Thursday, July 1, 2010

பெண்கள் அதிகமாகப் புகைக்கத் தொடங்கியுள்ளனர் இது ஆபத்தானது என்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்


உலகத்தில் இருக்கின்ற ஒரு பில்லியன் புகைப்பாளர்களில் 20 விழுக்காட்டினர் பெண்கள் என்பது அதிர்ச்சியைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

அதிக அளவு ஆண்கள் புகை பிடித்தாலும் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவு புகைப்பதாக ஆண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வு காட்டுவதாக அவர் கூறினார். 151 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாதி நாடுகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் புகைப்பது தெரிய வந்திருக்கின்றது.

புகைப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் மரணமடைகின்றனர். இவர்களில் 15 லட்சம் பேர் பெண்கள் என்றும் திரு இத்ரிஸ் கூறினார்.

2030 ஆண்டு இறுதிக்குள் புகைப்பதால் இறப்பவரின் எண்ணிக்கை 80 லட்சமாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அளவுக்கு அதிகமாக காட்டப்படும் விளம்பரங்களினால் பெண்கள் புகைக்கும் பழக்கத்திற்கு உள்ளாகின்றனர் என்றார் அவர். புகைப்பதால் “உல்லாசம் உற்சாகம் ஏற்படுகிறது”, “மனம் இலேசாகிறது”, “உடல் இளைக்கின்றது”, “எனது நண்பர்கள் புகைக்கின்றார்கள்”, “நான் கோபமாக இருக்கும்பொழுது புகைப்பது என் கோபத்தைத் தணிக்க உதவுகிறது” என்று புகைக்கும் பெண்கள் தாங்கள் புகைப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை என்று இத்ரிஸ் கூறினார். புகைப்பதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதை இத்ரிஸ் சுட்டிக்காட்டினார்.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி திரு இத்ரிஸ் பெண்கள் புகைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

புகைப்பது என்பது கவர்ச்சியோ அல்லது உல்லாசமான ஒரு செயலோ கிடையாது. அது ஒரு அருவருக்கத்தக்க, அபாயகரமான, அநாகரீகமாக செயல் என்று இத்ரிஸ் கூறினார்.

18லிருந்து 29 வயதிற்கு உட்பட்ட பெண்களே அதிகம் புகைக்கத் தொடங்குவதாகவும் ஆய்வு தெரிவித்திருப்பதால் இவ்வயதுக்கு உட்பட்ட பெண்களின் பழக்க வழக்கத்தை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உலக ரீதியில் சராசரி 430,000 மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டம் தரப்பு புகை காரணமாக ஏற்படுகின்றது. இதில் 64% பெண்கள் என்பதையும் இத்ரிஸ் சுட்டிக்காட்டினார்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் அவர்களுடைய கருவில் வளரும் சிசுக்கள் இந்த இரண்டாம் நிலையின் புகையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் கருப்பொருள் பெண்களையொட்டி இருந்தாலும் புகையிலை நிறுவனங்கள் கொண்டு வருகின்ற விளம்பரங்களுக்கு எதிராக ஆண்களும் பெரியவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இப்போதைய புகையிலை விளம்பரங்கள் சிறார்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன. புகைப்பது உத்வேகத்தையும் தெம்பையும் தருவதாகக் கோரி விளம்பரங்கள் புகைப்பவரிடையே ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகின்றன.

ஒரு சிகரெட்டில் 4000 இரசாயனங்கள் இருக்கின்றன. அவற்றில் 50க்கும் மேற்பட்டவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை புகை பிடிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment