Thursday, March 26, 2009

தெலுங்கு வருடப்பிறப்பு (27.3.09) சிறப்புக் கட்டுரை


உகாதி சுபகாஞ்சுலு, இந்த இன்பகரமான சொல்இ மலேசியாவில் வாழ்கின்ற சுமார் 3 லட்சம் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தெலுங்கர்களின் உள்ளத்திலிருந்து ஒலிக்கவிருக்கின்றது.

இந்திய கணிதமேதையான பாஸ்கரசார்யா அவர்களின் கணக்குப்படி, உகாதி தினத்தன்றுதான் அந்த வருடத்தின் முதல் நாள், மாதம் தொடங்குவதாக கூறுகிறார். தாவரங்கள் துளிர் விடுவதும், செடிகள் பூத்துக் குழுங்குவதும், கனி மரங்கள் காய்ப்பதும் இப்படி புது உயிர்களின் தொடக்கத்தை உகாதியின் போது பார்க்க முடிகிறது.

உகாதி காலக்கட்டத்தில் மா காய்த்துக் குலுங்கி தனது இன்பமான மணத்தை பரப்பி நிற்கும். வேப்பமரங்களும் இக்கலாக்கட்டத்தில் பூத்து சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை ஆரோக்கியமாக மாற்றும் பணியைச் செய்கிறது.

புத்தாண்டு அன்று புதிய உடைகள் அணிந்து கோயிலுக்குச் சென்று, ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஒரு இனத்தின் மொழி கலாச்சார, பண்பாடுகள், உணவு முறை ஆகியவை மறக்கப்படாமலிருக்க அவற்றில் முக்கிய விழாக்களும் பண்டிகைகளும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்.

மற்ற புத்தாண்டைப் போலவே வீட்டை சுத்தம் செய்வது, புதிய ஆடை வாங்குவது போன்றவை உகாதி புத்தாண்டுகளுக்கு முன்பதாக செய்யப்படும்.

உகாதி புத்தாண்டு தினத்தன்று விடியற்காலையில் எழுந்து தலைக்குகுளியல் முடிந்த பிறகு, அசல் மா இலையை வீட்டின் வாசலில் கட்டி தொங்கவிடுவார்கள். ஆனால் இப்பொழுது கடைகளில் விற்கப்படுகின்ற பிளாஸ்டிக் மா இலைகள்தான் பலரது வீடுகளில் நம்மை வரவேற்கின்றன.

அதன் பிறகு கோமியத்தை வீட்டின் முன் வாசலில் தெளித்தபிறகு அருமையான வடிவத்தில் கோலமிடுவார்கள். அந்த கோலமும் சொந்தமாக வரைந்தததாக இருக்க வேண்டும்.

அதன் பிறகுதான் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். தங்களின் ஆரோக்கியம், தொழில், வருவாய், குடும்ப மேம்பாடு ஆகியவை சிறப்பானதாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.

பெரும்பாலானவர்கள் உகாதி தினத்தன்று புதிய தொழிலைத் தொடங்குவார்கள். உகாதி தினம் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தருகின்ற தினமாக கொண்டாடப்படுகிறது.

உகாதி பச்சடி

உகாதி புத்தாண்டு அன்று பரிமாறப்படும் உணவின் பல அம்சங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது உகாதி பச்சடியாகும். உகாதிப் பச்சடியை சுவைத்துச் சாப்பிட வேண்டும் எல்பதற்காகவே பலர், ஆந்திரர்களின் வீடுகளுக்கு போவார்களாம்.

குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர அமர்ந்து பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படும் உகாதி பச்சடியை உண்டு மகிழ்வார்கள். உகாதி பச்சடி செய்யும் முறையைப் பார்ப்போம்:

தேவையான பொருட்கள்
புளி கரைசல் - 250 மிலி
வேப்பம் பூ - 5 கிராம்
மாங்காய் - 50 கிராம்
தேங்காய் துண்டுகள் - 50 கிராம்
கரும்பு - 100 கிராம்
திராட்சை - 10-12
வாழைப்பழம் - பாதி
உப்பு சுவைகேற்ப
மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை
வெல்லம் - 250 கிராம்

செய்முறை: புளியை வெந்நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். மாங்காய்இ தேங்காய், கரும்பு, திராட்சை, வாழைப்பழும் அனைத்தையும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெல்லத்தை புளிநீரோடு கரைத்துக் கொண்டு, மிளகாய்த்தூளையும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொண்டு, வெட்டி வைத்திருக்கும் அனைத்தும் பொருட்களையும், வேப்பம்பூ உட்பட ஒன்றாக சேர்ந்து கலந்து பரிமாறவும்.

உகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கும், தோல் பிரச்னை உடையவர்களுக்கும் நன்மை பயக்கும். வெல்லம் இரத்த விருத்தியை ஏற்படுத்தும். மாங்காய் மற்றும் புளி ஆந்திரகாரர்களின் அனைத்து சமையலிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும்.

வாழ்க்கை என்பது எப்பொழுதும் இன்பகரமாக இருப்பதில்லை. அது சோகம், மகிழ்ச்சி, வெற்றி, ஏமாற்றம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. அனைத்து அனுபவங்களையும் ஒரே மாதிரியாக ஏற்று வாழ்க்கையை எதிர்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும் என்பதை உகதி பச்சடியில் உள்ள மூன்று சுவைகளும் குறிக்கின்றன.

ஆந்திர மாநிலத்தில் புளியோரா அல்லது “போப்பட்லு” போன்றவையும் தயார் செய்யப்படும் இதனையும் மாம்பழத்தில்தான் செய்ய முடியும்.

கவி சம்மேளனம்

மலேசியாவில் உகாதி தினத்தின் மாலை வேளையில் பலர் ஆலயங்களுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களோடும், நண்பர்களோடும் பேசி மகிழ்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வார்கள். ஆனால், ஆந்திர மாநிலத்தில் மாலை வேளைகளில் கவி சம்மேளனம் என்று ஒரு சிறப்பு அங்கமே நடைபெறுகின்றது.

பல துறைகளைச் சேர்ந்த கவிஞர்கள், அரசியல், கலை, கலாச்சாரம், நகைச்சுவை, மொழி என பல தலைப்புக்களில் மிக அருமையாக பல விஷயங்களை எடுத்துரைப்பார்களாம். இந்நிகழ்ச்சி நேரிடையாக வானொலி மற்றும் தொலைக்காட்சி வழி காட்டப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை காண்பதற்காகவே பலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்களாம்.

ஆக உகாதி புத்தாண்டு பல வகையான சிறப்பு அமசங்களை தாங்கி வருகின்ற ஒரு பண்டிகையாகத் திகழுகின்றது. தெலுங்கர்களின் எண்ணத்திலும் சிந்தனையிலும் மட்டுமல்லாது மலேசியாவில் வாழ்கின்ற மற்ற இனத்தவர்களின் வாழ்க்கையிலும், வாழ்க்கையை மென்மேலும் உயர வழிவகுக்கும் நாளாக அமையும் என எதிர்பார்ப்போம்.

அனைவருக்கும் உகாதி சுபகாஞ்சுலு.

என். வி. சுப்பாராவ்
பினாங்கு

No comments:

Post a Comment