது எழுந்த ஒவ்வொரு சத்தத்தின்போது, இந்த முதியவர்களின் கண்களிலிருந்து சொட்டு சொட்டாகக் கண்ணீர் வந்ததைப் பலர் கண்டு வேதனைப்பட்டனர்.

லட்சக்கணக்கான வெள்ளி மதிப்புடைய வீடு தருகிறார்கள், போக்குவரத்து செலவு கொடுக்கிறார்கள், உடனடியாக வீட்டை விட்டுக் காலி செய்யுங்கள் என, மேம்பாட்டாளருக்கு சாதகமாகவே “மந்திரங்கள்” வாசித்த அரசியல்வாதிகள், சரித்திரம் படைத்த இந்த கிராமத்தை காப்பாற்றுவதற்கோ அல்லது இதனைப் பாரம்பரிய சின்னமாகப் பிரகடனப்படுத்துவதற்கோ எந்த வித அக்கறையோ அல்லது நடவடிக்கையோ எடுத்தததாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளின் அவதூறான, அறிக்கைகளால், புவா பலா கிராமத்தின் இந்தியர்கள் பணப் பேராசைக்காரர்கள், பிடிவாதம் பிடித்தவர்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மிகப் பழமையான, நூறு ஆண்டுகளை கடந்துவிட்ட ஒரு வீட்டையும், கடையையும், கோயிலையும், கல்லையும் பாரம்பரிய சின்னமாக பிரகடனப்படுத்தும் அரசாங்கம், மக்களின் உயிரைக் காப்பாற்ற உணவு கொடுத்த ஒரு கிராமத்தை, இது தனிப்பட்டவர்களின் நிலம் என பிரகடனம் செய்துள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில், பினாங்கு பெரிய மருத்துவமனைக்குப் பால் பற்றாக்குறை ஏற்பட்டது. பிறந்த சிசுக்களுக்கும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் கொடுப்பதற்குப் பால் இல்லை.

என்ன செய்வதென்று அறியாது தத்தளித்த நிர்வாகத்தினர், புவா பலா கிராமத்துக்கு ஓடினர்.

அங்கே அப்பொழுது பசு மாடுகளை வளர்த்த தமிழர்களின் உதவியை கேட்டனர். மருத்துவமனைக்கு பால் வழங்க முடியுமா என்று கேட்டனர்.

நல்ல இதயம் படைத்த புவா பாலா மக்கள் தினந்தோறும் 300 லிட்டர் பசும்பாலை மருத்துவமனைக்கு வழங்க சம்மதித்தனர். பல உயிர்களை வாழ வைத்த தெய்வங்களாகப் புவா பாலா மக்கள் திகழ்ந்தனர்.

அதோடு மட்டுமல்லாது பினாங்கு தீவில் ஒரு முறை குடிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.


புவா பாலா கிராமத்தில் மிகப் பழமையான கிணறு ஒன்று இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அந்தக் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் வழங்கப்பட்டது. தாகம் தீர்க்க குடிநீர் வழங்கிய புவா பாலா கிராமம் இன்று இல்லை.

மேம்பாடு என்ற பெயரில் இரண்டு முக்கியமான சரித்திர புகழ்பெற்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டுவிட்டன.

200 ஆண்டுகள் புவா பாலா கிராமத்தின் பாரம்பரியத்தை ஒற்றுமையாகக் கட்டிக் காத்து காப்பாற்றிய இந்தியர்கள் இன்று வெவ்வேறு மூலைகளில் வாழ விரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இதே கிராமத்தைக் கொடுத்து விடுங்கள் என ஓட்டுப்போட்ட மக்கள், இன்று வீட்டுக்காக அலைகின்றார்கள்.

பாராட்டி வழங்க வேண்டிய இழப்பீடுகளுக்காக, போராடிப் பெற வேண்டியவர்களாக புவா பாலா மக்கள் பல இன்னல்களுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு அமைதியான, மகிழ்ச்சியான ஒற்றுமையுடைய சூழ்நிலை கொண்ட கிராமம் எங்கே கிடைக்கப்போகின்றது? இது பல முதியவர்களின் ஆசை. நிறைவேறுமா?

ஒரு வாரத்திற்கு முன்பு, புவா பாலா கிராமத்தில் சுபாஷினி என்ற குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. அக்குடும்பத்தின் 6வது தலைமுறை அக்குழந்தை. இக்கிராமத்தில் பிறந்த கடைசிக் குழந்தையும் இதுதான்.

இனி சுபாஷினிக்கு விவரம் தெரியும்போது, தான் பிறந்த புவா பாலா கிராமம் எங்கே என தன் பெற்றோர்களைக் கேட்டால், அவர்கள் அங்கே அமரவிருக்கும் சொகுசான அடுக்குமாடி வீடுகளைத்தான் காட்ட வேண்டும்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
012-537 4899

Bookmark and Share

No comments:

Post a Comment