நெளிந்து கொண்டு பார்க்கப் பலவீனமாக இருக்கும் மண்புழுக்களைக் காணும் பெரும்பாலான மனிதர்களும் நெளிவார்கள்; அல்லது அலறுவார்கள். ஆனால் அதன் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து பயப்பட வேண்டாம்.
மண்ணின் வளத்தை பெருக்கும் அதி அற்புத ஆற்றல் படைத்தவை மண்புழுக்கள். மண் தழைத்தால் மற்ற உயிரினங்களும் தழைக்கும். மனித இனமும் தழைக்கும். மண்புழுக்கள் காய்ந்த இலைகளையும் மக்கிய
பொருட்களையும் உண்டு பிறகு வெளியாக்கும் கழிவுகளால் (எரு) மண்ணை காலங்காலமாக வளமாக்கி வருகின்றன. இந்த எருவை பயிர்கள் ஈர்த்துக் கொண்டு செழிப்பாக வளர்கின்றன. அந்தப் பயிரை மனிதர்கள் உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர்.
மண்புழுக்கள் தன்னுடைய உடல் எடையைவிட 3லிருந்து 5 மடங்கு அதிகமான மக்குபொருட்களை ஒவ்வொரு நாளும் உண்ணும். மற்ற எல்லா உரங்களையும் விட மண்புழு எரு அதிக சத்துக்களை உடையது. மண்புழுவின் உடலிலிருந்து வெளிப்படும் கொழகொழப்பான திரவத்தில் நைட்ரோஜன் உள்ளது. இது தாவரங்களுக்குத் தேவையான சத்துப்பொருள் ஆகும்.
மண்புழு மண்ணைக் குடைந்து செல்லும்பொழுது மேல் மண்ணையும் கீழ் மண்ணையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறது. இதனால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. இதுவே பிறகு செடிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
டாக்டர் சுல்தான் இஸ்மாயில் அனைத்துலக மண்புழு நிபுணர் ஆவார். உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநராகவும் இருக்கும் இவர் மண்புழு தொழில்நுட்பம் (vermitech) மண்புழு என்ற வார்த்தையை தன்னுடைய ஆராய்ச்சிகளின் மூலம் முதலில் புனைந்தவரும் ஆவார். "மண்புழு மண்ணின் உயிர்நாடி ஆகும். ஆகையால் மண்ணில் அதிகமான மண்புழு இருக்கும்பொழுது மண் ஆரோக்கியமாக இருக்கும்," என்கிறார் டாக்டர் சுல்தான் இஸ்மாயில்.மண்புழு தொடர்பாக அவர் பகிர்ந்துகொண்ட விபரங்கள் வருமாறு:-
நம் தோட்டத்திலும் மற்றும் தொட்டிகளில் உள்ள பயிர்களிலும் எந்த மாதிரியான மண்புழுக்கள் இருக்க வேண்டும்?
அவரவர் வாழ்கின்ற இடத்தில் உள்ள மண்புழுவையே தோட்டத்தில் பெருக்க வேண்டும். அவை தோட்டத்தில் நன்கு குடைந்து செல்லும். அந்தந்த மண்ணின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அவை இருப்பதால் அவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் நன்றாக இருக்கும். மேல்மட்டப் புழுவான பீரியனிக்ஸ் எக்ஸ்கெவட்டஸ் (Perionyx excavatus) மற்றும் இடைமட்டப் புழுவான லம்பிட்டோ மவுரிட்டி (Lampito mauritti) வகை மண்புழுக்கள் ஏற்றவை.
மண்புழுக்கள் எங்கு கிடைக்கும்?
உங்கள் தோட்டத்திலேயே மண்புழுக்களைத் தேடிப் பார்க்கலாம். பாதி காய்ந்த நிலையில் உள்ள மாட்டுச்சாணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் புழுவின் முட்டைகள் இருக்கக்கூடும். மாட்டுச்சாணம் முற்றிலும் காய்ந்ததாகவோ அல்லது முற்றிலும் ஈரமாகவோ இருக்கக்கூடாது.
மண்புழு வளர்க்க மண்ணைப் பண்படுத்துவது எப்படி?
மரத்திலிருந்து கொட்டும் காய்ந்த இலைகளை சருகுகளை அப்புறப்படுத்தக்கூடாது. இந்த காய்ந்த இலைகள், சருகுகள் மூடாக்கு போன்று செயல்பட்டு மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. இங்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வளரும். இதுவே மண்புழுவை ஈர்க்கும். மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க வேண்டும். ஆனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக வறட்சியாக இருந்தால் தண்ணீர் தெளித்துவிடலாம். உள்நாட்டு மரங்கள் மண்புழுக்களை ஈர்க்கும். ஆகையால் அந்நிய மரங்களை விட உள்ளூர் மரங்களை வளருங்கள். மண்ணில் இருக்கும் கட்டுப்மானப்பணி கற்கள், குப்பைகளை அகற்றிவிடுங்கள். பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்காதீர்கள். அவை மண்புழுக்களைக் கொன்றுவிடும்.
மண்புழுக்களுக்கு மண்ணில் கொடுக்க வேண்டிய உணவுகள் என்ன?இயற்கையாகவே காய்ந்து விழும் இலைக் குப்பைகள் மண்புழுவுக்கு நல்ல உணவு. அவ்வப்பொழுது பாதி மக்கிய சமையலறைக் கழிவுகளை மண்ணில் கலந்துவிடலாம். இது மண்புழுக்களின் உற்பத்தியைப் பெருக்கும்.
மண்புழுக்கள் ஏதாவது நோய்களை பரவச் செய்யுமா?
மண்புழுக்கள் தாவரங்களுக்கு எந்த வித நோயையும் ஏற்படுத்துவதில்லை. மனிதர்களுக்கு அதனால் எந்த வித தீங்கும் விளையாது. உண்மையில் மண்புழு சித்தவைத்தியத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
சாடி அல்லது தொட்டில்களில் மண்புழுவை விடலாமா?
தாராளமாக விடலாம். ஆனால் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் பொழுது அவற்றை பொறுக்கி எடுத்து வேறு இடத்தில் விட வேண்டும். செத்துப்போன மண்புழுக்களை வெளியே எடுத்துப் போடத்தேவையில்லை. அவை மண்ணிலேயே மக்கி எருவாகிவிடும். நிலத்திலிருந்தும் நம்முடைய பயிர்த் தொட்டிகளிலிருந்தும் மண்புழுக்கள் ஊர்ந்து நம் வீடுகளுக்கு வந்துவிடுமா? மண்புழுக்கள் அவற்றுக்கான மக்குபொருள் உள்ள, ஈரப்பதம் உள்ள மண்ணிலேயே இருக்கும். ஆகையால் நம் வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
மண்புழு உடலில் துண்டிக்கப் பட்ட பாகங்கள் மறுபடியும் வளர்ந்து விடும். மண்புழுவின் ஒரே உடலில் இரு பாலின உறுப்புக்களும் இருக்கும். மண்புழுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யச் செய்ய அவை முடிவடையாது. சார்ல்ஸ் டார்வின் சுமார் 44 வருடங்களாக மண்புழுக்களை ஆராய்ந்து புத்தகம் எழுதினார். (‘The Formation of Vegetable Mould Through the Action of Worms, with Observations on Their Habits). இந்தப் புத்தகம் இன்றளவும் அதிக அளவு விற்பனையாகிறது.
No comments:
Post a Comment