Monday, June 30, 2025

உடலை இயற்கையாகக் குளுமைப்படுத்தும் அருமையான வழிகள் பினாங்கு சுய மெய்யவறிகத்தின் தன்னார்வலர்களுக்கான பட்டறை.

பத்திரிக்கைச் செய்தி : 27-06- 2025

கடந்த 22 ஜூன் 2025-இல் சமூக மேம்பாட்டுத் திட்டம் என்ற பிரிவில், பினாங்கு சுய மெய்யவறிகத்தின் தன்னார்வலர்களுக்கு இயற்கையாக உடலைக் குளுமைப்படுத்துவது எப்படி என்ற ஒரு விழிப்புணர்வுப் பட்டறை நடத்தப்பட்டது. “உடல் குளுமைக்கு உணவும் பானமும்” என்ற தலைப்பில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியிட்ட கையேட்டில் உள்ள இயற்கையாக உடலைக் குளிர்விக்கும் பானங்கள், இந்தப் பட்டறையில் தன்னார்வலர்களுக்குச் செய்து காண்பிக்கப்பட்டன.

உலர்ந்த மற்றும் பசுமையான காக்கட்டான், செம்பருத்திப் பூவில் தயாரிக்கப்பட்ட இரு வகையான பானங்கள் தயாரிப்பு முறையை கலந்துகொண்டவர்கள் கற்றுக்கொண்டனர். இந்தப் பூக்களைக் கொதி நீரில் ஊற வைத்து ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கப்பட்டன. பானத்திற்குச் சுவையூட்ட பனங்கல்கண்டு சேர்க்கப்பட்டது.  பானத் தயாரிப்புக்கு பூக்களின் மகரந்தங்களை எவ்வாறு நீக்குவது என்பதும் செய்து காண்பிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு நன்னாரி, வெட்டி வேர் ஆகியவற்றில் எப்படிப் பானம் தயாரிப்பது என்பதையும் தன்னார்வலர்கள் கற்றுக்கொண்டனர். வேர்களில் ஓட்டிக்கொண்டிருக்கும் மண்ணைச் சுத்தம் செய்வதிலிருந்து, வேர்களைக் கொதிநீரில் ஊற வைப்பது, கொதிக்க வைத்து பானம் தயாரிப்பது என்று வெவ்வேறு முறைகளில் செய்து காண்பிக்கப்பட்டன.  இந்தப் பானங்களின் சுவையைத் தூக்கிக் கொடுக்க இவற்றில் எலுமிச்சை சேர்த்தும் தயாரிக்கலாம். வெட்டிவேர், நன்னாரி இரண்டையும் ஒன்றாகக் சேர்த்துக் கொதிக்க வைத்தும் பானம் தயாரிக்கலாம்.  வேர்களைக் கொதிக்க வைத்த  நீரில் ஆக்கரக்காய்  தயாரிக்கவும் முடியும்.

நன்னாரி, வெட்டிவேர்களை நாம் குளிக்கும் நீரில் போட்டு ஊற வைத்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியாகிப் புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால், ஆஸ்துமா மற்றும் இதர குளிர்ச்சி சம்பந்தமான உடல் உபாதைகள் இருப்பவர்கள் இவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனையோருக்கு கடுமையான வெயில் காலங்களில் உடலைக் குளிர்ச்சிப்படுத்த இது ஓர் அருமையான வழியாகும். பயன்படுத்திய வெட்டிவேரை மறுபடியும் காயவைத்து ஓரிரு முறை பயன்படுத்துவதன் மூலம் இதற்கென ஆகும் செலவுகளை நாம் குறைக்கவும் முடியும்.

இந்தப் பூக்கள், வேர்களின் மருத்துவ குணங்களும் தன்னார்வலர்களோடு கலந்துரையாடப்பட்டன. உதாரணத்திற்கு, காக்கட்டான் நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு அறிவுத் திறனை மேம்படுத்துகிறது. செம்பருத்தியில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதோடு இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  வெட்டிவேர், நன்னாரி இரண்டுமே இரத்தத்தைச் சுத்தம்  செய்கின்றன.  சிறிய வெட்டிவேர்களை உடலைத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்த முடியும்.

கலந்துரையாடலின்பொழுது தன்னார்வலர்கள் குறிப்பிட்ட வேர்களை எங்கு வாங்குவது, எவ்வளவு பயன்படுத்துவுது, பூக்களைக் காய வைக்கும் முறை ஆகியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்டறிந்தனர். பூக்கள் நிழலில் உலர்த்தப்பட்டு காற்றுப்புகாத புட்டியில் அடைக்கப்பட வேண்டும்  என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியிட்ட “உடல் குளுமைக்கு உணவும் பானமும்” என்ற கையேடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தத் புத்தகத்தில் குறிப்பிட்ட உணவுகளின் குளுமைத்தன்மையும் அவற்றிலுள்ள சத்துகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சரியான உணவைத் தேர்வு செய்து உட்கொள்வது உடலைக் குளுமைப்படுத்த பெரிதும் துணை புரியும். இதற்கு இந்தக் கையேடு அவர்களுக்கு வழிகாட்டும் என்பதும் நம் முன்னோர்கள் இதனை வழிவழியாகக் கடைபிடித்து பயனடைந்துள்ளனர் என்பதையும் கலந்துகொண்டோர் தெரிந்துகொண்டனர்.

இயற்கையாக உடலைக் குளுமைப்படுத்தும் முறைகளை நம் வாழ்வில் ஓர் அங்கமாக்கிக்கொள்வதன் மூலம் நம் ஆரோக்கியம் மேம்படுவதோடு நிலைபேறான சுற்றுச்சூழலையும் நாம் உருவாக்க முடியும். உடலைக் குளுமைப்படுத்த அளவுக்கு அதிகமாகக் குளிரூட்டியை நம்பி இருப்பது நம் ஆரோக்கியத்தை சிதைக்கும் அதே வேளையில் புவி வெப்பத்தையும் அதிகரிக்கிறது. ஆகையால் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இந்தப் பாரம்பரியத்தை தொடர்வது முக்கியமாகும்.

இந்தப் பட்டறையின் இறுதியில், தாங்கள் கற்றுக்கொண்டவற்றை அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்போவதாகவும் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடும் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும் தன்னார்வலர்கள் உறுதி அளித்தனர்.

 

 

No comments:

Post a Comment