Monday, July 21, 2025

பினாங்கில் இந்தியர்களுக்கான இயற்கை வேளாண்மைப் பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது.

 பத்திரிக்கைச் செய்தி : 21-07-2025

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்திய விவசாயிகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இயற்கை வேளாண்மைப் பயிற்சிப் பட்டறை, கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அன்று, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பினாங்கு, தைப்பிங் மற்றும் கெடா மாநிலங்களில் இருந்து பல்வேறு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.

இயற்கையான உரமாகப் பயன்படும் பஞ்சகாவியத் தயாரிப்பு முறைகள், அதன் நிலத்துக்கான நன்மைகள் மற்றும் பயிர் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து இப்பயிற்சியில் விரிவாக விளக்கப்பட்டது.

இரசாயனப் பொருட்களுக்கு மாற்றாக, இயற்கை முறையில் பூச்சிகளைத் தடுக்கக்கூடிய சில மூலிகை சார்ந்த தீர்வுகள், குறிப்பாக “ஐந்து இலை கரைசல்” என்ற தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்த நடைமுறைகள், கல்வி அதிகாரிகள் சரஸ்வதி தேவி மற்றும் தீபன் குணசேகரன் அவர்களால் கற்றுக் கொடுக்கப்பட்டன.

இயற்கையற்ற வேளாண்மையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் தீமைகள், நிலத்தின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், நீர் மாசுபாடு மற்றும் மனித உடல்நலத்திற்கான பாதிப்புகள் ஆகியவை பற்றி விளக்கப்பட்டது.

“மூடாக்கு” எனப்படும் நெகிழி (plastic mulch) மூலம் புல்வெளி வளர்ச்சியைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகள், நீண்ட காலத்தில் மண் சீரழிவு மற்றும் சூழலுக்கான பாதிப்புகள் குறித்து விவசாயிகள் எச்சரிக்கப்பட்டனர்.

இந்த பயிற்சி, இயற்கையை நேசிக்கும் மற்றும் நிலம் சார்ந்த வாழ்வியலைக் காக்க விரும்பும் விவசாயிகளுக்கான புதிய பயணம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. பசுமை வேளாண்மையின் முக்கியத்துவம் மீண்டும் வலியுறுத்தப்பட்டு, இயற்கை வழியில் நமது நிலங்களைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததிக்குச் சீரான சூழலை வழங்கும் நோக்கத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

இத்தகைய பயிற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதையும், ஆர்வமுள்ளவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

 

No comments:

Post a Comment