Sunday, March 29, 2009

கடந்த வியாழக்கிழமை இரவு ஆஸ்ட்ரோ சன் தொலைக்காட்சியில் இரவு 9.30க்கு ஒளியேறிய அரசி தொடர் நாடகத்தில் காட்டப்பட்ட “ஜட்டி” காட்சி பலரது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வருவதாக வரும் பாத்திரத்தில் நடிக்கும் ஒருவரை காட்டுகின்ற காட்சியில் அந்த ஆடவர் நடந்து வருகின்றார். அந்தக் காட்சியில் அவர் அணிந்திருக்கின்ற கால்சட்டையை கேமிரா காட்டுகின்றது. அப்பொழுது அந்த ஆடவர் அணிந்திருக்கின்ற ஜட்டியையே நீண்ட நேரம் காட்டுகின்றார்கள்.

இந்தக் காட்சி பலரது கோபத்துக்கு ஆளாகியிருக்கின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
பலர் பி.ப.சங்கத்திடம் தொடர்புகொண்டு தங்களது மனக்குமுறலை ஆத்திரத்துடன் தெரியப்படுத்தினர் என்று சுப்பாராவ் கூறினார்.

குடும்ப தொடர் நாடகம் என்று விளம்பரப்படுத்தி, இது போன்ற அருவறுக்கத்தக்க காட்சிகளை படமாக்கியுள்ள ராதிகா சரத்குமார் அம்மையார் தமிழ் பண்பாட்டையும் விற்கத் தொடங்கிவிட்டாரா என்று சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.

ஜட்டியைக் காட்டிக்கொண்டு நடிப்பதும் சுற்றித்திரிவதும் இப்பொழுது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. ஆனால் அதனை ஒரு குடும்ப நாடகத்தில் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்று சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் இது சர்வசாதாரணமான கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் மலேசிய தொலைக்காட்சியில் இந்த “ஜட்டி” காட்சியைத் தணிக்கை செய்யாமல் ஆஸ்ட்ரோ எவ்வாறு ஒளி பரப்பியது என்றும் பி.ப.சங்கம் கேள்வி எழுப்பியது.

ஏற்கெனவே வன்முறையை வளர்த்துவிட்ட சின்னத்திரைகளும் பெரிய திரைகளும் இப்பொழுது ஆபாசத்தையும் மேற்கத்திய அழகிய கலாச்சாரத்தையும் நமது தமிழ் தொடர் நாடகங்களில் வழிபுகுத்தி, இளைய சமுதாயத்தினரின் சிந்தனையை சீர்குலைத்துவிடுகின்றனர்.

“ஜட்டி” காட்சியைக் காட்டியது சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால் அதனுள் இருக்கின்ற மறைமுக தாக்கம் பின்னால் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராதிகா சரத்குமார் அம்மையாரோ அல்லது ஆஸ்ட்ரோ நிறுவனமோ மறந்துவிடக்கூடாது என அவர் கூறினார்.
இது தொடர்பாக பி.ப.சங்கம் உள்துறை அமைச்சிடம் புகார் செய்யும் எனவும் என்.வி.சுப்பாராவ் கூறினார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

No comments:

Post a Comment